search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை முன்பு சிவன்-பார்வதி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி.
    X
    கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை முன்பு சிவன்-பார்வதி தேவிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டுள்ள காட்சி.

    பழனி பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

    அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடக்கிறது.
    அறுபடைவீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலின் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவில் நகரின் மத்தியில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் தைப்பூசம், வைகாசி விசாகம், திருவாதிரை விழா, ஆடி லட்சார்ச்சனை, நவராத்திரி விழா ஆகியவை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

    இந்த கோவிலில் கடந்த 1998-ம் ஆண்டு ஜூலை மாதம் 1-ந்தேதி கும்பாபிஷேக விழா நடைபெற்றது. 18 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.96 லட்சத்தில் கோவிலில் பல்வேறு திருப் பணிகள் நடைபெற்று கும்பாபிஷேக விழா இன்று (வெள்ளிக்கிழமை)நடக்கிறது.

    முன்னதாக கடந்த 20-ந்தேதி காலை மங்கள இசை, கணபதி பூஜை, நவகிரக ஹோமம் மற்றும் பல்வேறு பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. அடுத்த நாள் மாலை 6 மணிக்கு முதல் கால யாகபூஜையும், 22-ந்தேதி 2-ம் கால யாகசாலை பூஜையும், மாலை 5 மணிக்கு 3-ம் கால யாகசாலை பூஜையும் நடந்தது.நேற்று காலை 7.45 மணிக்கு மங்கள இசையுடன் 4-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. பின்னர் 8.30 மணிக்கு கோவில் வளாகத்தில் புதிதாக வைக்கப்பட்ட விநாயகருக்கு சிறப்பு பூஜை மற்றும் கண் திறத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.


    பெரியநாயகி அம்மன் கோவில் திருக்கல்யாண மண்டபத்தில் வைக்கப்பட்ட விநாயகருக்கு கண்திறப்பு நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.

    காலை 9 மணிக்கு பரிவார மூர்த்திகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நிகழ்ச்சி தொடங்கியது. அதையடுத்து 10.30 மணிக்கு பூர்ணாகுதி, உபசாரங்கள், வேதமந்திரங்கள் ஓதுதல், தீபாராதனை மற்றும் பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    காலை 11.45 மணிக்கு பெரியநாயகி அம்மன், சோமாஸ் கந்தர், கைலாசநாதர் ஆகிய மூலஸ்தான தெய்வங்களுக்கு மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாலை 5 மணிக்கு 5-ம் கால யாகசாலை பூஜை தொடங்கியது. அதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு லட்சுமி பூஜை, 8 மணிக்கு திரவியாகுதி, பூர்ணாகுதி, உபசாரம், வேதமந்திரங்கள் ஓதுதல், தீபாராதனை நடந்தது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி மாலை 5.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன்-கைலாசநாதர், முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை ஆகிய தெய்வங்களின் திருக்கல்யாணமும், இரவு 8 மணிக்கு பஞ்சமூர்த்திகள் நான்கு ரத வீதிகளில் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பழனி முருகன் கோவில் இணை ஆணையர் செல்வராஜ், துணை ஆணையர் மேனகா மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×