என் மலர்
வழிபாடு
எட்டுப்பட்டியை காக்கும் பிடாரி அம்மன்
- குரால்நத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது.
- தல விருட்சமாக ஆச்சா மரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது.
சேலம் மாவட்ட பனமரத்துப்பட்டி அருகே குரால்நத்தம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பிடாரி அம்மன் கோவில் உள்ளது. திப்பம்பட்டி, அத்திப்பட்டி, குள்ளம்பட்டி, முத்தானூர், சூரியூர், குரால் நத்தம் உள்பட எட்டுப்பட்டி கிராம மக்களின் காவல் தெய்வமாக திகழும் இந்த பிடாரி அம்மன் பனமரத்துப்பட்டி ஏரிக்கரையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். மக்களை மட்டுமின்றி இந்த ஏரியையும் பிடாரி அம்மனே காவல் செய்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை உள்ளது.
இக்கோவிலில் மூலவர் அம்மன் சிலை அருகே தல விருட்சமாக ஆச்சா மரம் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. கோவில் வளாகத்தில் கன்னிமார், முனியப்பன், கருப்பனார் என காவல் தெய்வங்களும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த தலத்திற்கு வந்தவுடன் நம் கண்ணில் படுவது ஆங்காங்கே நேர்த்திக்கடனாக வைக்கப்பட்டிருக்கும் சூலாயுதங்கள்தான். அவற்றில் சில தலைகீழாகவும் வைக்கப்பட்டிருந்தன.
தொலைந்து போன தங்கள் பொருட்கள் திரும்ப கிடைக்க வேண்டி சூலாயுதத்தை இந்தக் கோவிலில் நட்டு வைக்கும் பழக்கம் இருக்கிறது. அப்படி சூலத்தை நட்டு வைப்பதால், அந்தப் பொருள் கிடைக்கும் அல்லது அதை எடுத்தவர்கள் சிரமத்திற்கு உள்ளாவார்கள் என்ற நம்பிக்கை இப்பகுதி மக்களிடம் உள்ளது.
சூலாயுதத்தை தலைகீழாக நடுவதை 'ஈடுபோடுதல்' என்று கூறுகிறார்கள். இக்கோவிலில் ஈடு போட்டால் நிச்சயம் பொருள் கிடைக்கும் என்கிறார்கள்.
இந்தக் கோவில் தல விருட்சமான ஆச்சா மரத்திலும், அம்மன் தாலாட்டு நடைபெறும். கோவில் முன்புள்ள தொட்டில் பகுதியிலும் ஏராளமான மஞ்சள், தாலிக் கயிறுகளும், தொட்டில்களும் கட்டப்பட்டுள்ளன. திருமணத் தடை விலகி திருமணம் நடைபெற தாலிக்கயிறும், குழந்தைப் பேறு உண்டாக தொட்டில் கட்டியும் வழிபாடு செய்கிறார்கள்.
தல வரலாறு
சுமார் 350 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர்கள், குடிநீர் தேவைக்காக பனமரத்துப்பட்டி ஏரியை உருவாக்கினார்கள். அதற்காக அங்கு சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் வசித்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அந்த மக்கள் அருகே உள்ள 8 ஊர்களில் குடியேறினர்.
அவர்களால் அமைக்கப்பட்டதே ஏரிக்கரையில் உள்ள பிடாரி அம்மன் திருத்தலம். இரவு நேரங்களில் இத்தல அம்மன், ஊரை வலம் வருவதாக கிராம மக்கள் நம்பு கின்றனர்.
இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமி, அமாவாசை நாட்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இக்கோவிலின் முத்தாய்ப்பான விழா என்றால் ஆண்டுதோறும் நடைபெறும் ஐப்பசி திருவிழாதான்.
அமைவிடம்
சேலத்தில் இருந்து சுமார் 20 கிலோமீட்டர் தொலைவில் பனமரத்துப்பட்டியை அடுத்து குரால்நத்தம் கிராமத்தில் பிடாரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. சேலம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து இந்த கிராமத்திற்கு டவுன் பஸ்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயக்கப்படுகின்றன.
காவு சோறு சாப்பிடும் கருப்பனார்
ஐப்பசி மாதத்தில் முதல் வெள்ளிக்கிழமை பிடாரி அம்மன் கோவில் பூச்சாட்டுதல் நடைபெற்று, அடுத்த 15-வது நாள் திருவிழா நடைபெறும். இந்த விழாவின் ஒரு பகுதியாக விவசாயிகள், தாங்கள் விளைவித்த நிலக்கடலை, மிளகாய், அவரைக்காய், வாழைப்பழம், அரளி உள்ளிட்டவை சக்தி அழைப்பு நிகழ்ச்சியில் சூறையிட்டு அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவர். இந்த விழாவின் போது, வேண்டுதல் நிறைவேறிய பலர் ஆடு, கோழி பலியிட்டும் நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.
இவ்விழாவில் முத்தாய்ப்பாக கருப்பனாருக்கு ரத்த சோறு போடும் நிகழ்ச்சி நடைபெறும். அப்போது கோவில் வளாகத்தில் உள்ள பக்தர்கள் வெளியேறிவிடுவர். பின்னர் கோவில் பூசாரி பொங்கல் வைத்து, கிடா வெட்டி அதன் ரத்தத்தை சோற்றில் கலந்து கருப்பனார் சுவாமிக்கு படையல் போடுவார். படையல் சோற்றை புதிய மண் சட்டியில் எடுத்துச் சென்று, ஆச்சா மரத்தின் மேலே வீசி விட்டு, பூசாரி திரும்பி பார்க்காமல் வந்து விடுவது வழக்கம் இருக்கிறது. ஆச்சா மரத்தில் இருக்கும் கருப்பனார் சாமி ரத்தம் கலந்த காவு சோற்றை பிடித்துக்கொள்வதாக ஐதீகம்.