என் மலர்
வழிபாடு
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் கொடி மரத்தில் கவசம் பொருத்தப்பட்டது
- 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
- காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 418 ஆண்டுகளுக்கு பிறகு நாளை (புதன்கிழமை) கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனையொட்டி கடந்த 29-ந் தேதி முதல் கும்பாபிஷேக பூஜை நடந்து வருகிறது. நேற்று காலையில் தங்கமுலாம் பூசப்பட்ட செம்பு கவசங்கள் கோவிலை சுற்றி கொண்டு வரப்பட்டு கொடிமரத்தின் அருகில் வைக்கப்பட்டது. திருநெல்வேலி இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் ஜான்சிராணி செம்பு கவசங்களை டிஜிட்டல் தராசில் எடை போட்ட பின்னர் கொடி மரத்தில் பொருத்துவதற்கு உத்தரவு பிறப்பித்தார்.
அதன் பிறகு ஸ்தபதி பாபு தலைமையில் கொடி மரத்தில் கவசங்கள் பொருத்துவதற்கான ஏற்பாடு நடந்தது. மேலும் ஒற்றைக்கல் மண்டபத்தில் பூஜைக்கு பிறகு கும்ப கலசங்களில் தானியங்களை உபயதாரர்கள் மற்றும் பக்தர்கள் நிறைத்தனர். பின்னர் மாலையில் கோவில் விமானத்தில் கும்ப கலசங்கள் பொருத்தப்பட்டது. தொடர்ந்து வேளுக்குடி கிருஷ்ணன் சாமிகளின் ஆன்மிக உரை, காணிமடம் குழுவினரின் நர்த்தன ரம்மிய பஜனையும் நடந்தது.
கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதனையொட்டி அதிகாலை 3.30 மணிக்கு கணபதி ஹோமம், பிரசாத பிரதிஷ்டை, சித்பிம்ப சம்மேளனம், உச்ச பூஜை, பிரதிஷ்டை, தட்சிணா நமஸ்காரம், பஞ்சவாத்தியம் நடைபெறுகிறது. காலை 6 மணி முதல் 6.50 மணி வரையிலான நேரத்தில் அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
கும்பாபிஷேக நிகழ்ச்சியை அம்பலக்கடை புலவர் ரவீந்திரன், வெள்ளாங்கோடு அரசு தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை மீனாம்பிகா ஆகியோர் வர்ணனை செய்கின்றனர். தொடர்ந்து 7 மணிக்கு இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் சார்பில் அன்னதானம் வழங்கப்படுகிறது. 8 மணிக்கு துவாபர யுகத்தின் சிறப்பு என்னும் தலைப்பில் பரத நாட்டியமும், 9 மணிக்கு திருக்கோவிலூர் ஜீவ.சீனுவாசன் வழங்கும் ஞான அமுது தேனிசையும், மாலை 5 மணிக்கு குளச்சல் சிவசங்கரின் கும்பாபிஷேக மகிமை ஆன்மிக சொற்பொழிவும், இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் நடைபெறுகிறது.
இதற்கிடையே கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை பார்வையிட நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் கோவிலுக்கு வந்தார். அங்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரன், தக்கலை உதவி போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சந்திரசேகரன், திருவட்டார் இன்ஸ்பெக்டர் ஷேக் அப்துல்காதர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கோவிலில் பக்தர்கள் வரும் பாதை, திரும்பிச்செல்லும் பாதை, அன்னதான மண்டபத்துக்கு செல்லும் பாதை, பக்தர்கள் கூட்டம் அதிகமானால் அவசரமாக வெளியேற வேண்டிய பாதை, வாகனங்கள் நிறுத்துமிடம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
பின்னர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் நிருபர்களிடம் கூறுகையில், கும்பாபிஷேக நாளில் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் பக்தர்கள் வரை இங்கு கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பாதுகாப்பு பணிக்காக வெளி மாவட்டங்களைச் சேர்ந்த போலீசார் வரவழைக்கப்படுகிறார்கள். மேலும் சீருடை அணியாமல் சாதாரண உடையிலும் போலீசார் கண்காணிப்பார்கள். இதுபோக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டும் கண்காணிக்கப்படும் என்றார்.
கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு வாகனங்களில் வரும் பக்தர்களின் வசதிக்காக ஆற்றூர் வி.கே.எஸ்.டி. கல்வி நிறுவனம், ஆற்றூர் மரியா கல்லூரி வளாகம், கழுவன் திட்டையில் இருந்து ஆற்றுக்குச்செல்லும் பாதை, எக்செல் பள்ளி வளாகம், திருவட்டார் அரசு உயர்நிலைப்பள்ளி, திருவட்டார் போக்குவரத்துக்கழக பணிமனை ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக வாகனங்கள் வருகை தந்தால் புத்தன்கடை புனித வியாகப்பர் ஆலய வளாகம், திருவட்டார் அருணாசலம் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்படும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் திருவட்டாருக்கு மாவட்டத்தின் அனைத்து பகுதியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கபப்டுகிறது.