என் மலர்
வழிபாடு
சிவகிரி அருகே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கைகளில் தீப்பந்தம் ஏந்தி நிற்க அம்மன் தேர்வீதி உலா
- இன்று அம்மன் திருவீதி உலா நடைபெறுகிறது.
- நாளை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே தலையநல்லூரில் பழமையான பொன்காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பொங்கல் திருவிழா கடந்த மாதம் 28-ந்தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று முன்தினம் பொங்கல் விழா நடந்தது. காலை முதலே பக்தர்கள் பொங்கல் வைத்தனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் குதிரை துளுக்கு பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்காக கோவில் முகப்பில் 2 குதிரைகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அந்த குதிரைகளுக்கு தீர்த்தம் தெளிக்கப்பட்டது. அப்போது ஒன்றன் பின் ஒன்றாக 2 குதிரைகளும் துளுக்கின.
இதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை எழுந்தருள செய்தனர். அதன்பின்னர் தேரை சுமந்து கொண்டு பக்தர்கள் வீதி உலாவாக சென்றனர்.
அப்போது அந்த பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றுவதற்காக ரோட்டின் இருபுறமும் ஆயிரக்கணக்கான மக்கள் சுமார் 1 கி.மீ. தூரத்துக்கு தீப்பந்தம் ஏந்தியபடி நின்றிருந்தனர். தீப்பந்த ஒளிகளுக்கு இடையில் அம்மன் தேர் பவனி வந்தது. அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் "அம்மா, தாயே" என பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.
தேர் கோவிலை வந்தடைந்த பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு மஞ்சள் நீராட்டு விழாவும், இரவு 9 மணிக்கு அம்மன் திருவீதி உலாவும், நாளை (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும் நடைபெறுகிறது.