என் மலர்
வழிபாடு

காரைக்குடி முத்துமாரியம்மன் கோவிலில் அம்மியில் மஞ்சள் அரைக்கும் நிகழ்ச்சி இன்று நடக்கிறது

- 22-ந்தேதி வளையல் அலங்காரம் நிகழ்ச்சி நடக்கிறது.
- கடைசி வெள்ளிக்கிழமையான 11-ந்தேதி கோமாதா பூஜை நடக்கிறது.
காரைக்குடி மீனாட்சிபுரத்தில் இந்து சமய அறநிலையத்திற்குட்பட்ட பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் ஆடி மாதங்களில் வரும் செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் முக்கிய வழிபாடு நிகழ்ச்சிகளும், பக்தர்கள் சார்பில் பால்குடம் எடுத்தல், திருவிளக்கு பூஜை வழிபாடு, பச்ச மஞ்சள் அரைத்தல், மஞ்சள் அபிஷேகம், கோமாதா பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம்.
தற்போது ஆடி மாதம் பிறந்துள்ளதால் நேற்று முன்தினம் முதல் செவ்வாய்க்கிழமையையொட்டி நகரத்தார்கள் சமுதாயம் சார்பில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து பாலாபிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. நாளை ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமை என்பதால் நூறு கிலோ வரை பச்ச மஞ்சள் அம்மியில் வைத்து பக்தர்கள் அரைத்து அதைக்கொண்டு அன்றைய தினம் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது.
இதையடுத்து இன்று மாலை கோவில் வளாகத்தில் வரிசையாக அம்மியை வைத்து பெண்கள் அதில் பச்ச மஞ்சள் வைத்து அரைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இவ்வாறு அரைக்கப்பட்ட இந்த மஞ்சளை கொண்டு நாளை மதியம் உச்சி கால பூஜையின் போது அம்பாளுக்கு அபிஷேகம் நடக்கிறது.
வருகிற 22-ந்தேதி வளையல் அலங்காரம் நிகழ்ச்சியும், 25-ந்தேதி பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியும், 28-ந் தேதி மாலை திருவிளக்கு பூஜை வழிபாடு நிகழ்ச்சியும், ஆகஸ்டு 4-ந்தேதி 1008 சங்காபிஷேகம் நிகழ்ச்சியும், கடைசி வெள்ளிக்கிழமையான 11-ந்தேதி கோமாதா பூஜையும் நடக்கிறது.
விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் செயல் அலுவலர் மகேந்திரபூபதி மற்றும் கோவில் பணியாளர்கள், சேவைக்குழுவினர் செய்து வருகின்றனர்.