search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் சித்திரை திருவிழாக்கள்
    X

    தமிழர் பண்பாட்டை பிரதிபலிக்கும் சித்திரை திருவிழாக்கள்

    • இன்று விஷு புண்ணிய காலம் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும்.
    • சித்திரை மாதத்தில் ஏராளமான கோவில்களில் தேர்த் திருவிழாக்கள் நடைபெறும்.

    இன்று தர்ப்பணம் செய்யுங்கள்

    இன்று (வெள்ளிக்கிழமை) காலை அனைவரும் எண்ணெய் தேய்த்து குளித்து புதிய ஆடை, ஆபரணம் அணிந்து பூஜை செய்து பெரியோர்களின் ஆசி பெற்று, உறவினர்களுடன் ஒன்று சேர்ந்து மகிழ்ச்சியாக தமிழ்ப்புத்தாண்டை கொண்டாட வேண்டும்.

    நிம்ம குசுமம் என்னும் வேப்பம்பூவை தனியாகவோ சாப்பாட்டில் சேர்த்தோ சாப்பிட வேண்டும். இன்று விஷு புண்ணிய காலம் என்பதால் முன்னோர்களுக்கு தர்ப்பணமும் செய்ய வேண்டும். சண்ணிவதி தர்ப்பணம் செய்ய விரும்புபவர்கள் இன்று முதல் தர்ப்பணத்தை ஆரம்பிக்கலாம். இன்று ஆங்காங்கே நடைபெறும் பஞ்சாங்க வாசிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புது வருட பலனை கேட்டு பெரியோர்களின் ஆசியை பெற வேண்டும்.

    கனியை பார்த்தால் செல்வம் பெருகும்

    தமிழ் புத்தாண்டு ஆரம்பிக்கும் முந்தைய தினத்துக்கு அதாவது இன்றைய தினத்துக்கு விஷு எனப்பெயர். நாளை அதிகாலை எழுந்து கண் விழித்தவுடன் காய்கறிகள், கனி வகைகள், புஷ்பங்கள், மஞ்சள், குங்குமம், தங்கம், வெள்ளி முதலான மங்கள பொருட்களை முதன் முதலாக காண்பதே விஷுக்கனி எனப்படும். மேற்படி பொருட்களை முதல் நாள் இரவே அதாவது இன்று இரவே பூஜை அறையில் வைத்து விட்டு நாளை காலை கண் விழித்தவுடன் முதலில் இவைகளை பார்க்க வேண்டும். இதனால் இந்த சோப கிருது வருடம் முழுவதும் வீடு செழிப்புடன் இருக்கும்.

    திரவுபதி ஆலயங்களில் கோலாகலம்

    சித்திரை தொடங்கி விட்டால் தென் மாவட்டங்களில் "கோவில் கொடை" எனப்படும் கோவில் ஆண்டு திருவிழாக்கள் களை கட்டி விடும். சென்னை, மும்பை, பெங்களூர் போன்ற நகரங்களில் வசிப்பவர்கள் குடும்பத்தோடு கோவில் கொடையை கொண்டாட சொந்த ஊருக்கு புறப்பட்டு செல்வார்கள்.

    பள்ளி விடுமுறையோடு கோடை காலமும் சேர்ந்து வருவதால் சொந்த ஊரில் ேகாவில் கொடை கொண்டாடுவதை தென் மாவட்ட மக்கள் மிக, மிக விரும்புவார்கள். சித்திரை மாதம் பிறந்து விட்டாலே இந்த குதூகலம் வந்து விடும். அது போல வட தமிழகத்தின் பெரும்பாலான கிராமங்களில் திரவுபதி அம்மன் திருவிழா மிக, மிக கோலாகலமாக நடைபெறும். வட மாவட்டங்களில் உள்ள திரவுபதி அம்மன் ஆலயங்களில் தீ மிதி இளவேனில் பெருவிழாவாக இதை நடத்துவார்கள்.

    இந்த விழாவின் சிறப்பே மதிய வேளையில் கோவில் மண்டபத்தில் படிக்கப்படும் பாரதமும் அதைத் தொடர்ந்து ஊர்ப் பொதுவெளியில் இரவில் நடத்தப்படும் கட்டைக் கட்டிக் கூத்தும்தான். தொலைக்காட்சித் தொடர்களும் செல்போன் களும் மக்களை ஆக்கிரமித்திருந்தாலும் விடிய விடிய நடைபெறும் கட்டைக் கூத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு விடுவார்கள்.

    3 இசைக் கலைஞர்கள் (பெட்டி, ஆர்மோனியம், முக வீணை) இரண்டு தாளக்காரர்கள் இவர்களோடு கூத்துக் கலைஞர்கள் 10 பேர் என ஒருநாள் கூத்துக்கு குறைந்தது 15 பேர் தேவை. 18 நாட்கள் பாரதப் போரை மையமாக வைத்து நடத்தப்படும் பாரதக் கூத்தும் 18 நாட்கள் நடைபெறும். 18-ம் நாள் போர் முடிவில் துரியோதனன் படுகளத்துடன் கூத்து நிறைவு பெறும். தன் சபதம் நிறைவேறிய மகிழ்ச்சியில் கூந்தலை முடிவார் திரவுபதி. நான்கரை சுருதியில் பாட வேண்டும். இரவு முழுவதும் அடவு கட்டி ஆட வேண்டும் என்பதால் பெண்கள் இந்தக் கலையில் குறைவு, ஆண்களே பெண் வேடங்களில் நடிப்பார்கள்.

    வட மாவட்டங்களில் பல ஊர்களில் இந்த திருவிழா குல தெய்வ வழிபாட்டை மேம்படுத்தும் விதமாக அமைந்திருக்கும். மக்கள் மனங்களில் திரவுபதி அம்மனே நிறைந்து இருப்பாள். சில ஊர்களில் நடக்கும் மகாபாரத சொற்பொழிவு தனித்துவம் நிறைந்ததாக இருக்கும். அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகரில் புகழ் பெற்ற திரவுபதி அம்மன் ஆலயத்தில் வருகிற 23-ந்தேதி முதல் ஆகஸ்டு மாதம்

    15-ந்தேதி வரை 115 நாட்களுக்கு மகாபாரத சொற்பொழிவு நடைபெற உள்ளது. திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் மேல்பள்ளிபட்டைச் சேர்ந்த வெ.கிருஷ்ணமூர்த்தி 115 நாட்களுக்கு இந்த சொற்பொழிவை நடத்துவது குறிப்பிடத்தக்கது.

    கொம்மடிக்கோட்டை ஸ்ரீவாலாம்பிகை

    தூத்துக்குடி மாவட்டம் கொம்மடிக்கோட்டையில் ஸ்ரீவாலை குருசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் சித்திரை திருவிழா நாளை தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. கொம்ம டிக்கோட்டை ஆலயத்தில் மகான் வாலைக்குரு, அவரது சீடர் காசியானந்தர் மற்றும் சித்தர்கள் நிறைந்துள்ளனர். ஒரே கருவறையில் இரு ஞானியர்கள் ஸ்ரீவாலாம்பி கையை வழிபட்டு சித்தி பெற்று உள்ளனர். இங்கு வழிபடுவதால் வளம் பெருகும்.

    பரசுராம ஜெயந்தி (22.4.23 சனிக்கிழமை)

    தசாவதாரங்களில் ஒன்று ஸ்ரீ பரசுராம அவதாரம். சித்திரை மாத சுக்லபட்ச திருதியை இரவின் முதல் யாமத்தில் புனர்வசு நட்சத்திரத்தில் ரேணுகைக்கும் ஜமதக்கனி மகரிஷிக்கும் மகனாக ஸ்ரீமகாவிஷ்ணு அவதரித்தார்.

    பரசு என்னும் ஆயுதம் தரித்ததால் பரசுராமர் என்ற பெயர் பெற்றார். ஏப்ரல் 22-ந்தேதி பரசு ராம ஜெயந்தி தினமாகும். அன்றைய தினம் இவரை வணங்கினால் நல்ல உடல் வலிமையும், தவறை எதிர்த்து போராடும் துணிவும், விஷ்ணுவின் அனுக்கிரகமும் கிடைக்கும்.

    ரங்கநாதரின் விருப்பம் திருநாள்

    ஸ்ரீரங்கத்தில் சித்திரையில் நடைபெறும் `விருப்பம் திருநாள்' விமரிசையான ஒன்று. இறைவன் ஆலயத்தில் இருந்து வீதியுலா வருவதற்கான தாத்பரியமே, ஆலயத்திற்கு வர முடியாதவர்களை நாடி இறைவனே வந்து அருளைப் பொழிய தரிசனம் கொடுக்கிறார் என்பதுதான். இந்த `விருப்பம் திருநாள்' உலா தொடங்குவதற்கு 10 நாட்களுக்கு முன்பாகவே நம்பெருமாள் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் சித்திரை வீதிகளில் வலம் வருவது மரபு.

    10 நாட்கள் நடக்கும் இந்த வைபவம் நேற்று தொடங்கியது.

    21-ந்தேதி வரை நடக்க உள்ள இந்த விழாவில் ஆலயத்திலிருந்து பெருமாளின் புறப்பாடு ஒரு வாகனத்திலும் திரும்ப கோவிலுக்கு வருவது வேறொரு வாகனத்திலும் இருப்பது சிறப்பு. வைபவத்தின் 2-ம் நாளில் பல்லக்கிலும், 3-ம் நாளில் சிம்ம வாகனத்திலும், 4-ம் நாளில் ஒளிரும் இரட்டை பிரபையிலும், 5-ம் நாளில் சேஷ வாகனத்திலும், 6-ம் நாளில் தங்க ஹம்ச வாகனத்திலும், 7-ம் நாளில் திருச்சிவிகையிலும், 8-ம் நாளில் வெள்ளிக்குதிரை வாகனத்திலும், பெருமாள் புறப்பாடு நடப்பது வழக்கம். ஏப்ரல் 17-ந்தேதி மிக முக்கிய நிகழ்வான ரங்க நாதர் முன்பு நெல் அளக்கும் நிகழ்வு நடைபெற உள்ளது. 19-ந்தேதி தேரோட்டம் நடக்கும்.

    ஸ்ரீரங்கநாதர் ஆலயத்தைச் சுற்றியிருக்கும் மாட வீதிகளில் நடக்கும் இந்த அருள் உலாவைக் காண்பதற்குப் பக்கத்து ஊர்களில் இருந்தும் பக்தர்கள் திரள்வது வாடிக்கை.

    தேரோட்டம் பார்க்கலாமா?

    தமிழ்நாட்டில் சித்திரை மாதத்தில் ஏராளமான கோவில்களில் தேர்த் திருவிழாக்கள் நடைபெறும். அவற்றில் மதுரை சித்திரைத் திருவிழா உலகப் புகழ் பெற்றது.

    இதே போல் தஞ்சாவூர் பெரிய கோவில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில், சமயபுரம் மாரியம்மன் கோவில், திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில், வீரபாண்டி கவுமாரியம்மன் கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், திருத்தணி சுப்ரமணியர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சித்திரை திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெறும்.

    பொதுவாக கோவிலைச் சுற்றியுள்ள வீதிகளில்தான் சித்திரை திருவிழா தேரோட்டங்கள் நடைபெறும். இந்தத் தெருக்கள் மாட வீதிகள், ரத வீதிகள், சித்திரை வீதிகள், தேரடி வீதிகள் போன்ற பெயர்களிலேயே அழைக்கப்படுகின்றன. தேரோட்டம் நடைபெறும் நாளன்று இந்த வீதிகளில் உற்சாகம் கொப்பளிக்க பொதுமக்கள் கூடுவார்கள். எங்கு பார்த்தாலும் அன்னதானம் கொடுப்பார்கள். அவ்வளவு ருசியாக இருக்கும். திரும்பும் இடமெல்லாம் நீர் மோர், பானகம், குளிர்பானங்கள் விநியோகம் நடந்து கொண்டே இருக்கும். பக்தர்களும் சலிப்பே இல்லாமல் வாங்கிக் குடித்துக் கொண்டே இருப்பார்கள். இவை எல்லாம் சேர்ந்து சித்திரை மாதத்தை மேலும் கோலாகலமாக்கும்.

    Next Story
    ×