search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தொண்டியில் 161 ஆண்டுகளாக காமன் எரியூட்டும் தத்ரூப நிகழ்ச்சி
    X

    தொண்டியில் 161 ஆண்டுகளாக காமன் எரியூட்டும் தத்ரூப நிகழ்ச்சி

    • சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.
    • பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    தொண்டி:

    உலக நன்மைக்காக கைலாயத்தில் சிவபெருமான் கடும் தவம் இருந்தார். தேவலோகத்தில் தலைவனாக இருப்பவருக்கும், தேவர்களுக்கும் இந்த தவத்தால் நன்மை கிட்டாமல் போகலாம் என்று எண்ணிய இந்திரன் முதலானோர் சிவனின் தவத்தை கலைக்க வேண்டும் என்று பலரையும் நாடினர். ஆனால் சிவனின் கோபத்திற்கு பயந்து யாரும் முன்வரவில்லை.

    இந்நிலையில் மன்மதனின் உதவியை நாடிய தேவர்கள், அவரது மனதை மாற்றி சிவனுக்குள் புகுந்து காம எண்ணத்தை தூண்டினால் தவம் கலைந்து விடும் என கூறினர். அதற்கு சம்மதித்த மன்மதனும் சிவனுக்கு அருகில் சென்று காம பானத்தை தொடுத்தான். தவத்தில் இருந்த சிவன் கோபமுற்று நெற்றிக் கண்ணைத் திறந்து மன்மதனை எரித்தார்.

    இதனை அறிந்த மன்மதனின் மனைவியான ரதி தேவி சிவபெருமானிடம், தேவேந்திரனின் தூண்டுதலாலேயே மன்மதன் தங்களது தவத்தில் இடையூறு செய்தார். அவர் மீது எந்த தவறும் இல்லை. இந்த செயலால் நான் கணவனை இழந்து வாழ வேண்டுமா? என்று அழுது புலம்பி முறையிட்டாள். ரதிதேவியின் வேண்டுதலை ஏற்ற சிவபெருமான், அவரிடம் உன் கண்ணுக்கு மட்டுமே மன்மதன் தெரிவார் என்று கூறி மன்மதனின் உயிரை மீட்டு சாப நிவர்த்தி செய்தார்.

    இந்த புராண சம்ப வத்தை நினைவு கூறும் வகையில் சுமார் 160 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டியில் உள்ள வெள்ளாளர் தெரு சொசைட்டியினரால் மாசி, பங்குனி மாதங்களில் காமன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டும் காமன் பண்டிகையை யொட்டி காமன் மேடையில் காப்புக்கட்டுதல் நடந்தது. தினமும் மண்டகப்படி தாரர்களால் பூஜைகள் நடந்தது.

    அதனைத் தொடர்ந்து மன்மதனை எரிக்கும் நிகழ்வாக காமன் மேடையில் எரியூட்டப்பட்டு தகனம் நடந்தது. முன்னதாக பெண்கள் மாவிளக்கு வழிபாடு செய்து பக்தர்களுக்கு மாவு உருண்டையை பிரசாதமாக வழங்கினர். மேலும் குழந்தை இல்லாத தம்பதியர் வேண்டுதல் நிறைவேறிய பின் கரும்பு தொட்டிலில் குழந்தையை வைத்து காமன் மேடையைச் சுற்றி வந்து நேர்த்திக் கடனை நிறைவேற்றினர்.

    காம தகன ஏற்பாடுகளை தலைவர் பிச்சுமணி, பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர்கள் விடுதலை முரசு, பட்டாபிராமன், ராஜகோபால், ராமநாதன், ராம மூர்த்தி, நாகராஜ், ராஜாராமன் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×