என் மலர்
வழிபாடு
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-12)
- எல்லா வீடுகளில் உள்ளவர்களும் எழுந்து விட்டார்கள். இனியாவது எழுந்திரு!
- ஈசன் பொன்னடிகளைப் போற்றி நீராடுவோம் வருவீர்களாக!
திருப்பாவை
பாடல்:
கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலை வழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழமின் வாசல் கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கன்றைப் பிரிந்த எருமை, தன் கன்றை நினைத்துக் கனைத்தபடியே தன் மடியில் இருந்து பாலைப் பொழிவதால், வீடெல்லாம் பால் வழிந்தோடும் நல்ல செல்வத்தை உடையவனது தங்கையே! பெரும் கோபத்தால் இலங்கை மன்னன் ராவணனை அழித்தவனும், மனதிற்கு இனியவனுமான அந்த ராமபிரானை, உன் வீட்டு வாசலுக்கு வந்து எங்கள் தலை மீது பனி விழும்படி, போற்றிப் பாடிய பிறகும் நீ பேசாமல் இருக்கிறாய்! எல்லா வீடுகளில் உள்ளவர்களும் எழுந்து விட்டார்கள். இனியாவது எழுந்திரு! என்ன இது பெரிய உறக்கம்?
திருவெம்பாவை
பாடல்:
ஆர்த்த பிறவித் துயர் கெட நாம் ஆர்த்தாடும்
தீர்த்தன்! நல் தில்லைச்சிற் றம்பலத்தே தீயாடும்
கூத்தன்! இவ் வானுங் குவலயமும் எல்லோமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவஞ் செய்ய அணிகுழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.
விளக்கம்:
நம்மை பிணைத்திருக்கும் பிறவித் துன்பம் உடையுமாறு நாம் நீராடும் புனித நீராகவும், தில்லைச் சிற்றம்பலத்தில் ஆகாய வடிவமாகி, நெருப்பை ஏந்தி நடனம் புரிபவனும், காத்தல், அழித்தல், படைத்தல் ஆகிய முத்தொழிலையும் விளையாட்டாகச் செய்பவனுமாகிய, சிவபெருமானின் புகழைப் பேசி, எங்களுடைய வளையல்கள் ஓசையிட, மேகலைகள் ஆர்ப்பரிக்க, வண்டுகள் மொய்த்து ஒலி எழுப்பும் மலர்கள் நிறைந்த குளத்தில் ஈசன் பொன்னடிகளைப் போற்றி நீராடுவோம் வருவீர்களாக!