search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயர் பற்றி அறிந்திடாத சிறப்புகள்
    X

    அனுமன் ஜெயந்தி: ஆஞ்சநேயர் பற்றி அறிந்திடாத சிறப்புகள்

    • காதணியுடன் பிறந்த அனுமன்.
    • சூரியனின் சீடன் அனுமன்.

    காதணியுடன் பிறந்த அனுமன்

    மகாபாரதத்தில் கவச குண்டலங்களுடன் பிறந்தவர், கர்ணன். அதே போல் ராமாயணத்தில் காதில் அணிகலனுடன் பிறந்தவர் அனுமன். கிஷ்கிந்தாவின் இளவரசனாக இருந்த வாலி, பிற்காலத்தில் அஞ்சனைக்கு பிறக்கப் போகும் பிள்ளையால் தனக்கு ஆபத்து வரப்போகிறது என்பதை ஜோதிட வல்லுனர்களிடம் இருந்து அறிந்தான்.


    தன் எதிரியை கருவிலேயே அழிக்க நினைத்த வாலி, தங்கம், வெள்ளி, தாமிரம், இரும்பு உள்ளிட்ட பல உலோகங்களை சேர்த்து அம்பு ஒன்றை தயார் செய்தான். அதனை உறக்கத்தில் இருந்த அஞ்சனையின் வயிற்றில் எய்தான். ஆனால் அஞ்சனையின் வயிற்றில் இருந்த கரு, சிவபெருமானின் அம்சம் அல்லவா?.

    அந்த முக்கண்ணனின் கோபப் பார்வையில் அம்பு உருகி, அஞ்சனைக்கும் வயிற்றில் இருந்த கருவிற்கும் எந்த சேதத்தையும் ஏற்படுத்தவில்லை. அதோடு உருகிய அம்பு, அற்புத அணிகலன்களாக மாறி, கருவில் இருந்த குழந்தையின் காதுகளை அலங்கரித்தது. இதனால் அனுமன் பிறந்தபோதே, காதணிகளுடன் பிறந்ததாக புராணம் கூறுகின்றது.


    சூரியனின் சீடன்

    சிவபெருமானின் அவதாரமாக மண்ணில் தோன்றிய அனுமனுக்கு, குருவாக இருந்து கல்வி போதித்தவர் சூரிய பகவான். அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, "குருவே உங்களுக்கு என்ன குரு தட்சணை தர வேண்டும்?" என்று கேட்டார். அப்போது சூரியன், "வரும் காலத்தில் தன்னுடைய மகன் சுக்ரீவனுக்கு ஆலோசகராக இருந்து, அவனை வழிநடத்திச் செல்ல வேண்டும்" என்றார்.

    அதன்படிதான், சுக்ரீவன் தன்னுடைய அண்ணன் வாலியால் விரட்டிவிடப்பட்ட போதும், அவனுக்கு அருகிலேயே இருந்து அவனுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கினார், அனுமன். அவர்தான் ராமபிரான் மூலமாக வாலிக்கும், சுக்ரீவனுக்கும் இருந்த பகையை முடிவுக்கு கொண்டு வந்து, அவனை வானர அரசனாக்கினார்.


    ராமாயணம்-மகாபாரதம்

    ராமாயணத்தில் ராமருடன் மட்டுமல்லாது, மகா பாரதத்தில் கிருஷ்ணருடனும் பழகியவர், அனுமன். கிருஷ்ணர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, குருசேத்திரப் போரில் அர்ச்சுனனின் தேரின் மீது கொடியாக வீற்றிருந்தது அனுமனே, அந்த வகையில் அனுமனின் முன்பாகத்தான். கீதா உபதேசத்தை அர்ச்சுனனுக்கு கிருஷ்ண பரமாத்மா கூறினார்.

    கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு. மகாபாரதத்தில் நடந்த போரின் போது, அர்ச்சுனனின் சாரதியாக கிருஷ்ணர் இருந்தார். அதேபோல் அவனது தேரில் கொடியாக அனுமன் இருந்தார். மகாபாரதத்தில் பாண்டவர்களுக்காக, கவுரவர்களிடம் கிருஷ்ணர் தூது சென்றார்.

    ராமாயணத்தில் ராமருக்காக, ராவணனிடம் தூது சென்றவர், அனுமன். கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, கோகுல மக்களை காத்து நின்றார். அனுமன், சஞ்சீவி மலையை தூக்கி வந்து லட்சுமணனைக் காத்தார். எல்லாவற்றுக்கும் மேலாக விஸ்வரூபதரிசனம் தந்த தெய்வங்களின் பட்டியலில் கிருஷ்ணருக்கும், அனுமனுக்கும் இடமுண்டு.


    சிறிய திருவடி

    மகாபாரதத்தில் வரும் கிருஷ்ணன்- அர்ச்சுனன் நட்பை விட உயர்வானது, ராமாயணத்தில் ராமருக்கும், அனுமனுக்கும் உள்ள பந்தம். மகாபாரதத்தில் அர்ச்சுனனுக்காக கடவுளான கிருஷ்ணர் துணை நின்றார். ஆனால் ராமாயணத்தில் கடவுளான ராமருக்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாது சேவை புரிந்தவர் அனுமன்.

    இப்படிப்பட்ட பெருமைக்குரியவர் என்பதால் தான் மகாவிஷ்ணு, கருடனுக்கு அடுத்தபடியாக தன்னுடைய வாகனமாக அனுமனையும் ஏற்றுக்கொண்டார். அதேசமயம் கருடனுக்கு இல்லாத பெருமை அனுமனுக்கு உண்டு.

    அது பெரிய திருவடியான கருடன் பெரும்பாலும் பெருமாள் கோவிலில் தனி சன்னிதியில் அல்லது பெருமாளுக்கு எதிரில்தான் அருள் பாலிப்பார். ஆனால் அனுமன் பெருமாள் கோவில்களில் இருந்தாலும், அவருக்கென்று தனியாகவும் பல ஆலயங்கள் எழுப்பப்பட்டு இருக்கின்றன. அதற்கு அவரது தியாகமும், தன்னலமற்ற இறை சேவையும்தான் காரணம்.

    Next Story
    ×