என் மலர்
வழிபாடு
புகழ்பெற்ற கொண்டத்து காளியம்மன் கோவில் குண்டம் திருவிழா
- கோவில் முன்பு 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது.
- குண்டத்தையொட்டியே அம்மனுக்கு கொண்டத்துக்காளியம்மன் என்று பெயர் ஏற்பட்டது.
கொங்கு திருநாட்டில்அவினாசி லிங்கேஸ்வரர் எழுந்தருளியுள்ள அவினாசி திருத்தலத்திற்கு அருகாமையில் அமைந்து இருக்கும் புகழ்மிக்க ஊர் பெருமாநல்லூர். இந்த பகுதியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் தங்கள் வழிபாட்டு தெய்வமான துர்க்கை அம்மனை ஒரு மரத்தடியில் முதலில் எழுந்தருள செய்தனர்.
காட்டு விலங்குகளாலும், இயற்கை சீற்றங்களாலும், பகைவர்களாலும் ஏற்படும் அச்சத்தை போக்கும் பேராற்றல் மிக்கவள் துர்க்கை என்னும் காளிதேவியே என்று பெரிதும் அவர்கள் நம்பினார்கள். எனவே காளிதேவியின் உருவத்தில் எட்டு திருக்கரங்கள் அமைத்து, அந்த கரங்களில் பல ஆயுதங்களை ஏந்தி காட்சிதருபவளான துர்க்கை அம்மனை சிலையாக வடித்து வணங்கினார்கள். பின்னர் இந்த அம்மனே கொண்டத்து காளியம்மன் என்றானது.
குண்டத்துக்காளியம்மன் கோவில் மக்களால் கொண்டத்து காளியம்மன் கோவில் என்று அழைக்கப்படுகிறது. கோவில் முன்பு 60 அடி நீளம் உடைய குண்டம் உள்ளது. பங்குனி மாதம் பண்ணாரி அம்மன் திருவிழா நடைபெறும் நாட்களையொட்டி இந்த கோவிலில் திருவிழா நடைபெறும். இந்த கோவிலில் நடைபெறும் குண்டம் திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும்.
குண்டத்தின்போது ஒவ்வொரு பக்தரும் பக்தியுடன் குண்டம் இறங்குவது கண்கொள்ளா காட்சியாகும். குண்டத்தையொட்டியே அம்மனுக்கு கொண்டத்துக்காளியம்மன் என்று பெயர் ஏற்பட்டது. விரதம் இருந்து குளித்து, ஈரத்துணியுடன் வேப்பிலையை கையில் ஏந்தி, தீ மிதிப்பதே மரபாகும்.