என் மலர்
வழிபாடு
அச்சன்கோவில் ஆபரண பெட்டிக்கு தென்காசியில் சிறப்பான வரவேற்பு
- மகோற்சவ திருவிழா 10 நாட்கள் நடைபெறுகிறது.
- அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது.
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் கேரள மாநிலம் அச்சன்கோவில் உள்ளது. இங்கு பிரசித்தி பெற்ற அய்யப்பன் கோவில்களில் ஒன்றான தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் உள்ளது. கோவிலில் ஆண்டுதோறும் மண்டல மகோற்சவ திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.
விழாவின்போது அய்யப்பனுக்கு விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படும். இந்த ஆபரண பெட்டியில் அய்யப்பனின் தங்க வாள் உள்ளது. இந்த தங்க வாளானது இடத்திற்கு இடம் எடை மாறும் என்று கூறப்படுகிறது. மேலும் அய்யப்பனின் தங்க கவசம் மற்றும் கருப்பனுக்கு அணிவிக்கப்படும் வெள்ளி கவசம் மற்றும் ஆபரணங்கள் உள்ளது.
இந்த ஆபரண பெட்டி கேரள மாநிலம் புனலூர் அரசு கருவூலத்தில் இருந்து அங்குள்ள கிருஷ்ணன் கோவிலுக்கு நேற்று காலை எடுத்து வரப்பட்டது. அங்கு கேரள பக்தர்கள் ஆபரண பெட்டியில் உள்ள ஆபரணங்களை தரிசனம் செய்தனர்.
பின்னர் புனலூரில் செண்டைமேளங்கள் முழங்க யானை முன்செல்ல ஆபரண பெட்டிக்கு பிரத்யேகமாக தயார் செய்யப்பட்ட தென்காசி ஆபரண பெட்டி வரவேற்பு குழு தலைவர் ஏ.சி.எஸ்.ஜி.ஹரிகரனின் வாகனத்தில் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது.
பின்னர் ஆரியங்காவு, செங்கோட்டை வழியாக தென்காசிக்கு மதியம் 1.56 மணிக்கு தமிழக, கேரள போலீசாரின் பலத்த பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டது. வழிநெடுகிலும் ஆபரண பெட்டிக்கு பொதுமக்கள் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
தென்காசி காசிவிசுவநாத சுவாமி கோவில் முன்பு வந்த ஆபரண பெட்டிக்கு திரளான பக்தர்கள் திரண்டு வந்து வரவேற்பு அளித்தனர். ஏராளமான பக்தர்கள் வரிசையாக நின்று ஆபரண பெட்டியை தரிசித்தனர். தொடர்ந்து மதியம் 3.20 மணிக்கு தென்காசியில் இருந்து அச்சன்கோவிலுக்கு ஆபரண பெட்டி கொண்டு செல்லப்பட்டது.
அச்சன்கோவிலில் ஐயப்பனுக்கு இந்த ஆபரணங்கள் அணிவிக்கப்படுகிறது. இன்று (சனிக்கிழமை) காலை அச்சன்கோவிலில் கொடியேற்றத்துடன் மண்டல மகோற்சவ திருவிழா தொடங்குகிறது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடைபெறுகிறது.