என் மலர்
வழிபாடு

சக்குளத்துக்காவு பகவதியம்மன் கோவிலில் பொங்கல் வழிபாடு: லட்சக்கணக்கான பெண்கள் பங்கேற்பு
- 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
- 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.
கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.
இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம் தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி 20 கிமீ சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.
பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவிலில் இம்மாதம் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறுகிறது. அன்று முதல் 27-ந் தேதி வரை நோன்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.