என் மலர்
வழிபாடு

கொடியேற்றம் நடந்தபோது எடுத்தபடம்.
ஆரல்வாய்மொழி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழாகொடியேற்றத்துடன் தொடங்கியது

- 6-ந்தேதி மாடன் தம்புரான் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
- 7-ந்தேதி அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் நடக்கிறது.
ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு தேவாரம் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகங்கள், 9.30 மணிக்கு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் மேல்சாந்தி கிருஷ்ணன் பட்டர் பூஜையை நடத்தினார். இதில் கோவில் கண்காணிப்பாளர் ஆனந்தன், ஸ்ரீகாரியம் சேர்மராஜா, ஆரல்வாய்மொழி பேரூராட்சி தலைவர் முத்துக்குமார், வடக்கூர் ஊர் தலைவர் ஈஸ்வரபிள்ளை, தோவாளை ஊராட்சி ஒன்றிய தலைவர் சாந்தினி பகவதியப்பன், கவுன்சிலர்கள் நாகலெட்சுமி, மாதேவன்பிள்ளை, மணி, மேல்சாந்தி பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார், சோலை கணபதிப்பிள்ளை, சங்கரலிங்கம், விநாயகம், முத்துராமன், ஆசிரியர்கள் அருணாசலம், ஆனையப்பன், பிச்சை, முத்துசுவாமி, வீரபாகு உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு அப்பர் சாமி எழுந்தருளுதல், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சி, 9 மணிக்கு சாஸ்தா, அம்பாள் மற்றும் விநாயகர் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
விழாவில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை 5 மணிக்கு சாஸ்தா, அம்பாள் பந்தல் வாகனத்தில் பவனி வருதல், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேகங்கள், இரவு 7 மணிக்கு அன்னதானம், கலை நிகழ்ச்சி, 10 மணிக்கு சாஸ்தா மேஷ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் காலை சாஸ்தா, அம்பாள் வாகனத்தில் பவனி வருதல், சிறப்பு அபிஷேகம், இரவு அன்னதானம், கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவில் 6-ந்தேதி காலை 11 மணிக்கு மாடன் தம்புரான் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 7 மணிக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்னதானத்தை வருவாய் கோட்டாட்சியர் சேதுராமலிங்கம் தொடங்கி வைக்கிறார். 8.30 மணிக்கு தம்புரான் விளையாட்டு, 11 மணிக்கு கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.
விழாவின் நிறைவு நாளான 7-ந்தேதி காலை 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளுதல், இரவு 8 மணிக்கு சாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் வீதி உலா வருதல் ஆகியவை நடக்கிறது.
விழாவில் சிறப்பு விருந்தினர்களாக அமைச்சர் மனோதங்கராஜ், விஜய் வசந்த் எம்.பி. தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ., மேயர் மகேஷ், ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.
விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.