search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பிரம்மா நடத்தும் உற்சவம் பிரம்மோற்சவம்
    X

    பிரம்மா நடத்தும் உற்சவம் பிரம்மோற்சவம்

    செப்டம்பர் மாதம் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியமான விழாவாக கருதப்படுகிறது.
    திருமலையில் நடக்கும் பிரம்மோற்சவம் என்பது மிகவும் பிரபலமான திருவிழா என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். சகல உயிரினங்களையும் படைப்பவர் பிரம்மா. அவரது படைப்புகளாக இருக்கும் அனைத்து உயிர்களும் நலமாகவும், வளமாகவும் வாழ, பிரம்மாவால் நடத்தப்படும் உற்சவம் பிரம்மோற்சவம் ஆகும். இந்த விழாவானது பத்து நாட்களுக்கு குறையாமல் கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரையில் நடப்பது முறை.

    தாயின் கருவறையில் இருந்து குழந்தை வெளிவருவதை பிரசவம் என்கிறோம். அதேபோல், ஆலயத்தின் கருவறையில் மூலமூர்த்தியாக எழுந்தருளியுள்ள எல்லாம் வல்ல பரம்பொருளின் இறைசக்தியை, உற்சவரின் திருமேனிக்கு எழுந்தருளச்செய்து சாமி வீதியுலா வருகிற இனிமையான வைபவம் உற்சவம் ஆகும். பொதுவாக, கோவில்களில் பன்னிரண்டு மாதங்களிலும் விழாக்கள் நடத்தப்படுகின்றன.

    சித்திரை மாத உற்சவம் ஒரு கோவிலிலும், கார்த்திகை மாத உற்சவம் மற்றொரு கோவிலிலும் என்று கொடியேற்றம் முதல் தீர்த்தவாரி வரை விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதன் முக்கிய அம்சமாக சாமி திருவீதி உலா வருவது வழக்கம். அதாவது கடவுளே பக்தர்களை நாடித்தேடி வந்து அருள்புரிவதாக ஐதீகம். விண்ணவர் போற்றும் திருமலைவாசனின் அடியார்கள் வார நாட்களில் 50 ஆயிரத்துக்கும் மேலாகவும், விடுமுறை மற்றும் விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் அருள்நிறை திருமலையாம் திருப்பதிக்கு வருகை புரிகிறார்கள்.

    வருடத்தில் உள்ள 365 நாட்களில் 425 விதவிதமான திருவிழாக்கள் மற்றும் பல்வேறு உற்சவங்கள் நடத்தப்படும் அரிய பெருமை திருமலை வேங்கடவனுக்கல்லாமல் வேறு தெய்வ மூர்த்திக்கு இருக்குமா என்பது சந்தேகமே..! இவை அனைத்துக்கும் மகுடம் சூட்டும் விதமாக, செப்டம்பர் மாதம் நடைபெறும் புரட்டாசி பிரம்மோற்சவம் மிகவும் முக்கியமான விழாவாக கருதப்படுகிறது. அந்த விழாவில் ஒரு வாரத்துக்குள் 10 முதல் 15 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிகிறார்கள்.

    சோழமன்னன் தொண்டைமான், தேவலோக சிற்பியான விஸ்வகர்மாவின் உதவியுடன் பெருமாளுக்கு கோவில் ஒன்றை எழுப்பினார். சாமியைத் தரிசிப்பதற்காக வந்த முப்பத்துமுக்கோடி தேவர்கள் கூடியிருக்கும் தருணத்தில் பெருமாளுக்கு பெரும் விழா நடத்த அனுமதி வேண்டினான் பிரம்மன். அதற்கு பரம்பொருளும் இசைந்தது. அன்றுமுதல் தொடங்கியதுதான் திருமலையின் பிரம்மோற்சவம்.
    Next Story
    ×