என் மலர்
வழிபாடு
இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் பாதயாத்திரை பக்தர்கள் குவிந்தனர்: நாளை சிறப்பு வழிபாடு
- நாளை இரவு முழுவதும் அம்மன் சர்வ அலங்காரத்துடன் சப்பரத்தில் அமர்ந்து காட்சி அளிப்பார்.
- சனிக்கிழமை அதிகாலை 6 மணிக்குள் அம்மன் புறப்பாடாகி மீண்டும் கோவில் சென்றடைகிறார்.
சாத்தூர் அருகே இருக்கன்குடி மாரியம்மன் கோவிலில் ஆடி மாத கடைசி வெள்ளி திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு்க்கான விழா கடந்த 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.
நாளை ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை என்பதால், இதையொட்டி பாதயாத்திரையாகவும், வாகனங்களிலும் வந்து பக்தர்கள் குவிந்த வண்ணமாக உள்ளனர்.
விழாவையொட்டி நாளை, அதிகாலை 2 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடைபெறும். மேலும் 6 கால பூஜைகளும் நடக்கிறது. அதாவது, காலை 7, 9, 11 மணி அளவிலும், மதியம் 1 மணி, மாலை 5 மணி, இரவு 8 மணி அளவில் ஆறுகால பூஜைகள் நடைபெறும்.
நாளை பக்தர்களின் தரிசனத்திற்காக இரவு 11 மணி வரை நடை திறக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பார். நாளை காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் உற்சவர் மாரியம்மன் கும்ப பூஜை, யாக பூஜை நடைபெற்று சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெறும்.
மதியம் 2 மணிக்கு மேல் 3 மணிக்குள் ரிஷப வாகனத்தில் உற்சவர மாரியம்மன் கோவிலில் இருந்து எழுந்தருளி வீதி வலம் வருகிறார். இரவு முழுவதும் அம்மன் சர்வ அலங்காரத்துடன் சப்பரத்தில் அமர்ந்து காட்சி அளிப்பார்.
மறுநாள் (சனிக்கிழமை) அதிகாலை 6 மணிக்குள் அம்மன் புறப்பாடாகி மீண்டும் கோவில் சென்றடைகிறார்.
விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் கருணாகரன் மற்றும் அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி தலைமையில் அறங்காவலர் குழுவினர், கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். மேலும் பாதுகாப்பு பணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.