என் மலர்
வழிபாடு
குலசேகரன்பட்டினம் தசரா திருவிழா 26-ந்தேதி தொடக்கம்
உடன்குடி
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி அருகே உள்ள குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா பெருந்திருவிழா தமிழகத்தில் முதலிடம் வசிக்கும் தசரா திருவிழாவாகும்.
திருவிழாவில் வேடம் அணியும் பக்தர்களுக்கு வேண்டுதல்கள் எல்லாம் நிறைவேறும் என்பது ஐதீகம். 2 வருடமாக கொரோனா தாக்கத்தால் கோவில் முன்பு நடந்த சூரசம்ஹாரம் இந்த ஆண்டு முதல் மீண்டும் கடற்கரையில் நடக்கிறது.
காளி வேடம் அணியும் பக்தர்கள் 61 நாள், 41 நாள் என கடும் விரதம் இருந்து காளி வேடமணிவது மிகவும் சிறப்பாகும். மேலும் 100-க்கும் மேற்பட்ட சுவாமி வேடங்களை அணிந்து 10-ம் திருநாளான சூரசம்ஹாரம் அன்று ஓம் காளி, ஜெய் காளி என்ற கோஷத்துடன் அன்னை முத்தாரம்மன்னை பின்தொடர்ந்து சென்று சூரனை சம்ஹாரம் செய்யும் காட்சி காண முடியாத ஒரு அரும்பெரும் காட்சியாகும். இப்படி சுவாமி வேடங்கள் அணியும் பக்தர்களுக்கு மிகமிக முக்கியமானது தலைமுடிதான்.
உடன்குடி மற்றும் சுற்று வட்டார பகுதியில் ஏராளமான தொழிலாளர்கள் சடைமுடி, அலங்கார முடி, சுவாமி முடி, முனிவர்கள் முடி இப்படி விதவிதமான முடிகளை தயாரிப்பது தீவிரம் காட்டி வருகின்றனர். சிலர் தலையின் சுற்றளவு கொடுத்து அதற்கு தகுந்தார் போல் முடிகளை தயார் செய்ய முன் ஆர்டர் கொடுக்கின்றனர்.
ரூ.1000 முதல் ரூ.3500 வரை தரம்வாரியாக முடிகள் உள்ளதாக தயாரிப்பவர்கள் கூறுகிறார்கள். கோவிலில் கொடி ஏறியதும் கோவிலில் திருகாப்பு வாங்கி வலது கையில் கட்டி தங்களுக்குப் பிடித்தமான வேடங்கள் அணிந்து ஊர் ஊராக சென்று அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்து 10-ம் திருநாள் ஆன சூரசம்ஹாரம் அன்று கோவிலில் காணிக்கையை சேர்ப்பார்கள்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் பல்வேறு அனைத்து மாநிலங்களிலும், வெளிநாட்டில் வாழும் தமிழர்கள் தசரா திருவிழாவில் கலந்து கொள்வதற்காகவே வந்து அம்மனுக்கு வேடம் அணிவது சிறப்பாகும்.
சுமார் 10 நாட்களாக நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் ஆங்காங்கே குலசேகரன்பட்டினம் தசரா பக்தர்கள் அம்மன் பெயரில் காணிக்கை வசூல் செய்வது மேலும் சிறப்பாகும். சிறுவர்களுக்கு பிடித்தமான குரங்கு, கரடி, புலி என்று பல்வேறு மிருகங்கள் வேடம் அணிவதும் பெண் வேடம் மற்றும் மாடல் அழகிகள் உட்பட எண்ணிக்கையில் அடங்காத வேடங்கள் அணிந்து, வேடங்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற சொல்லுக்கு ஏற்ப வேடம் அணிவார்கள்.
சுவாமி வேடம்அணியும் சில பக்தர்களை பார்க்கும்போது அந்த சுவாமியே நேரடியாக வந்து காட்சி கொடுப்பதாக தெரியும், இப்படி வேடம் அணிந்தவர்கள், பழங்கால தமிழர் பண்பாட்டை நினைவுபடுத்தும் கரகம், காவடி, நையாண்டி, கோலாட்டம், சிலம்பாட்டம், களியாட்டம் போன்ற கலைநிகழ்ச்சியுடன் ஊர் ஊராகராக சென்று தசரா குழு உடன் இணைந்து கலை நிகழ்ச்சி நடத்தி, அம்மன் பெயரின் காணிக்கை வசூல் செய்வது ஒரு பெரிய வரப்பிரசாதம் ஆகும்.
தசரா திருவிழாவிற்கான ஆரம்ப கட்ட பணிகள் குலசேகரன்பட்டினத்தில் வேகமாக நடந்து வருகிறது, வாகனங்கள் வந்து செல்லும் ஒரு வழிப்பாதை, இருசக்கரம் வாகனங்கள் நிறுத்துமிடம், நான்கு சக்கர வாகனங்களை எதுவரை அனுமதிப்பது? அவசர தேவையான வாகனங்கள் எந்த வழியாக வருவது?போவது இப்படி பல்வேறு நடவடிக்கைகளை கோவில் நிர்வாகத்தினர் எடுத்து வருகின்றனர்.
உடன்குடி, குலசை, திருச்செந்தூர், பகுதியில் ஏராளமான கடைகளில் தசரா வேடம் போடும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களும் மலை போல் விற்பனைக்கு குவிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.