search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கோரக்கர் சித்தர்
    X
    கோரக்கர் சித்தர்

    கோரக்கர் சித்தர் தன்னை வெளிப்படுத்தி கொண்டது எப்படி?

    கோரக்கர் சித்தர் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் தான் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது.
    கோரக்கர் சித்தர் 10-ம் நூற்றாண்டுக்கு முன்பு வாழ்ந்தவர். தமிழ்நாடு முழுக்க பல இடங்களில் அவர் தவம் இருந்து இருந்தார். தியானம் செய்தார். அந்த இடங்கள் எல்லாம் தற்போது அவரது பெயரில் வழிபாட்டு தலங்களாக மாறி உள்ளன. என்றாலும், நாகை அருகே உள்ள வடக்கு பொய்கைநல்லூர் என்ற ஊரில் தான் அவரது ஜீவசமாதி ஆலயம் அமைந்துள்ளது. போகர் தனது நூலில் இந்த தகவலை மிக துல்லியமாக எழுதி வைத்துள்ளார்.

    போகர் தானே முன்னின்று கோரக்கரை ஜீவ சமாதி செய்ததாக வரலாறு சொல்கிறது. ஆனால் அந்த ஜீவ சமாதி இடம் நாளடைவில் மக்களால் மறக்கப்பட்டு மறைந்து போனது. சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்பு கோரக்கர் வடக்குபொய்கை நல்லூரில் தான் அடங்கி இருக்கும் இடத்தை ஒரு திருவிளையாடல் நடத்தி வெளிப்படுத்தினார்.

    வடக்கு பொய்கை நல்லூரில் சுமார் 400 ஆண்டுகளுக்கு முன்னர் சிவநெறி வழுவாது, கடல் கடந்து கீழை நாடுகளுக்கு சென்று பெருவணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார் ஒருவர் வாழ்ந்து வந்தார். தம் குலத்தில் உதித்த கற்பில் சிறந்த பெண் ஒருத்தியை மணந்து இல்லறமாகிய நல்லறத்தை நடத்தி வந்த இந்த வணிகர் இவ்வூர் கடற்கரையில் வணிக நிலையம் ஒன்று அமைத்துக்கொண்டு கடல் வணிகத்தை சிறப்பாக நிகழ்த்தி வந்தார்.

    சொந்தத்தில் இவருக்கு பாய்மரக் கப்பல்கள் பல இருந்தன. இவ்வணிகரின் துணைவியார் நாள்தோறும் உணவு சமைத்து பாத்திரத்தில் தாமே எடுத்துக்கொண்டு போய் கடற்கரை அலுவலகத்தில் தம் கணவருக்கு அன்போடு உணவு படைத்து வரும் வழக்கத்தை மேற்கொண்டிருந்தார். ஒருநாள் அம்மையார் தம் கணவருக்கு உணவு கொண்டு செல்லும்போது சிவனடியார் ஒருவர் எதிர்பட்டார்.

    உடல்தளர்ந்து வாடிய முகத்தோடு எதிர்பட்ட அடியார் இந்த அம்மையாரை நோக்கி தம் பசி தீர உனவிடுமாறு வேண்டி நின்றார். மனமிரங்கிய அம்மையாரும் சிறிதும் தாமதியாது அடியார் பசித்துயர் தீர்ப்பதே பேரறம் என்ற நினைவோடு கொண்டு வந்த இலையை அவ்விடத்திலேயே விரித்து தம் கணவருக்கு கொண்டு சென்ற உணவை சிவனடியாருக்கு படைத்தார்.

    பசித்துயர் தீர்ந்த அடியார் அவ்வம்மையாருக்கு ஆசிகள் பல கூறி புறப்பட ஆயத்தமானார். அம்மையார் பாத்திரங்களை எடுத்துக்கொண்டு மீண்டும் உணவு கொண்டுவர இல்லம் நோக்கி நடக்கத் தலைபட்டார். சிவனடியார் அவரைத் தடுத்து இப்பாத்திரங்களையும், இலையையும் எடுத்துக் கொண்டு உன் கணவர் இருப்பிடம் செல்! அவனுக்கு உணவு படை என்று கூறி அகன்றார். அம்மையாரும் அடியவர் சொல் வழியே கணவர் இருப்பிடம் சேர்ந்து கணவர் முன்னே இலையை விரித்து பாத்திரங்களை திறந்தார். என்ன வியப்பு! அவைகளில் உணவு குறைவற நிரம்பி இருந்தது!

    அம்மையார் தம் வியப்பை வெளிக்காட்டாது கணவருக்கு உணவை படைத்தார். உண்ட கணவர் சிவபிரசாதமாக வந்த அந்த உணவு என்றும் இல்லாத சுவையாக இருப்பதை அறிந்து தம் துணைவியாரிடம் உண்மை கூறுமாறு வினவினார். அம்மையார் நடந்ததை நடந்தபடியே கணவனுக்கு எடுத்துரைத்தார். துணைவி உரைத்தன கேட்டு வியந்த மஞ்சுபத்து செட்டியார், தம் மனைவியையும் அழைத்துக்கொண்டு சிவனடியாருக்கு உணவளித்த இடத்திற்கு விரைந்தார்.

    அங்கே சிவனடியாரைக் காணவில்லை. மணல் வெளியில் இரண்டு திருவடிகளின் சுவடுகள் மட்டுமே காணப்பட்டன. அருகில் உணவளித்த வணிகர் தம் துணைவியாரின் இரண்டு அடிச்சுவடுகளும் காணப்பட்டன. சிவனடியாராக எழுந்தருளி தம் துணைவியாரிடம் உணவு பெற்று உண்டு, மீண்டும் பாத்திரத்தில் உணவு வரச்செய்தும் திருவிளையாடல் நிகழ்த்தி அருளியவர் சிவபெருமானே என உணர்ந்து மெய் சிலிர்த்தார் வணிகர். அங்கு தோண்டி பார்த்த போது தான் கோரக்கர் சித்தரின் ஜீவசமாதி இருந்தது தெரிந்தது.

    சிவனடியார் திருக்கோலத்தில் சிவபெருமானைக் காணும் பேறு பெற்ற தம் துணைவியாரின் தவத்தை எண்ணி மகிழ்ந்தார். தமக்கு அக்காட்சி கிட்டவில்லையே என சிந்தை நொந்தார். இறைவன் இவ்வாறு சிவனடியார் திருக்கோலத்தில் எழுந்தருளி செட்டிகுலப் பெண்ணிடம் திருவமுது பெற்று உண்டது ஓர் ஐப்பசி திங்கள் பரணி நாளாகும். கடல் வணிகம் செய்து வந்த மஞ்சபத்து செட்டியார், திருவடிகளின் சுவடுகள் பதிந்திருந்த இடத்திலே ஒரு மேடை அமைத்து வழிபாடு தொடங்கினார். மக்கள் இந்த அருள் அற்புதம் கண்டு அதிசயமுற்றனர். திருவடிச்சுவடுகள் பதிந்திருந்த மேடையை மையமாக அமைத்து மஞ்சுபத்து செட்டியார் ஒரு ஆலயத்தை கட்டி முடித்து நாள்தோறும் நித்திய பூஜைகளுக்கு உரிய நிவந்தங்களையும் ஏற்படுத்தினார்.

    வடக்கு பொய்கை நல்லூர் மக்கள் நாள்தோறும் சிறிது சோற்றைக்கொண்டு வந்து திருவடிகள் முன்வைத்து நைவேத்தியம் செய்து அடியவர்களுக்கு அளித்த பின்னரே தாம் உண்ணும் வழக்கத்தை மேற்கொண்டனர். நாளடைவில் சிவனடியார் ஒருவர் நாள்தோறும் தம் தோளில் அன்னக்காவடி ஒன்றை ஏந்தி மக்கள் இல்லந்தோறும் சென்று, அவர்கள் விரும்பி இடும் புதிய உணவை பெற்று வந்து சிவபெருமான் திருவடிகளுக்கு படைத்து அங்கே வந்து கூடும் ஏழை எளியவர்களுக்கு வழங்குவதை பழக்கமாகக் கொண்டார்.

    வடக்கு பொய்கை நல்லூர் மக்களும் அன்னக்காவடிக்கு உணவிட்ட பின்னரே உண்பர். உணவு படைக்கப்பெற்றமைக்கு அறிவிப்பாக திருக்கோவிலில் நகரா முழங்கப்பட்டு சங்கொலி எழுப்பப்படும். அவ்வொலி கேட்ட பிறகே மக்கள் உண்பர். ஆண்டு தோறும் ஐப்பசி பரணி நாளில் பெருவிழாவும் எடுத்து அன்னதானத்தை சிறப்பாக செய்து வந்தனர். சில ஆண்டுகள் கடந்தன. ஒருமுறை வணிக நிமித்தம் மலேயா சென்ற மஞ்சுபத்து செட்டியார் ஐப்பசி பரணி வருவதை மறந்து போனார். ஆண்டுப் பெருவிழாவின் முதல் நாளன்றுதான் நாளை ஐப்பசி பரணி என்பது அவர் நினைவுக்கு வந்தது. சிந்தை நொந்து நாளைக்குள் வடக்கு பொய்கை நல்லூர் எவ்வாறு செல்வேன்! ஐப்பசி பரணி விழா தடைபட்டு விட்டதே என்று கலங்கி கண்ணீர் வடித்தார்.

    கவலையில் கண்ணயர்ந்த செட்டியாரின் கனவில் சிவபெருமான் தோன்றி, அன்பனே! கவலை வேண்டாம்! உன் அன்பை அறிவோம்! நீ கண் விழிக்கும் போது வடக்கு பொய்கை நல்லூர் கடற்கரையில் உன் கப்பல் நிற்கும்! கரை சேர்ந்து வழக்கம் போல் ஐப்பசி பரணி விழாவை நடத்துக! ஆனால் நடந்தனவற்றை உன் மனைவி உள்பட எவரிடமும் கூறாதே! கூறினால் உன் உயிர் பிரியும்! என்று கூறி மறைந்தார். திடுக்கிட்டு கண்விழித்த மஞ்சு பத்து செட்டியார் தம் கப்பல் கீழை கடற்கரைத் துறை யில் தம் அலுவல கம் அருகே நிற்ப தைக்கண்டு மெய் சிலிர்த்தார். கரையேறித் தம் இல்லம் சேர்ந்து மிகச்சிறப்பாக ஐப்பசி பரணிப் பெருவிழாவை அன்ன தான பெருவிழாவாக நடத்தி மகிழ்ந்தார்.

    விழா சீரும் சிறப்பு மாக நடந்தேறிய பின் ஒரு நாள் இல்லத்தில் அமர்ந்திருந்த மஞ்சு பத்து செட்டியார் சிவபெருமானின் கருணை திறத்தை நினைத்து ஆனந்த கண்ணீர் வடித்து தாமே சிரித்தார். அதனைக் கண்டு திடுக்கிட்ட துணைவியார் அவர் சிரிப்புக்கு என்ன காரணம் என்று கேட்டார். மஞ்சு பத்து செட்டியார் வேறுகாரணம் கூறிய போது நம்ப மறுத்த அம்மையார் உண்மையை மறைக்காது தம்மிடம் கூறுமாறு வற்புறுத்தினார். மஞ்சுபத்து செட்டியார் உண்மை கூறினால் என் ஆவி பிரியும் என்று கூறியும், அதற்கு உடன்படாத அம்மையார் கணவன் தம்மை அந்நியராக கருதி மறைப்பதாக கூறி வருந்தினார்.

    இறைவன் தம் திருவிளையாடலை தம் துணைவி வழி நிகழ்த்தத் தொடங்கியமையை சிந்தித்த மஞ்சுபத்து செட்டியார், இடுகாட்டில் சிதை அடுக்கி அதன்மேல் படுத்தவாறு உண்மை கூற முற்பட்டபோது துணைவியாரும் அவ்வாறே தமக்கும் ஒரு சிதை அடுக்கி அதன் மேல் படுத்தவாறு சிரிப்பின் காரணத்தை கேட்க துணிந்தார். இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை மஞ்சுபத்து செட்டியார் தன் துணைவிக்கு எடுத்துரைத்த உடனேயே அவர் ஆவி பிரிந்தது. கணவர் ஆவி பிரிந்தமை அறிந்த அம்மையாரும் உயிர் நீத்தார்.

    இறைவன் உமையம்மையாரோடு எழுந்தருளி வந்து இவ்விருவருக்கும் திருக்காட்சி நல்கித் தம் திருவடிகளில் இவர்களை இணைத்துக் கொண்டான். மஞ்சுபத்து செட்டியார் கட்டிய திருக்கோவிலே தற்காலத்தில் சித்தர் ஆசிரமமாக திகழ்கின்றது என்றும் கருவறையில் காணப்படும் திருவடிகள் சிவபெருமானின் திருவடிச்சுவடுகளே என்றும் மஞ்சுபத்து செட்டியார் துணைவியாரிடம் இறைவன் சோறு பெற்று உண்ட நாளே ஐப்பசி பரணி விழா நிகழும் நாள் என்றும் இவ்வூர் மக்களிடையே நெடுங்காலமாக ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.
    Next Story
    ×