என் மலர்
வழிபாடு

அகஸ்தியருக்கு சிஷ்யனான இடும்பன்

- சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது.
- இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் பழனியம்பதியாக உள்ளது.
பார்வதி திருமணம் நடைபெறும் சமயத்தில் தென் கோடியிலுள்ள மக்கள் அனைவரும் திருமண வைபவத்தை காண வடகோடியை நோக்கி சென்றனர்.
அந்த சமயம் தென்கோடி உயர்ந்தும் வடகோடி தாழ்ந்தும் இருக்க, சிவபெருமான் அகஸ்தியரை நோக்கி நீ தென்கோடியில் பொதிகை நோக்கி சென்றடைவாய் என்று பணித்தார்.
அதற்கு அகஸ்தியர், எல்லோரும் உங்கள் திருமண வைபவத்தை காண நான் மட்டும் தங்கள் திருமணத்தை காண கொடுத்து வைக்காதவனாக உள்ளேன் என்று சொன்னார். அதற்கு இறைவன், உனக்கு அங்கே திருமண வைபவ காட்சியளிக்கிறேன் என்றார்.
எல்லோரும் வடதிசை நோக்கி வரும்போது அவர்கள் அனைவரும் பலம் உடையவர், அதனால் தான் நீ தென்திசை சென்றால் சமமாகும் எனக் கூறினார்.
அதன்பின் தென்திசையை நோக்கி வரும்போது, இடும்பாசுரன் (சூரபத்மன் முதலான அசுரர்களின் தலைவன்), அகஸ்தியரை எதிர்கொண்டு அவரை நமஸ்கரித்து தன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றான். அகஸ்தியரும் இடும்பனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டார்.
இடும்பாசுரன் தங்களுக்குண்டான பணிவிடை செய்ய வேண்டும் என்று வேண்டியபோது, அகஸ்தியர் அவசரமாக தென்திசை நோக்கி வந்ததால் எனது சிவபூஜையை சென்று எடுத்து வருவாயாக என்று பணித்தார்.
இடும்பாசுரன் வடதிசை நோக்கி சென்று மலையில் சிவபூஜை எங்கு உள்ளது என்பதை அறியாது சிவகிரி மற்றும் சத்யகிரி ஆகிய 2 மலைகளையும் காவடியாக எடுத்துக் கொண்டு தென் திசையை நோக்கி வரும்போது வழியறியாது சென்னிமலை வந்தடைந்தான்.
அப்போது சென்னிமலை துவாபரயுகத்தில் புஷ்பகிரியாக இருந்தது. இடும்பாசுரன் பொதிகைக்கு வழி அறியாது இருக்கும்போது, முருகப் பெருமான் ராஜகுமாரனாக காட்சி அளித்து பொதிகைக்கு செல்ல இடும்பனுக்கு வழி காட்டிய இடம்தான் புஷ்பகிரி (சென்னிமலை) ஆகும்.
சென்னிமலை ஆதிபழனி என்றும் அழைக்கப்படுகிறது. இடும்பன் காவடியாக கொண்டு வந்த மலைதான் தற்போது பழனியம்பதியாக உள்ளது.