என் மலர்
வழிபாடு
சிவனுடன் தியானத்தில் அமர்ந்த காளி தேவி!
- கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
- கோவிலின் மூலவர் வீரபத்திரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ளது, திற்பரப்பு என்ற ஊர். குமரி மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்குள்ள திற்பரப்பு அருவியை 'குமரி குற்றாலம்' என்பார்கள்.
கோதை ஆற்றின் கரையில் உள்ளது இந்த அருவி. பேச்சிப்பாறை அணையில் இருந்து 13 கிலோமீட்டர் தூரம் ஓடி வந்து, இங்குள்ள மலையில் 15 மீட்டர் உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது. இந்த அருவியைக் காண பல்வேறு மாவட்டம், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
இந்த இடத்தில் சிறப்புமிகுந்த சிவாலயம் ஒன்று உள்ளது. இதனை 'திற்பரப்பு மகாதேவர் ஆலயம்' என்று அழைக்கிறார்கள். மகாசிவராத்திரியை முன்னிட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 12 சிவாலயங்களுக்கு, சிவனடியார்கள் பலரும் ஒவ்வொரு ஆலயமாக ஓடிச் சென்று வழிபடும் வழக்கம் உள்ளது. இதனை 'சிவாலய ஓட்டம்' என்பார்கள்.
இந்த சிவாலய ஓட்டத்தில் மூன்றாவது வரும் ஆலயமாக, இந்த திற்பரப்பு மகாதேவர் ஆலயம் திகழ்கிறது. இந்த கோவிலின் மூலவரான வீரபத்திரர், சிவலிங்க வடிவில் காட்சி தருகிறார். இவரை 'ஜடாதரர்', 'மகாதேவர்' ஆகிய பெயர்களிலும் அழைப்பார்கள். இவ்வாலய மூலவர் வழக்கத்திற்கு மாறாக, மேற்கு நோக்கிய திசையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். அதேபோல் நந்தியானது, மூலவருக்கு நேர் எதிரில் இல்லாமல், சற்றே விலகி காணப்படுகிறது.
கோதை ஆற்றின் கரையில் உள்ள திற்பரப்பு அருவிக்கு தெற்கு திசையில் இந்த ஆலயம் உள்ளது. மகாதேவர் கோவிலின் தெற்கே உள்ள திருச்சுற்று மண்டபத்தில் இருக்கும் நிலவறை வழியாகவும், இந்த குகை கோவிலுக்கு பாதை உள்ளது.
இந்த குகை கோவிலின் உள்ளே பத்ரகாளி தேவியின் புடைப்புச் சிற்பம் உள்ளதாக சொல்லப்படுகிறது. திற்பரப்பு சிவன் கோவில், 2 ஏக்கர் பரப்புள்ள ஆலய வளாகத்தில் உள்ளது. ஆலயத்தைச் சுற்றிலும் நான்கு புறமும் சுமார் 15 அடி உயரம் உள்ள கருங்கல் மதில் சுவர் உள்ளது. இந்த கோவிலுக்கு நான்கு திசையிலும் வாசல்கள் உண்டு.
கோவிலின் மேற்கு வாசலில் மணி மண்டபம் காணப்படுகிறது. மேற்கு பிரகாரத்தில் உள்ள சாஸ்தா கோவிலில், 16 மீட்டர் உயரம் உள்ள செப்புக் கொடிமரம் இருக்கிறது. தென்மேற்கில் சிறிய சாஸ்தா கோவில் உள்ளது.
இங்கே பூரணை- புஷ்கலை ஆகிய தேவியருடன் சாஸ்தா சுகாசனத்தில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். கோவிலின் உள்ளே இருக்கும் கிருஷ்ணன் கோவில் பிரகாரத்தில் நாகர் சிற்பங்கள், கிருஷ்ணன் கோவில், முருகன் கோவில், மணமேடை ஆகியவை உள்ளன.
கிருஷ்ணன் கோவில் கிழக்கு பார்த்து உள்ளது. மூலவர் கிருஷ்ணன் கையில் வெண்ணையுடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். இவரது சன்னிதிக்கு எதிரில் முருகன் கோவில் உள்ளது.
கிழக்கு வெளி பிரகாரத்தின் வாசலில் 8 தூண்களை கொண்ட மண்டபம் உள்ளது. இந்த வாசல் நிரந்தரமாக அடைக்கப்பட்டுள்ளது. தெற்கு பிரகாரத்தில் ஆஞ்சநேயருக்கு பரிவார கோவில் உள்ளது. இக்கோவிலின் பொதிகை கட்டுமானத்தை கொண்டு, இது 16-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இக்கோவிலில் நிர்மால்ய தரிசனம், உஷா பூஜை, உச்சிகால பூஜை, சாயரட்சை, அத்தாழ பூஜைகள் உண்டு. மேலும் சிறப்பு பூஜைகளும் சிறப்பு சடங்குகளும் செய்யப்படுகின்றன.
இக்கோவிலின் திருவிழா பங்குனி மாதம் பூரட்டாதி நட்சத்திரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கி பத்து நாட்கள் நடைபெறும். மூன்றாம் திருவிழாவில் கலச பூஜையும், முளையடி பூஜையும் நிகழும்.
ஆறாம் திரு விழாவில் வட்டதீபம் நிகழ்ச்சியும், இரவில் கதகளியும் நடக்கும். எட்டாம் நாள் தாரை பூஜையும், ஒன்பதாம் நாள் பன்றி வேட்டையும் நடைபெறும்.
இவ்விரு நாட்களில் மேளதாளங்களுடன் யானை ஊர்வலம் உண்டு. பத்தாம் நாள் ஆறாட்டு நிகழ்ச்சியானது, அரவங்காடு காணிக்காரர்கள் மற்றும் மலையர்களின் பங்களிப்புடன் நடைபெறும்.
திற்பரப்பு சிவன் கோவிலுக்கு எழுத்து வடிவில் தலபுராணம் இல்லை. சிவபுராணம் சார்ந்த வாய் மொழிக் கதையே உள்ளது. சிற்பக்கலை வேலைப்பாடுகள் நிறைந்த இந்த கோவில் ஒரு கலைப் பொக்கிஷமாகும்.
கோவிலில் வீற்றிருக்கும் சிவபெருமானை ஒவ்வொரு ஆண்டும் சிவராத்திரியை முன்னிட்டு நடைபெறும் சிவாலய ஓட்டத்தின்போது பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் வந்து தரிசிப்பது, காலம் காலமாக நடைபெற்று வரும் சிறப்பான நிகழ்வாகும்.
சிவனின் பேச்சை கேட்காமல், தன் தந்தை தட்சன் நடத்திய யாகத்திற்கு தாட்சாயிணி (பார்வதி தேவி) சென்றாள். அங்கே தாட்சாயிணிக்கு அவமரியாதை நிகழ்ந்தது. இதனால் சிவன் தன் அம்சமாக வீரபத்திரரை உருவாக்கி, அவரை தட்சன் யாகம் செய்யும் இடத்திற்கு அனுப்பினார்.
வீரபத்திரர், அந்த யாகத்தை அழித்து அனைவரையும் தண்டித்தார். ஆனாலும் வீரபத்திரரின் கோபம் குறையவில்லை. எனவே அவர், தன் மனம் அமைதி பெற, கோதை ஆற்றின் பகுதியில் அமர்ந்து தியானம் செய்தார். அப்போது அவருடன் பத்திரகாளியும் தியானத்தில் அமர்ந்தாள்.
தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பாயும் நதியை பார்க்கும் வகையில், மேற்கு நோக்கி அமர்ந்து தியானம் செய்தார், வீரபத்திரர். எனவே தான் இங்குள்ள சிவாலயத்தில் மூலவர், மேற்கு நோக்கி அருள்வதாகவும் சொல்கிறார்கள்.
மேலும் மூலவருக்கு நதியை மறைக்காமல் இருக்கும் வகையில் நந்தியும் சற்று விலகி இருப்பதாக கூறுகின்றனர். இந்த ஆலயம் தினமும் காலை 5 மணி முதல் 11 மணி வரையும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்துவைக்கப்பட்டிருக்கும்.
அமைவிடம்
கன்னியாகுமரியில் இருந்து சுமார் 55 கிலோமீட்டர் தூரத்திலும், நாகர்கோவிலில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவிலும், மார்த்தாண்டத்தில் இருந்து திருவட்டாறு வழியாக சுமார் 18 கிலோமீட்டர் தூரத்திலும் திற்பரப்பு திருத்தலம் உள்ளது.