search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மகா சிவராத்திரி: நான்கு கால பூஜையும்... பலன்களும்...
    X

    மகா சிவராத்திரி: நான்கு கால பூஜையும்... பலன்களும்...

    • முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.
    • இரண்டாம் கால பூஜை வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர்.

    மகாசிவராத்திரி வழிபாடு பல்வேறு பலன்களை வழங்குவதாக ஆன்மிக சான்றோர்கள் கூறுகின்றனர். புராணங்களிலும், இந்த சிவராத்திரி தினத்தில் நான்கு காலங்களிலும் பூஜிக்கும் முறை, அதனால் கிடைக்கும் பலன் சொல்லப்பட்டுள்ளது. அதை பார்க்கலாம்.

    முதல் கால பூஜை (மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை)

    ஜோதி வடிவாக நின்ற ஈசனின் முடியைத் தேடி, அன்னப்பறவையாக சென்ற பிரம்மதேவனால் ஈசனுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இதனை 'முதல் ஜாமம்' என்பார்கள். இந்த காலகட்டத்தில் இறைவனுக்கு பஞ்ச கவ்யம் கொண்டு அபிஷேகம் செய்வர். சந்தனம் பூசுவர். மஞ்சள் நிற பொன்னாடை அணிவிப்பர். வில்வத்தால் அலங்காரம் செய்வர்.

    தாமரைப் பூவால் அர்ச்சிப்பார்கள். நைவேத்தியமாக பாசிப் பருப்பு பொங்கல் படைப்பார்கள். ரிக்வேதம், சிவபுராணம் ஆகியவற்றை பாராயணம் செய்வார்கள். பின்னர் நெய் தீபத்துடன் வழிபடப்படும் இந்த முதல் கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால் பிறவிப் பிணி நீங்கும்.

    இரண்டாம் கால பூஜை (இரவு 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை)

    சிவபெருமானின் திருவடியைத் தேடிச் சென்ற மகாவிஷ்ணுவால், ஈசனுக்கு செய்யப்படும் பூஜையாக இது கருதப்படுகிறது. அப்போது இறைவனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்யப்படும். பச்சைக்கற்பூரம், பன்னீர் சேர்த்து அரைத்து சாத்தப்படும். வெண்பட்டு ஆடை அணிவித்து அலங்காரம் செய்வர். வில்வம், தாமரைப் பூவால் அலங்காரம் செய்யப்படும். துளசி கொண்டு அர்ச்சிக்கப்படும்.

    நைவேத்தியமாக பாயசம் படைக்கப்படும். யஜூர் வேதம், 8-ம் திருமுறையில் கீர்த்தி திருவகவல் ஆகியவை பாராயணம் செய்யப்படும்.

    நல்லெண்ணெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த கால வேளையில் சிவபெருமானை வழிபட்டால், செல்வம் செழித்தோங்கும், திருமாலின் அருளும் கிடைக்கும்.

    மூன்றாம் கால பூஜை (நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை)

    பார்வதி தேவியான அம்பாளால், சிவபெருமானுக்கு செய்யப்படும் பூஜை இதுவாகும். இந்த காலத்தில் இறைவனுக்கு தேன் அபிஷேகம் செய்வர். பச்சைக்கற்பூரம் சாத்துவர். மல்லிகை, வில்வ இலை கொண்டு அலங்காரம் செய்வர். சிவப்பு வஸ்திரம் அணிவிப்பவர்.

    வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்வர். எள் அன்னம் நைவேத்தியமாக படைத்து, சாமவேதம், 8-ம் திருமுறையில் திருவண்டகப்பகுதி பாராயணம் செய்வர்.

    நெய் தீபத்துடன் பூஜை நடைபெறும். இந்த மூன்றாம் ஜாம பூஜையை, 'லிங்கோத்பவ காலம்' என்றும் சொல்வார்கள். இந்த காலத்தில்தான் சிவபெருமானின் அடி முடியை காண்பதற்காக பிரம்மனும், விஷ்ணுவும் சென்றனர். இந்நேரத்தில் சிவனை பூஜிப்பதால், எந்த தீய சக்தியும் நம்மை அண்டாது. சக்தியின் அருளும் கிடைக்கும்.

    நான்காம் கால பூஜை (அதிகாலை 3 மணி முதல் 6 மணி வரை)

    முப்பத்து முக்கோடி தேவர்களும், முனிவர்களும், ரிஷிகளும், பூதகணங்களும், மனிதர்களும், அனைத்து ஜீவராசிகளும் சிவபெருமானை பூஜிக்கும் நேரமாக இதைக் கருதுகின்றனர். இந்த நேரத்தில் இறைவனுக்கு குங்குமப்பூ சாற்றி, கரும்புச்சாறு மற்றும் பால் அபிஷேகம் செய்வர். பச்சை அல்லது நீல வண்ண ஆடை அணிவிப்பர்.

    நந்தியாவட்டை பூவால் அலங்காரம் செய்வர். அல்லி, நீலோற்பவம் மலர்களால் அர்ச்சிப்பர். நைவேத்தியமாக சுத்தன்னம் படைப்பர். அதர்வண வேதம், 8-ம் திருமுறையில் போற்றித் திருவகவல் பாராயணம் செய்வர். தூப தீப ஆராதனைகளுடன் பூஜை நடைபெறும். இந்த காலகட்டத்தில் சிவபெருமானை பூஜிப்பவர்களுக்கு சகல சவுபாக்கியங்களும் கிடைக்கப்பெறும்.

    Next Story
    ×