search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.
    X
    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளதை படத்தில் காணலாம்.

    விருத்தகிரீஸ்வரர் கோவிலில் யாகசாலை மண்டபம் தயார்

    விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 6-ந் தேதி கோலாகலமாக நடக்கிறது. இதற்காக யாகசாலை மண்டபம் தயார் நிலையில் உள்ளது. 5 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கிறது.
    விருத்தாசலத்தில் பிரசித்திபெற்ற விருத்தாம்பிகை உடனுறை விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. 5 கோபுரங்கள், 5 நந்திகள், 5 பிரகாரங்கள், 5 தீர்த்தங்கள், 5 தேர்கள் என அனைத்தும் 5 எண்ணிக்கையில் இருப்பது கோவிலின் சிறப்பம்சமாகும். காசியை விட சக்திவாய்ந்த விருத்தகிரீஸ்வரர் கோவில் 1,500 ஆண்டுகள் பழமையானது.

    இந்த கோவிலில் கடந்த 5 ஆண்டுகளாக திருப்பணிகள் நடைபெற்று வந்தது. தற்போது புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கும் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வருகிற 6-ந் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8.30 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த 27-ந் தேதி கணபதி பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது.

    இதன் தொடர்ச்சியாக நாளை(வியாழக்கிழமை) யாகசாலையில் முதல்கால பூஜை தொடங்குகிறது. இதற்காக பிரமாண்டமாக யாகசாலை மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது.

    இதில் 9 நவ அக்னி ஹோம குண்டங்கள், 2 பஞ்சா அக்னி ஹோம குண்டங்கள், 35 ஏகா அக்னி குண்டங்கள் உள்ளிட்ட 81 ஹோம குண்டங்கள் இடம்பெற்றுள்ளன. இங்குதான் 6 கால பூஜைகள் நடத்தப்படுகிறது. பின்னர் 6-ந் தேதி கோவில் கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷகம் நடத்தப்படுகிறது.

    யாகசாலைக்கு தேவையான ஹோம திரவியங்கள், நெல், அரிசி, நெய், தானிய வகைகள், மரக்கட்டைகள் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு தேவையான பொருட்களை பக்தர்கள் கோவிலில் கொண்டு வந்து கொடுத்துவிட்டு சாமியை வழிபட்டு செல்கின்றனர்.

    கும்பாபிஷேகத்தையொட்டி விருத்தாசலம் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. கோவிலின் 5 கோபுரங்களும் மின்னொளியில் ஜொலிக்கின்றன. மேலும் கோவிலுக்கு செல்லும் நுழைவு வாயில், பாலக்கரை ஆகிய பகுதிகளில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளன. விழாவிற்கான ஏற்பாடுகளை கும்பாபிஷேக கமிட்டி குழு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.
    Next Story
    ×