என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![எதிர்மறை சக்திகளை விரட்டும் எருக்கம் பூ மாலை எதிர்மறை சக்திகளை விரட்டும் எருக்கம் பூ மாலை](https://media.maalaimalar.com/h-upload/2023/09/15/1950702-21.webp)
எதிர்மறை சக்திகளை விரட்டும் எருக்கம் பூ மாலை
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல்.
- கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.
விநாயகர் சதுர்த்தி வழிபாட்டுக்கு உகந்த நாள். மாதந்தோறும் வளர்பிறை சதுர்த்தியில் சுக்ல சதுர்த்தி விரதமும், தேய்பிறை சதுர்த்தியில் சங்கடஹர சதுர்த்தி விரதமும் உண்டு என்கிறது புராணம். சதுர்த்தி என்றால் நான்கு. 4-வது புருஷார்த்தத்தை (மோட்சம் வீடுபேறு) எளிதாக எட்ட வைப்பவர் விநாயகர், உலக இன்பத்துடன் பேரின்பத்தையும் அளிக்கும் தெய்வம் அவர்.
அவருடைய கழுத்துக்குக் கீழே உள்ள பகுதி, உலக இன்பத்துக்கு ஆதாரமான பிரபஞ்சத்தை சுட்டிக் காட்டும். பிரபஞ்சத்துக்கு அழிவும் தோற்றமும் உண்டு. அப்படி தோன்றி மறைவதை, 'மாயை' என சாஸ்திரம் வர்ணிக்கிறது.
அவரது மஸ்தகம் பிரம்மம். இது எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பரம்பொருள் என்பதைக் குறிக்கும். மிகப் பெரியது எனும் பொருளுக்கு ஏற்ப, அவரின் யானை முகம் எல்லோருக்கும் புலப்படும் படியாகத் தென்படுகிறது என்று விவரிக்கிறது புராணம்
(கண்டாதோ மாயயா யுக்தம் மஸ்தகம் பிரம்மவாசகம்), விநாயகரின் கரத்தில் உள்ள கொழுக்கட்டைக்கு மோதகம் என்றும் பெயர் உண்டு. 'மோதக ஹஸ்தா' எனப் போற்றுகிறது ஒரு செய்யுள். மகிழ்ச்சியைத் தரும் என்பதே மோதகத்தின் தாத்பரியம். ஆக, மகிழ்ச்சியை (மோதகம்) கையில் ஏந்தித் தயாராக வைத்திருக்கிறார் விநாயகர்.
நமது வேண்டுதலை எதிர்பார்க்காமல், நமக்கு வேண்டியதைத் தந்தருளும் வள்ளல் அவர். கொழுக்கட்டைக்கு உள்ளே இருப்பது பூரணம்: அதாவது நிறைவு. அது இனிப்பாக இருக்கும். இனிப்பு எல்லா உயிரினங்களுக்கும் பிடிக்கும்' என்கிறது புராணம்.
பூரணத்தை மறைத்திருக்கும் மாவு வெள்ளை நிறம். அந்த நிறத்தின் குணம் சாத்விகம். மோதகம், உருண்டை வடிவில் இருக்கும் தானே?! அதைத் தன் கரத்தில் ஏந்தியிருப்பதன் மூலம், 'உலகம் அனைத்துக்கும் மகிழ்ச்சியை அளிப்பேன்' என விநாயகர் சொல்லாமல் சொல்கிறார் என்றால், அது மிகையல்ல!
பிள்ளையாருக்கு மோதகம் படைத்து வழிபடும் இல்லத்தில் நிறைவான மகிழ்ச்சியும் குறையாத செல்வமும் உண்டாகும். 21 உளுந்துமணி அளவு, புருஷனின் உருவம்' என குட்சும புருஷனைச் சுட்டிக் காட்டுகிறது வேதம். அது, ஆனைமுகனுக்கும் பொருந்தும். ஆகவே, 21 இலைகள், 21 பூக்கள், 21 அருகம்புல் ஆகியவற்றால் விநாயக சதுர்த்தி தினத்தில் சிறப்பாக பூஜிப்பார்கள். அவற்றில், எருக்க இலையும் எருக்கம்பூவும் அடங்கும்!
பரம்பொருள், தான் படைத்த இலைகளையும் பூக்களையும் ஏற்று மகிழ்கிறார். இயற்கை செல்வமான பொருட்களை, இயற்கைக்குப் படைத்து விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்ளும் அற்புதத் தருணம் விநாயக சதுர்த்தி. இந்த நாளில் கணபதிக்கு எருக்கம்பூ மாலை சாற்றி வணங்குவது விசேஷம்.
காரடையான் நோன்பு அடை, வருஷப் பிறப்பு வேப்பம்பூ பச்சடி, திருவாதிரைக்களி இப்படி புண்ணிய தினங்களில் சில பொருள்கள் சிறப்புப் பெறுவது போல், விநாயகர் சதுர்த்தி அன்று எருக்கம்பூ மாலை சிறப்பிடம் பெறுகிறது.
விநாயகர் எளிமையானவர். அவருக்கு மிக எளிதில் கிடைக்கும் எருக்கம் பூவைச் சமர்ப்பித்தாலே போதும், அளவில்லா மகிழ்ச்சி அடைந்து எல்லையில்லா இன்பத்தை வரமாகத் தந்தருள்வார். இது மட்டுமன்றி, எருக்கம்பூ சூரிய கிரகத்துக்கு உரியது. இது, சகலவிதமான எதிர்மறை சக்திகளை விலக்கும் வல்லமை கொண்டது. ஆகவே பிள்ளையாருக்கு எருக்கம் பூ சமர்ப்பித்தால் காரியத் தடைகள் நீங்கும். ஜாதகத்தில் சூரியனின் நிலையால் உண்டாகும் பாதிப்புகளும் தோஷமும் விலகும். சூரிய பகவானின் அனுக்ரஹம் வாய்ப்பதால், ஆத்ம பலமும் ஆரோக்கியமும் உண்டாகும்.