search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா 12-ந்தேதி தொடக்கம்
    X

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா 12-ந்தேதி தொடக்கம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பங்குனி திருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா பணிகள் தொடங்குவதற்காக தேர் மற்றும் தேங்காய் தொடும் முகூர்த்தம் நடந்தது.
    தமிழ் கடவுள் முருகப்பெருமான் குடி கொண்டு அருளாட்சி புரியும் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோவிலில் 12 மாதமும் திருவிழா நடைபெற்று வருகிறது. அதில் இந்த கோவிலுக்கு உகந்த திருவிழாவாக பங்குனி பெருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் பங்குனி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டிற்கான பங்குனி பெருவிழா வருகிற 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா தொடர்ந்து வருகிற 26-ந்தேதி வரை 15 நாட்கள் கோலாகலமாக நடக்க உள்ளது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 16-ந்தேதி கைப்பாரமும், 20-ந்தேதி பங்குனி உத்திரமும், 21-ந்தேதி சூரசம்ஹார லீலையும், 22-ந்தேதி பட்டாபிஷேகமும், 23-ந்தேதி திருக்கல்யாணமும், 24-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது.

    இந்த திருவிழாவிற்கான பணிகள் தொடங்குவதற்காக நேற்று தேங்காய் மற்றும் தேர் தொடும் முகூர்த்தம் நடைபெற்றது. முன்னதாக கோவிலின் கருவறையில் திருவிழாவிற்கு உரிய மஞ்சள் நிற அழைப்பிதழை முருகப்பெருமானின் பாதத்தில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து கோவிலில் இருந்து தேங்காய், பூ, பழங்களுடன் திருவிழாவிற்கு உரிய அழைப்பிதழுடன் மேளதாளங்கள் முழங்க கோவில் அலுவலத்திற்கு சிவாச்சாரியார்கள் கொண்டு சென்றனர்.

    பின்னர் அங்கு திருவிழா பணிகள் குறித்து பேசப்பட்டது. மேலும் திருவிழாவிற்காக விசேஷ அலங்கார பந்தல் அமைப்பது தொடர்பாக தேங்காய் தொடும் முகூர்த்தமும், கோவில் வாசல் முன்பு கம்பீரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ள பெரிய தேர் வலம் வருவதற்காக தேரை தயார்படுத்துவதற்காக தேர் தொடும் முகூர்த்தமும் நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் ஸ்தானிக பட்டர்கள் சாமி நாதன், ராஜா என்ற சந்திரசேகர், சொக்கு சுப்பிரமணியம், சண்முகசுந்தரம், ரமேஷ், செல்லப்பா, கோவில் துணை கமிஷனரின் நேர்முக உதவியாளர் மணிமாறன், அலுவலக சூப் பிரண்டு (பொறுப்பு) கோகுல கண்ணன், உதவி செயற்பொறியாளர் சிவமுருகானந்தம், பேஷ்கார் நெடுஞ்செழியன், மணியம் புகழேந்தி மற்றும் கோவில் பணியாளர்கள் கலந்துகொண்டனர்.
    Next Story
    ×