என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்! தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்!](https://media.maalaimalar.com/h-upload/2025/02/11/9180807-newproject4.webp)
தை மாத பவுர்ணமியின் சிறப்புகள்!
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும்.
- உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே.
பவுர்ணமி வழிபாடு என்பது பழங்காலத்தில் இருந்தே நடைமுறையில் இருந்து வருகிறது. தை மாத பவுர்ணமியான தைப்பூசத் திருவிழா உலகமெங்கும் உள்ள தமிழர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி என்கிற இந்த ஆறு மாத காலத்தை 'உத்திராயன புண்ணிய காலம் என்று கூறுவார்கள். இந்த புண்ணிய காலத்தில் வருகிற முதல் பவுர்ணமி, தை மாத பவுர்ணமி ஆகும்.
இதனால் நம் விருப்ப தெய்வங்களின் நேரடிப் பார்வை நம் மீது படும் யோகம் உண்டாகி, நம் வேண்டுதல்கள் அனைத்தும் நிறைவேறும். நல் வாய்ப்புகள் எளிதாகக் கிட்டும்.
தை அமாவாசை போல தை பவுர்ணமி விரதத்திற்கும் அதிகமான பலன்கள் உண்டு. பவுர்ணமி என்பது முழு நிலவு வானில் பிரகாசமாகத் தோன்றும் அற்புதமான நாள். இந்தநாளில் நல்ல அதிர்வலைகள் ஏற்படும்.
அப்படிப்பட்ட சக்தி மிகுந்த நாளில், நாம் வழிபாடு செய்வது தீய சக்திகளி டம் இருந்து நம்மைக் காக்கும். பவுர்ணமி நன்னாளில் வழிபாடு செய்தால் வாழ்வில் இதுவரை அடைந்த துன்பங்கள் அனைத்தும் விலகும்.
ஒவ்வொரு மாத பவுர்ணமியும் ஒவ்வொரு குறிப்பிட்ட நட்சத்திரத்தில் தோன்றும். அந்த வகையில் தை மாதம் வரும் பவுர்ணமி, பூச நட்சத்திரத்துடன் இணைந்து, 'தைப்பூசம்' என்று வழிபடப்படுகிறது.
இந்த தைப்பூசமானது, சிவபெருமானுக்கு மட்டுமின்றி, முருகப்பெருமானுக்கும் உகந்த வழிபாட்டு நாளாகும். சிதம்பரம் பொன்னம்பலத்தில் இறைவன் ஆடலரசனாக உலக மக்களுக்கு காட்சியருளிய நாள், தைப்பூசமாகும்.
உமையம்மை வேலவனுக்கு சக்தி வேலை வழங்கிய நாளும் இதுவே. தேவ குருவான பிரகஸ்பதி பூச நட்சத்திரத்திற்கு உரிய வர். அவர் அறிவுக் கடவுள்' என்று போற்றப்படுகிறார்.
எனவே பூச நட்சத்திரத்தில் பவுர்ணமி அமையும் நாளான தைப்பூசத்தன்று, புண்ணிய திருத்தலங்களில் உள்ள தீர்த்தங்களில் நீராடினால் அறிவாற்றல் பெருகும். மனக்குழப்பம் அகலும் என்பது ஐதீகம்.
தை மாத பவுர்ணமியில் விரதம் இருந்து, வீட்டில் விளக்கு ஏற்றி சூரிய பகவானை வழிபட வேண்டும். அப்போது வெல்லம் கலந்த பாயசம் செய்து, அதை நைவேத்தியமாக படைத்து வழிபட்டால் ஆயுள் விருத்தியாகும்.
தை மாதம் வரும் பவுர்ணமியில் திருவிடைமருதூர் திருக்கோவிலில் தைப்பூசம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் முருகனுக்கு காவடி எடுக்கப்படும். திருச்சேரை சாரநாதப் பெருமாள் கோவிலில், தைப்பூசம் அன்று காவிரிக்கு இறைவன் காட்சி தந்த நாளாகக் கருதி, தேர் திருவிழா நடத்தப்படுகிறது.
வள்ளலார் ராமலிங்க சுவாமிகள், ஒரு தை மாதவெள்ளிக்கிழமை புனர்பூச நட்சத்திரம் அன்றுதான் இறை ஒளியுடன் கலந்தார். எனவே வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுக்குப்பத்தில், தைப்பூசத் தன்று லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலாரை வழிபடுவார்கள்.
மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் தைப்பூசத் திருநாளையொட்டி முதல் நாளில் சந்திரசேகர சுவாமி தெப்போற்சவமும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களில் சிங்கார வேலர் தெப்போற்சவமும் நடைபெறும்.
சிதம்பரத்திற்கு திருப்பணிகள் செய்த இரணியவர்மன் என்ற மன்னன், நேருக்கு நேராக நடராஜரின் தரிசனத் தைக் கண்ட நாள் தை மாத பவுர்ணமி ஆகும்.
இந்த நாளில் சமயபுரம் மாரியம்மன், வட திருக்காவிரிக்கு எழுந்தருளி, அண்ணனாகிய அரங்கநாதரிடம் இருந்து பட்டாடை, பரிவட்டம் மற்றும் சீர்வரிசைகளைப் பெற்றுத் திரும்பும் நிகழ்வு விமரிசையாக நடைபெறும்.