என் மலர்
வழிபாடு
ஹம்பி 56 இசைத் தூண்கள்
- ஹம்பி விட்டலா கோவில் வளாகத்தில் உள்ள கல் தேர் முக்கியமானது.
- இந்த கல் தேர், கைவினைஞர்களின் கட்டிடக் கலை திறமையை எடுத்துக்காட்டுகிறது.
பெங்களூருவில் இருந்து 315 கிலோ மீட்டர் தொலைவிலும், பெல்லாரியில் இருந்து 64 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்து உள்ளது புராதன நகரமான ஹம்பி. இங்கு எங்கு பார்த்தாலும், மன்னர்களின் கோட்டை, அரண்மனை, கோவில்களாக காட்சியளிக்கிறது. இது விஜயநகர பேரரசர்களின் ஆட்சிக் காலத்தின் செல்வம், போர்ப்படை, கலாசாரம், அழகியல் ஆகியவற்றை பறைசாற்றுகிறது.
ஹம்பியில் சிறந்த கலை அம்சத்துடன் கூடிய விரு பாக்ஷா கோவில், தாமரை மகால், விஜய விட்டலா கோவில் ஆகியவை புகழ்பெற்ற பகுதிகள் ஆகும். விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் தலைநகரமாக இருந்த ஹம்பி, பருத்தி, நறுமணபொருட்கள் மற்றும் ரத்தின கற்கள் விற்பனை செய்யும் சந்தையாக திகழ்ந்தது. விஜய விட்டலா கோவிலில் 56 இசை தூண்களுடன் கூடிய கலை அரங்கு உள்ளது. இந்த தூண்கள் ஒவ்வொன்றையும் தட்டும் போது, ஒவ்வொருவிதமான சத்தம் கேட்பது சிறப்பு.
இதில் முக்கியமானது ஹம்பி விட்டலா கோவில் வளாகத்தில் உள்ள கல் தேர். இதனை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராஜ்ஜியத்தின் கிருஷ்ண தேவராயர் உருவாக்கினார். திராவிட கட்டிடக் கலை பாணியில் வடிவமைக்கப்பட்ட இந்த கல் தேர், கைவினைஞர்களின் கட்டிடக் கலை திறமையை எடுத்துக்காட்டுகிறது. கிரானைட் கற்களின் அடுக்குகளால் கட்டப்பட்ட இத்தேரில் நான்கு சக்கரங்கள் உள்ளது.
முன்புறம் அழகான 2 யானைகள் தேரை இழுத்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. தேரின் ஒவ்வொரு பகுதியிலும் சிற்பங்கள் செதுக்கப்பட்டு உள்ளது. இத்தகைய சிறப்புகளை பெற்ற இந்த கல் தேர் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. இது இந்திய தொல்லியல் துறையினரால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது புதியதாக வெளியிடப்பட்ட 50 ரூபாய் நோட்டில் இந்த கல் தேர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் கர்நாடக அரசின் சுற்றுலாத் துறையின் சின்னமாகவும் இது விளங்குகிறது.