search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கெங்கையம்மன்).
    X
    கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடந்தபோது எடுத்த படம். (உள்படம்: பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் கெங்கையம்மன்).

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம்

    குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
    குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவில் திருவிழா கடந்த 30-ந்தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த 11-ந் தேதி அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. நேற்று கெங்கையம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவையொட்டி கோவிலில் கெங்கையம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், அதைத்தொடர்ந்து உற்சவர் கெங்கையம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வைத்து தேரோட்ட மும் நடைபெற்றது.

    தாசில்தார் நாகம்மாள், துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு உள்ளிட்டோர் தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர். வழிநெடுகிலும் பக்தர்கள் உப்பு, மிளகு ஆகியவற்றுடன் நாணயங்கள் கலந்து தேர் மீது இறைத்து தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வழிபட்டனர். மேலும் ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தேரோட்ட விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். தேரோட்டம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோவிலில் தொடங்கி தரணம்பேட்டை, நடுப்பேட்டை வழியாக சென்று மீண்டும் கோவிலை அடைந்தது.



    இன்று (திங்கட்கிழமை) கெங்கையம்மன் சிரசு திருவிழா நடைபெறுகிறது. விழாவையொட்டி அம்மன் சிரசு ஊர்வலம், கண் திறப்பு, வாணவேடிக்கை ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இவ்விழாவிற்காக இன்று வேலூர் மாவட்டத்துக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் (புதன்கிழமை) பூப்பல்லக்கு ஊர்வலம் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி குணசேகரன், ஊர் நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத் மற்றும் முன்னாள் அறங்காவலர்கள், இளைஞர் நற்பணி மன்றத்தினர், விழா குழுவினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

    தேரோட்டம் மற்றும் சிரசு திருவிழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பகலவன் மேற்பார்வையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரகாஷ்பாபு ஆகியோர் தலைமையில் 4 துணை போலீஸ் சூப்பிரண்டு, 22 இன்ஸ்பெக்டர்கள் உள்பட ஆயுதபடை போலீசார், சிறப்பு காவல்படை போலீசார், ஊர் காவல்படையினர் என மொத்தம் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் குற்றச் சம்பவங்களை தடுக்கும் வகையில் முக்கிய பகுதிகளில் 3 கண்காணிப்பு கோபுரங்களும், நகரின் பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்களும் அமைக்கப்பட்டுள்ளது. 25 போலீசார் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்கள் விலை உயர்த்த பொருட்களையும், நகைகளையும் அணிந்து வர வேண்டாம் என போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.
    Next Story
    ×