என் மலர்
வழிபாடு
அபிராமி அந்தாதி பிறந்த கதை
- திருக்கடவூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் அபிராமி பட்டர்.
- சிறுவயது முதல் அபிராமி அன்னையின் பரமபக்தராக இருந்தார்.
சோழவள நாட்டில் காவிரியின் தென்கரையில் இருக்கக்கூடிய திருக்கடவூர் என்ற ஊரில் பிறந்தவர் தான் அபிராமி பட்டர். அபிராமிபட்டருக்கு பெற்றோர் இட்ட பெயர் சுப்பிரமணியன். இவர் நாளொருமேனியும் பொழுதொருவண்ணமாக வளர்ந்து வந்தார்.சிறுவயது முதல் அபிராமி அன்னையின் பரமபக்தராக இருந்தார். இதனால் சுப்பிரமணியன் என்ற பெயர் மறைந்து அபிராமிபட்டர் என்று மக்களால் அழைக்கப்பட்டார்.
அபிரமாமிபட்டருக்கு தமிழ்மொழியுடன், வடமொழி, சமஸ்கிருதம் போன்ற மொழிகள் எல்லாம் தெரியும். அதுமட்டுமல்லாமல் இசைக் கலையிலும் தேர்ச்சிபெற்று விளங்கினார். இப்படி கல்வி, கேள்வி, அறிவு, ஒழுக்கம் ஆகியவற்றிலும் சிறந்து விளங்கினார். தெய்வபக்தியிலும் முதிர்ச்சி அடைந்து காணப்பட்டார் அபிராமிபட்டர்.
தன்னுடைய அப்பாவை குருவாகக்கொண்டு காயத்ரி மகா மந்திரத்தின் அரும்பொருளையும் சக்கர வழிபாட்டின்முறைகளையும் நன்கு அறிந்துகொண்டார் அபிராமி பட்டர். தேவியின் வழிபாட்டு முறைகளால் இயற்கையாக கவிதை பாடக்கூடிய இயல்பையும் அபிராமி பட்டர் பெற்றிருந்தார். அபிராமி அம்மையின் திருக்கோலத்தை தன்னுடைய இதயத்தில் நிலைநிறுத்தி ஞானநிலையிலேயே நிலைத்து இருந்தார் அபிராமி பட்டர்.
அதுமட்டுமில்லாமல் தன்னுடைய வீட்டிலும் சக்தி பூஜையையும், ஸ்ரீசக்ர பூஜையையும் தவறாமல் செய்து வந்தார் அபிராமி பட்டர். திருமணம் முடிந்த பின்பும் இல்லற வாழ்க்கையில் ஒரு பற்றற்ற நிலையிலேயே வாழ்ந்து வந்தார் அபிராமி பட்டர். அபிராமி பட்டரை அபிராமி பக்தர் என்று சொல்வதை விட அபிராமி பித்தர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு இருந்தார் அபிராமி பட்டர்.
அபிராமிபட்டரின் சிந்தையும், செயலும் அபிராமி அமையின் திருப்பாத கமலங்களிலேயே ஒன்றி இருந்தது. இதைபார்த்துக் கொண்டிருந்த அபிராமி அம்மையின் மனம் கரையத் தொடங்கியது. தனது அன்பு அடியாரான அபிராமி பட்டரின் பக்தியை உலகிற்கு உணர்த்த எண்ணினார். உடனே தனது திருவிளையாடலை நடத்த நினைத்தார் உமையம்மையான அபிராமி அம்மை.
அந்த சமையத்தில் தான் சரபோஜை மன்னன் 18&ம் நூற்றாண்டில் தஞ்சை தரணியை அரசாட்சி செய்து வந்தார். அந்த மன்னன் அமாவாசை நாளன்று காவிரிபட்டினம் சென்று கடலில் நீராடிவிட்டு அப்படியே திருக்கடவூர் வந்து அமுதகடேஸ்வரரையும், அபிராமி அம்மையையும் வணங்க வேண்டும் என்று நினைத்தார்.
மன்னன் கோவிலுக்கு வருவதற்கான முன்னேற்பாடுகள் எல்லாம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அதனால் ஆலயமே விழாக்கோலம் பூண்டிருந்தது. எங்குபார்த்தாலும் பசுமையான வாழைமரங்களும், மாவிலை தோரணங்களும் அழகாக இருந்தன. அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலோ ஆங்கார வேலைபாடுகளுடன் மிக அழகாக இருந்தது. மேளதாளங்களுடன் வேத மந்திரங்களும் ஒலித்துக் கொண்டிருந்தன.
சரபோஜை மன்னன் கோவிலுக்கு வரக்கூடிய அன்று அமுதகடேஸ்வரருக்கும், அபிராமி அம்மைக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. வாசமிகு, வண்ணமிகு ஆடை, ஆபரணங்களாலும் அழகா அழகுபடுத்தி இருந்தாங்க. அமுதகடேஸ்வரரான சிவலிங்கத்திற்கு சங்கு அபிஷேகத்திற்காக 1008 சங்குகளை தயார் நிலையில் வைத்திருந்தனர். பூஜைகளை விஷேசமாக நடத்திக்கொண்டிருந்தனர்.
சரபோஜை மன்னர் வந்ததும் கோவில் யானை மாலைபோட்டு வரவேற்றது. உடனே பூரணகும்ப மரியாதை அளித்து சரபோஜை மன்னனை வரவேற்று கோவிலுக்குள் அழைத்துச் சென்றனர். சரபோஜை மன்னன் முதலில் ராஜ கோபுரத்தை வணங்கியவாறு கோவிலுக்குள் சென்றார். சரபோஜை மன்னன் முன்னிலையில் அபிஷேகம் தொடங்கியது. அமுதகடேஸ்வரருக்கு ஆனந்தாமாக நடந்த 1008 சங்கு அபிஷேக ஆராதனைகளை கண்டுகளித்து பரவசமானார் சரபோஜை மன்னர். தனது இருகரம் குவித்து அமுதகடேஸ்வரரை வணங்கினார் சரபோஜை மன்னர்.
அதன்பிறகு அபிராமி அம்மையின் சன்னதிக்கு வந்தார் சரபோஜை மன்னர். அங்கு வந்த மன்னனை கண்டதும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் அனைவரும் மரியாதையா ஆளுக்கொரு பக்கமாக விலகி நின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் அப்படி செய்யவில்லை. சரபோஜை மன்னன் வந்ததையோ, பரிவாரங்கள் இருந்ததையோ எதுவுமே அறியாமல் அபிராமி அம்மையின் அலங்கார அழகில் தன்னை மறைந்து சிலையாக நின்றுகொண்டிருந்தார் அபிராமி பட்டர்.
அபிராமிபட்டரின் தோற்றப்பொலிவைக்கண்டு சரபோஜை மன்னன் மெய்மறந்து நின்றார். அபிராமி பட்டரிடம் உரையாட வேண்டும் என்று எண்ணிய சரபோஜை மன்னர் அருகில் இருந்தவர்களிடம் யார் இவர் என்று கேட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அனைவரும் இவர் ஒரு பரம பித்தர் என்று கூறினர்.ஆனால் அவர்கள் சொன்ன கருத்தை சரபோஜை மன்னரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
நெற்றியிலே திருநீறு அணிந்து அதன்நடுவே செந்தூர பொட்டு வைத்து கழுத்தில் ருத்ராட்சத்துடன் சிவக்கோலத்துடன் திகழ்ந்த அபிராமி பட்டரை பார்த்து சரபோஜை மன்னர் கேட்டார் சுவாமி தாங்கள் யார்? நான் உங்களை பற்றி அறிந்துகொள்ளலாமா என்று சரபோஜை மன்னர் அபிராமி பட்டரிடம் கேட்டார்.
அப்போதுதான் பக்தி மயக்கத்திலிருந்து விடுபட்டார் அபிராமி பட்டர். அருகில் இருந்த அரசரை கவனித்தார். அரசரை கண்டதும் அபிராமி பட்டருக்கு ஒன்றுமே புரியவில்லை. இருந்தாலும் தன்னை சுதாரித்துக்கொண்டு நான் இங்கு பஞ்சாங்கம் செய்கிறேன். அபிராமி அம்மையின் அழகையும், பெருமைகளையும் மனம்குளிர பாடுபவன் என்றார். இதை கேட்டதும் சரபோஜை மன்னர் இன்று அமாவாசை உண்டா? எத்தனை நாழிகை இருக்கிறது என்று கேட்டார்.
அபிராமி அம்மையின் மீது உள்ள ஆபரணங்களில் ஒளிப்பிழம்பில் மூழ்கி திளைத்த அபிராமிபட்டர், இன்று அமாவாசையா, இல்லை இன்று பவுர்ணமி என்று சொன்னார். அப்படி சொல்லிக்கொண்டிருக்கும்போதும் அபிராமி பட்டரின் பார்வை அபிராமி அம்மையின் பேரொளியிலேயே மதிமயங்கி இருந்தது. அபிராமிபட்டர் கூறியதை கேட்ட சரபோஜை மன்னன் என்ன இன்று பவுர்ணமியா? என்று சொல்லி ஆச்சரியப்பட்டார். சரிதான் இந்த மக்கள் கூறுவபோல இவரும் ஒருபித்தர் தான் என்று நினைத்தார்.
சற்று கோபத்துடன் சரபோஜை மன்னர் அபிராமி பட்டரை பார்த்து இன்று முழுநிலவு நாள் இல்லை என்றால் இவருக்கு தக்க தண்டனை அளிக்க வேண்டும் என்று கூறிவிட்டு சென்றார். சரபோஜை மன்னர் கூறிய வார்த்தைகள் அபிராமி பட்டரின் காதுகளில் விழவே இல்லை. சிறிதுநேரத்திற்கு பிறகு அபிராமி அம்மையின் கோவிலில் இருந்து புறப்பட்டு தனது வீட்டிற்கு சென்றார் அபிராமி பட்டர்.
அப்போது அங்கிருந்தவர்கள் இப்படித்தான் அரசரிடம் பேசுவீர்களா என்று கூறினார்கள். இன்று அமாவாசை. அதை சொல்வதற்கு பதிலாக பவுர்ணமி என்று கூறிவிட்டீர்களே. அரசர் உன் மீது கோபத்துடன் சென்று விட்டார் என்று கூறினர். இவர்களது பேச்சை கேட்க கேட்க சுய உணர்வை பெற்றார் அபிராமி பட்டர். இன்று அமாவாசையா நான் பவுர்ணமி என்று மாற்றி சொல்லிவிட்டேனே என்று குழம்பியபடி வீட்டிற்குள் நுழைந்தார் அபிராமிபட்டர்.
கோவிலில் நடந்ததை தன்னுடைய மனைவிடம் சொல்லி மனம்வருந்தினார் அபிராமி பட்டர். நீங்கள் கவலைப்படாதீர்கள் அபிராமி அம்மையின் பாதத்தை சரணடையுங்கள் என்று கூறினார் அபிராமி பட்டரின் மனைவி. உடனே அபிராமி பட்டர் இப்போதே தன்னுடைய தவறுக்கு பிராயசித்தம் தேடுகிறேன் என்று கூறிக்கொண்டு திரும்பவும் ஆலயத்திற்கு ஓடி சென்றார் அபிராமி பட்டர்.
அபிராமி அம்மையின் கோவில் வாசலில் பெரிய தீக்குழி ஒன்றை ஏற்படுத்தினார்கள். அதன் இருபக்கமும் கால்கள் நட்டு மேல்விட்டம்போட்டு தீக்குழிக்கு நடுவாக 100 பொறிகள் கொண்ட பெரிய உறி ஒன்ற கட்டி தொங்கவிட்டார் அபிராமி பட்டர். அபிராமி பட்டர் இப்படி செய்துகொண்டிருப்பதை பார்த்த ஊரார்கள் அனைவரும் அபிராமி அம்மையின் கோவிலுக்கு வந்தனர்.
அபிராமி பட்டர் முதலில் அந்த குழியில் நெருப்பை வளர்த்துவிட்டு கையில் ஒரு ஏடும், எழுத்தாணியும் எடுத்துகொண்டு அந்த உறியின்மீது தொங்கிக் கொண்டிருந்த உறியின் மீது ஏறி அமர்ந்தார். அபிராமி பட்டர் இவ்வாறு செய்து கொண்டிருக்க, அபிராமி பட்டரின் மனைவியோ அங்கு ஓடி வந்தார். மக்கள் அனைவரும் அபிராமி பட்டருக்கு வழிவிட்டனர். தன்னுடைய கணவரின் செயலைக்கண்டு அவரால் கரம் குவிக்க முடிந்ததே தவிர தன்னுடைய கணவரை தடுக்கக்கூடிய சக்தி அவர்களுக்கு இல்லை.
உடனே அபிராமி பட்டரின் மனைவி அபிராமி அம்மையின் சன்னதிக்கு ஓடினார். கண்ணீர்விட்டு அதறி அழுது தன்னுடைய திருமாங்கல்யத்தை கையில் எடுத்து அம்மையே நீயே கதி என்று அம்மையின் திருப்பாதங்களை பற்றிக் கொண்டார். இந்த பரிதாபமான சூழ்நிலையிலும் அபிராமி பட்டரின் செயலை சிலர் ஏளனம் செய்தனர்.
உறியில் அமர்ந்த அபிராமி பட்டர் தலைமீது கரம்குவித்து ராஜகோபுரத்தை தரிசித்து கோவிலுக்குள் இருக்கும் பிள்ளயாரை தியானித்தார். பக்தியால் மெய்மறந்து அபிராமி பட்டரின் கண்களில் நீர் அருவியாக கொட்டியது. உடனே தாரமர்கொன்றையும் செண்பகமாலையு என்று விநாயக காப்புச்செய்யுளை அபிராமி பட்டர் தன்னுடைய திருவாயால் பாட அதையே அவர் திருக்கரம் எழுதத்தொடங்கியது.
அதன்பிறகு உதிக்கின்ற செங்கம்மா உச்சித்திலகம் உணர்வுடயோன் எனத்தொடங்கும் அந்தாதியை பாடினார். பாடிக்கொண்டிருக்கும்போதே எழுதவும் செய்தார். அபிராமி பட்டரின் பாட்டை கேட்ட பக்தர்கள் எல்லோரு பரவசத்தில் மூழ்கினர்.
அந்தாதி என்பது ஒரு பாட்டின் இறுதியில் உள்ள எழுத்து அசை, சீர், அசை என்னும் ஐந்தினுள் ஏதேனும் ஒன்று அடுத்த பாட்டிற்கு ஆதியாக அமையுமாறு பாடக்கூடியது. அபிராமி அந்தாதியில் இருக்கக்கூடிய 100 பாடல்களும் அந்தாதியாக அமைந்தாலும், இறுதிப்பாட்டின் இறுதி சீர் முதல் பாட்டின் முதல் சீரில் அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் உரியில் நூல் ஒன்றையும் அறுத்துக்கொண்டே வந்தார் அபிராமி பட்டர்.
78 பாடல்கள் பாடி முடிந்தது உறியின் 78 கயிறுகள் அறுபட்டுவிட்டன. உறியோ சரியான நிலையில் இல்லாமல் தடுமாறிக்கொண்டே வந்தது. அங்கு கூடியிருக்கக்கூடிய மக்கள் பக்தியுடனும் ஒருவித பயத்துடனும் மெய்மறந்து நின்றனர். இன்னும் அபிராமி அம்மை வந்து அபிராமி பட்டரை காப்பாற்றவே இல்லையே என்றும் சூரியனும் மேற்கு திசையில் அஸ்தனமானபோகிறது என்றனர்.
அபிராமி பட்டர் இவ்வாறு செய்வதை கேள்விப்பட்ட சரபோஜ் மன்னரோ கோவிலை நோக்கி வந்தார். எதைப் பற்றியும் கவலைப்படாத அபிராமி பட்டர் அபிராமி அம்மையின் பாடல்களை பாடிக்கொண்டிருந்தார். 79&வது பாடலாகிய விழிக்கே அருளுண்டு அபிராமி வல்லிக்கே வேதம் சொன்ன விழிக்கே வழிபட நெஞ்சுண்டு என்று பாடி எப்படியும் இவ்வுலக தொடர்பை நாம் அறுத்துக்கொள்ள வேண்டியதுதான் என்று தீர்மானித்தார். உடனே ஏட்டையும், எழுத்தாணியையும் கீழே வைத்துவிட்டார் அபிராமி பட்டர்.
அந்த நேரத்தில் தான் அபிராமி அம்மை அபிராமி பட்டரின் முன் தோன்றினார். தன் அருட்குழந்தை இப்படி வருந்துவதை எத்தனை நேரம் தான் பார்த்துக் கொண்டிருப்பார் அபிராமி. தன்னுடைய காதில் அணிந்து கொண்டிருந்த தண்டை ஒன்றை கழற்றி விண்ணை நோக்கி வீசினார் அபிராமி அன்னை. எல்லாம் கண் இமைக்கும் நேரத்தில் நடந்தேறியது.
ஆஹா இந்த ஆட்சியை என்ன சொல்வது உதிக்கின்ற செங்கதிர் போல அத்தடாகம் பேரொளி பொங்க இருண்ட வானில் உலகம் எங்கு பவுர்ணமி நிலவு போல ஒளிவீசியது. உடனே அபிராமி அம்மை அபிராமி பட்டரை பார்த்து அன்பனே நீ அரசனிடத்தி கூறியபடி நிலவை விண்ணில் பார் என்று திருவாய்மலர்ந்தார்.
அங்கிருந்தவர்கள் அனைவரும் பக்தி பரவசத்தில் ஆனந்தம் அடைந்தனர். அரசரோ அதிசயித்து நின்றார். அபிராமி பட்டர் கண்களில் இருந்து நீர் ஆறாய் பெருகியது. அம்மையே என்னையும் உன் அடியார்களில் ஒன்றாக சேர்த்துக் கொண்டாயே, நான் தன்யனானேன். நான் உறியில் திரியறுத்தேன். நீயோ நான் செய்த வினையெல்லாம் அறுத்துவிட்டாயே என்னே உன்னுடைய அருள், உன்னுடைய கருணை தன்ன என்று கூறி பூரிப்படைந்து உறியில் இருந்து கீழே இறங்கினார் அபிராமி பட்டர்.
பார்த்துக்கொண்டிருந்த பக்தர்கள் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர். அபிராமி பட்டரின் மனைவியோ ஓடி வந்து அபிராமி பட்டரின் காலில் விழுந்து ஆனந்த கண்ணீர் வடித்தார். அம்மை எனக்கு மாங்கல்ய பிச்சை அளித்துவிட்டார் என்று கூறினார். இதை பார்த்துக்கொண்டிருந்த சரபோஜி மன்னரும் அபிராமி பட்டரின் அடிபணிந்தார். அபிராமி பட்டரை ஏளனம் செய்து எள்ளிநகையாடியவர்கள் எல்லாம் அபிராமி பட்டரை போற்றி தொழுதார்கள். அபிராமி பட்டரை வணங்கிய மன்னன் சுவாமி உங்கள் பெருமையை நான் அறியாமல் போனேன். இந்த திரு அந்தாதியை தொடர்ந்து பாடி அருளாசிபுரிய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அபிராமிபட்டர் அதற்கு இசைந்து கோவிலுக்குள் சென்று அம்மையின் சன்னதிக்கு எதிரில் அமர்ந்து தொடர்ந்து பாடினார் அபிராமி பட்டர்.இப்படி ஒவ்வொரு பாடலாக பாடும் போதும் உறியின் கயிறு கழன்று விழுந்துகொண்டே வந்தது. இறுதியாக 100-வது பாடலில் திருவடி பாதங்களை சரண்புகுவதற்கான மார்க்கத்தையும் காட்டிவிட்டார் அபிராமி பட்டர். 100&வது பாட பாடியதும் உறி கழன்று நெருப்பில் விழுந்து எரிந்துபோனது. பக்தர்கள் அனைவரும் அந்த சாம்பலினை பிரசாதமாக எடுத்து சென்றனர்.
அதன்பிறகு தான் அதுவரை பாடிய நூற்பயனை அபிராமி பட்டர் ஆத்தாளே எங்கள் அபிராமி வல்லியே அண்டமெல்லாம் பூத்தாளே என்ற பாடலை பாடி முடித்தார். இப்படி காப்பு, நூற்பயன் சேர்த்து 102 பாடல்களை கொண்ட அபிராமி அந்தாதியை பக்திகாவியமாக சமர்ப்பித்தார் அபிராமி பட்டர்.
நடந்ததை எல்லாம் பார்த்துக்கொண்டிருந்த சரபோஜி மன்னர் அபிராமி பட்டரை பார்த்து நீங்கள் உண்மையாகவே அபிராமி பட்டர்தான். சரபோஜி மன்னரும் அபிராமி பட்டருகு காணிக்கையாக ஏராமான விளைநிலகளை கொடுத்தார். ஆனால் அபிராமி பட்டர் அதனை மறுக்கவே, தங்கள் வழியினருக்காவது ஆகும் என்று செப்பு பட்டையம் ஒன்றை எழுதி கொடுத்தார் சரபோஜி மன்னர்.
இன்றளவும் அவரது வாரிசு வழியினரிடம் அந்த பட்டயம் உள்ளது. அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியோடு, திருக்கடவூர் கள்ளவாரண பிள்ளையார் பதிகம், அமுதக்டேஸ்வரர் பதிகம் காலசம்ஹார மூர்த்தி பதிகம் அபிராமி பதிகம் போன்றவற்றை படத்துள்ளார்.
திருக்கடையூரில் இன்று அபிராமி பட்டர் வாழ்ந்த வீடு உள்ளது. திருக்கடையூர் மேல்வளாகத்தில் இருக்கக்கூடிய 3&வது வீடு அபிராமி பட்டர் வீடு. ஒவ்வொரு வருடமும் திருக்கடையூர் அபிராமி ஆலயத்தில் தை அமாவாசை அன்று இரவு 8 மண் அளவில் தருமபுரம் ஆதினம் குருமகா சன்னிதானம் மற்றும் இளைய சன்னிதானம் இடத்தில் அபிராமி பட்டர் விழா சிறப்பாக நடைபெறுகிறது. அப்போது ஆயிரக்கணகானவர்கள் முன்னிலையில் அபிராமி அந்தாதி பாடப்படும்.
இந்த சமயத்தில் அபிராமி அம்மை நவரத்தின அங்கி அணிந்திருப்பார். ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் அம்மனுக்கு தங்க காசு சமர்ப்பித்து தீப ஆராதனை நடைபெறும். 79-வது பாடலின் முடிவில் கொடிமரத்திற்கு அடியில் பவுர்ணமி நிலவு தோன்றுவது போன்ற ஐதீக நிகழ்வு நடைபெறும். அப்போது கோவிலின் அனைத்து விளக்குகளும் அணைகப்படும் இருளில் பவுர்ணமி நிலவு ஒளிவீசுவது போன்ற தெய்வீகப்பெருவிழா. தன்னை முழுமையாக நம்பும் பக்தர்களுக்கு அபிராமி அம்மை எதுவும் செய்வாள் என்பதற்கு அபிராமி பட்டர் விழா சான்று.