என் மலர்
வழிபாடு
வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- இன்று சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
- இரவு 8 மணியளவில் தெப்ப திருவிழா நடைபெறுகிறது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் சிந்தாமணிநாதர் சுவாமி என்ற அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆனித் திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சிறப்பு பூஜைகள், சுவாமி-அம்பாள் வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான நேற்று தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதையொட்டி காலை 7.45 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மையப்பன் எழுந்தருளினார். அதனை தொடர்ந்து தேர் அலங்கார மண்டகப்படிதாரர் எஸ்.தங்கப்பழம் கல்வி நிறுவனங்களின் தலைவர் எஸ்.தங்கப்பழம் குடும்பத்தினர் சார்பில், தேர் வடம் தொடுதல் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சிறப்பு பூஜைகளை தொடர்ந்து மதியம் 1.50 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது.
வாசுதேவநல்லூர் யூனியன் தலைவர் பொன்.முத்தையா பாண்டியன், தேரோட்டத்தை தொடங்கி வைத்தார். தேர் நான்கு வீதிகளில் வலம் வந்து 5 மணி அளவில் நிலையம் வந்தடைந்து.
பாதுகாப்பு ஏற்பாடுகளை புளியங்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோக்குமார் தலைமையில் 250 போலீசார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் செய்திருந்தனர்.
10-ம் திருநாளான இன்று (திங்கட்கிழமை) மாலை 6 மணி அளவில் இல்லத்து பிள்ளைமார் சமுதாயம் சார்பில் சப்தா வர்ணம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து இரவு 8 மணியளவில் தெப்ப திருவிழா மண்டகப்படிதாரரான நாடார் உறவின்முறை சங்கம் சார்பில், தெப்பத்திருவிழா நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் முருகன் ஆலோசனையின் பேரில், கோவில் நிர்வாக அலுவலர் கார்த்திசெல்வி மற்றும் உபயதாரர்கள், மண்டகப்படிதாரர்கள் செய்து வருகிறார்கள்.