என் மலர்
வழிபாடு
மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-27)
- எத்தனை சந்தர்ப்பம் தந்தும் உன்னோடு கூடாமல் எதிர்த்தே நிற்கும் பகைவர்களை, நீ வென்று நிற்பவன்.
- உத்தரகோச மங்கையில் உறைந்தவனே!
திருப்பாவை
பாடல்:
கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா! உன் தன்னைப்
பாடிப்பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்;
நாடும் புகழும் பரிசினால் நன்றாக,
சூடகமே தோள்வளையே, தோடே, செவிப்பூவே
பாடகமே, என்றனைய பல்கலனும் யாமணிவோம்;
ஆடை உடுப்போம்; அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி யிருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்.
விளக்கம்:
கோவிந்தனே! எத்தனை சந்தர்ப்பம் தந்தும் உன்னோடு கூடாமல் எதிர்த்தே நிற்கும் பகைவர்களை, நீ வென்று நிற்பவன். உன்னைப் பாடி, நோன்பிற்கான அருள் முரசைப் பெற்றால், அதை நாடே போற்றும் பரிசாகக் கருதுவோம். அந்த மகிழ்ச்சியில் கைகளில் வளையல்களையும், காதுகளில் தோடுகளையும். கால்களில் சிலம்புகளையும் அணிவோம். எல்லா ஆபரணங்களையும் அணிந்து, நல்ல ஆடைகளை உடுப்போம். அதன் பிறகு பாலில் வெந்த சோற்றில் நிறைய நெய் இட்டு உண்ண எடுக்கையில், எங்கள் முழங்கைகளில் அந்த நெய் வடியும்படி அனைவரும் கூடி அமர்ந்து உண்டு, மனம் குளிர்ந்து இருப்போம்.
திருவெம்பாவை
பாடல்:
அதுபழச் சுவையென அமுதென அறிதற்கு
அரிதென எளிதென அமரரும் அறியார்;
இது அவன் திருவுரு, இவன் அவன் எனவே
எங்களை ஆண்டுகொண்டு இங்கெழுந் தருளும்
மதுவளர் பொழில் திரு உத்தர கோச
மங்கையுள் ளாய்! திருப் பெருந்துறை மன்னா!
எதுஎமைப் பணிகொளும் ஆறு?அது கேட்போம்;
எம்பெரு மான்! பள்ளி எழுந்தருளாயே!
விளக்கம்:
நீ பழத்தின் சுவை போன்றவனோ, அமுதத்தின் சுவை போன்றவனோ. அறிந்து கொள்வதற்கு அரிதானவனோ, எளிமையானவனோ என்று தேவர்களும் அறியமாட்டார்கள். இது தான் அவருடைய திருவுருவம் என்றும், இவனே இறைவனாகிய நீ என்றும், நாங்கள் உணரும்படி இந்த திருப்பெருந்துறையில் எழுந்தருளி உள்ளாய்! தேன் சிந்துகின்ற மலர்கள் உள்ள பூவனங்களைக் கொண்ட உத்தரகோச மங்கையில் உறைந்தவனே! திருப்பெருந்துறையின் மன்னவனே! எங்களுக்கு நீ இடும் திருப்பணியை செய்ய வேண்டும் என்று கேட்கிறோம். துயில் நீங்கி எழுந்தருள்வாய்!