search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி
    X

    காந்திமதி அம்மனுக்கு வளையல்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு தீபாராதனைகாண்பிக்கப்பட்டபோது எடுத்த படம்.

    ஆடிப்பூர திருவிழா: நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்மனுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி

    • ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.
    • 21-ந் தேதி காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது.

    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆடிப்பூர திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று அதிகாலையில் சுவாமி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது.

    மதியம் 12 மணிக்கு அம்மன் சன்னதியில் உள்ள ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மன் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு சென்று தனக்கு வளைகாப்பு நடத்துவதற்கு அனுமதி பெற்று வருகிற வைபவம் நடந்தது. கோவில் வளாகத்தில் உள்ள கடைகளில் பெண்கள் ஆர்வமுடன் வளையல்களை வாங்கினர். வளைகாப்பு வைபவத்துக்காக சீர்வரிசை பொருட்களை பெண்கள் எடுத்து வந்தனர்.

    மதியம் 12.30 மணிக்கு காந்திமதி அம்மன், கர்ப்பிணி பெண்ணாக அலங்கரிக்கப்பட்டு இருந்தார். அப்போது மேளதாளம் முழங்க காந்திமதி அம்மனுக்கு, வளையல்கள் அணிவிக்கப்பட்டன. அங்கு கூடியிருந்த பெண்கள் குலவையிட்டனர். வளையல் அணிவிக்கப்பட்ட பிறகு காந்திமதி அம்மன் சப்பரத்தில் சுவாமி சன்னதிக்கு எழுந்தருளினார். சுவாமியிடம் தனக்கு வளையல் அணிவிக்கப்பட்ட விவரத்தை அம்மன் தெரிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. அங்கு சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு தீபாராதனை நடந்தது.

    பின்னர் ஊஞ்சல் மண்டபத்தில் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இதைத்தொடர்ந்து பெண்கள் அம்மனுக்கு வளையல் அணிவித்து வழிபட்டனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8.30 மணிக்கு காந்திமதி அம்மன் வெள்ளி ரிஷப வாகனத்தில் வீதி உலா வருதல் நடந்தது.

    விழாவில் வருகிற 21-ந் தேதி 10-வது நாள் திருவிழாவையொட்டி இரவு 7 மணிக்கு ஊஞ்சல் மண்டபத்தில் காந்திமதி அம்மனுக்கு முளைக்கட்டு திருவிழா நடக்கிறது. அப்போது காந்திமதி அம்மனை அலங்கரித்து, மடியில் முளைகட்டிய சிறுபயறை கட்டிவைத்து, வளையல்கள் அணிவித்து, அனைத்து பலகாரங்களும் அம்மனுக்கு படைக்கப்படும்.

    இதைத்தொடர்ந்து சிறுபயறை பிரித்து பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அய்யர் சிவமணிமற்றும் கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்துள்ளனர்.

    Next Story
    ×