search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-10)
    X

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-10)

    • நோன்பின் பலன் கைவரப்பெற்று சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே!
    • சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள்.

    திருப்பாவை

    பாடல்:

    நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!

    மாற்றமும் தாராரோ, வாசல் திறவாதார்?

    நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்

    போற்றப் பறைதரும் புண்ணியனால்;

    பண்டொருநாள்

    கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்ப கர்ணனும்

    தோற்றும் உனக்கே பெருந்துயில்தான்

    தந்தானோ?

    ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கமலமே!

    தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    நோன்பின் பலன் கைவரப்பெற்று அதன் விளைவாக சொர்க்கத்தை அடைகின்ற பெண்ணே! கதவைத்தான் திறக்கவில்லை; மறுமொழியேனும் சொல்லக் கூடாதா? நறுமணம் நிறைந்த துளசி மாலையை அணிந்த நாராயணன் நமது போற்றுதலை ஏற்று அருள் தரக் காத்திருக்கிறான். முன்னொரு காலத்தில் எமனால் வீழ்த்தப்பட்டு மரணம் எய்திய கும்பகர்ணன், உனக்கு தன்னுடைய உறக்கத்தை தந்து விட்டானா? சோர்வும், சோம்பலும் கொண்டவளே! அருமைப் பெண்ணே! தெளிவுடன் எழுந்து வந்து கதவைத்திற!

    திருவெம்பாவை

    பாடல்:

    பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்

    போதார் புனைமுடியும் எல்லாப் பொருள் முடிவே!

    பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்

    வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்

    ஓத உலவா ஒரு தோழன் தொண் டருளன்

    கோதில் குலத்தரன்றன் கோயிற் பிணாபிள்ளைகாள்

    ஏதவன் ஊர்? ஏதவன் பேர்? ஆர் உற்றார்? ஆர் அயலார்

    ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

    விளக்கம்:

    பாதாள உலகங்கள் ஏழினையும் தாண்டி, சொற்களால் சொல்ல முடியாத தன்மையுடையது இறைவனின் மலர் பாதங்கள். கொன்றைப் பூவைச் சூடிய அவனே, வேதங்கள் கூறும் எல்லா பொருட்களுக்கும் முடிவானவன். அவன் ஒரு பகுதியாக அன்னை இருக்கிறாள். அனைத்திலும் நிறைந்த அவனை வேதங்களும், தேவர்களும், மானிடர்களும் போற்றினாலும், அப்போற்றுதலுக்கெல்லாம் அப்பாற்பட்டவன். தொண்டர்களின் உள்ளங்களில் குடியிருக்கும் அந்த சிவபெருமான் கோவில் உள்ள ஊரில் பிறந்த பெண் பிள்ளைகளே? அவன் ஊர் எது? அவனது உறவுக்காரர்கள் யார்? அயலார்கள் யார்? அவனைப் பாடும் முறை எது? என்று எனக்கு கூறுவீர்களாக.

    Next Story
    ×