என் மலர்
வழிபாடு
சிதம்பரம் நடராஜர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
- சித்சபையில் விஷேக ரகசிய பூஜை.
- 14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது.
சிதம்பரம்:
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பிரசித்தி பெற்ற நடராஜர் கோவில் உள்ளது. இக் கோவிலில் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுவது வழக்கம்
இந்த ஆண்டுக்கான மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த 4-ந் தேதி (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி யது. 5-ந் தேதி வெள்ளி சந்திர பிரபைவாகன காட்சி,6-ந் தேதி தங்க ஸர்யபிரபை வாகன காட்சி, 7-ந் தேதி வெள்ளி பூத வாகனகாட்சி, 8-ந் தேதி வெள்ளி ரிஷப வாகன காட்சி (தெருவடைச்சான்) ஆகியவை நடந்தது.
9-ந் தேதி வெள்ளி யானை வாகன காட்சி, 10-ந் தேதி தங்க கைலாஸ வாகன காட்சி,11-ந் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி காட்சி, பின்னர் சோமாஸ் கந்தர் வெட்டுங்கு திரையில் வீதியுலா நடக்கிறது.
இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 5 மணி முதல் 5.30 மணிக்குள் ரதயாத்ராதானம் நடை பெற்றது. இதனை தொடர்ந்து நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தேரோட்டம் நடைபெற்றது. தேரை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
தேர் கீழ ரத வீதியில் இருந்து தொடங்கி தெற்கு ரத வீதி, மேல வீதி, வடக்கு ரத வீதி வழியாக மாலை 4 மணியளவில் நிலையை வந்தடைகிறது.
நாளை ( 13-ந் தேதி)அதிகாலை 2 மணி முதல் 6 மணிவரை ஆயிரங்கால் மண்டபத்தில் சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மகாபிஷேகம் நடைபெறும். 6 மணி முதல் 10 மணி வரை திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சி, சித்சபையில் விஷேக ரகசிய பூஜை, 2 மணிக்கு மேல் மார்கழி ஆருத்ரா தரிசன மகோற்சவ ஞானாகாச சித்சபா பிரவேசம் நடைபெறும்.
14-ந் தேதி இரவு முத்துப்பல்லக்கு காட்சி நடைபெறுகிறது. உற்ச வத்தில் 9 நாட்களும் மாலை சாயரட்சை காலத்தில் மாணிக்க வாசகர், நடராஜர் சன்னதிக்கு வந்தவுடன் திருவெம்பாவை பாடி விஷேச 21 தீபாராதனை நடைபெறும்.