search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் திருவிழா: தேர் கட்டுமான பணிகள் தீவிரம்
    X

    தேர் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதை படத்தில் காணலாம்.

    கும்பகோணம் சாரங்கபாணி கோவில் திருவிழா: தேர் கட்டுமான பணிகள் தீவிரம்

    • மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும்.
    • தேரோட்டம் 4-ந்தேதி நடக்கிறது.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்திப்பெற்ற சாரங்கபாணி பெருமாள் கோவில் உள்ளது. 108 வைணவ கோவில்களில் ஒன்று, 4 ஆயிரம் திவ்ய பிரபந்தம் இயற்றப்பட்ட கோவில் என பல்வேறு சிறப்புகளை கொண்டது இக்கோவில்.

    ஆழ்வார்கள் தம் பிரபந்தங்களில் இப்பெருமானை குடந்தைக் கிடந்தான் என்று அழகுற அழைக்கின்றனர். இக்கோவிலில் ஆராவமுதன் எனும் சாரங்கபாணி பெருமாள் எழுந்தருளி உள்ளார். திருவரங்கனின் புகழைக் கூறும் பஞ்சரங்க திருத்தலங்களில் ஒன்றாகவும் இக்கோவில் உள்ளது.

    கும்பகோணத்தில் உள்ள வைணவக் கோவில்களில் மிகப் பழைமை வாய்ந்தது சாரங்கபாணி கோவிலாகும். இக்கோவிலின் நடுப்பகுதி தேரின் அமைப்பை போல் உள்ளது சிறப்பம்சமாகும். இதில் உள்ள குதிரைகள், யானைகள் ஆகிய சிற்பங்களும், சக்கரங்களும், கல்லினால் ஆனவை. இந்த கல்தேரை காண வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வந்து செல்கிறார்கள்.

    இங்கு ஆண்டுதோறும் நடைபெறும் சித்திரை தேர் திருவிழா மிகவும் பிரசித்திப்பெற்றது. சாரங்கபாணி சாமி கோவில் தேர் திருவாரூர் ஆழித்தேருக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேருக்கும் இணையான சிறப்பு பெற்ற தேராகும். அடிப்பாகம் 25 அடி அகலம், மேல் தட்டு 35 அடி அகலம் கொண்டது. உயரம் 30 அடி ஆகும். தேர் அலங்கரிக்கப்படும் போது அதன் உயரம் 110 அடியாக இருக்கும்.

    தற்போது சாரங்கபாணி கோவிலில் சித்திரை திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 4-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது.

    இதையொட்டி தற்போது தேர் கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 200 டன் சவுக்கு உள்ளிட்டவற்றை கொண்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து தேர்ச்சீலை, குதிரைகள் உள்ளிட்டவற்றை தேரில் வைத்து அலங்கரிக்கப்பட உள்ளது.

    Next Story
    ×