search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-7)
    X

    மார்கழி வழிபாடு திருப்பாவை, திருவெம்பாவை (பாசுரம்-7)

    • பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே!
    • பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய்.

    திருப்பாவை

    பாடல்:

    கீசு கீசு என்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து

    பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்

    பெண்ணே!

    காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

    வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

    ஓசைப் படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?

    நாயகப் பெண் பிள்ளாய்! நாராயண மூர்த்தி

    கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ?

    தேச முடையோய்! திறவேலோ ரெம்பாவாய்.

    விளக்கம்:

    எங்கள் குழுவிற்குத் தலைவியானவளே! கீசுகீசு என்று ஆனைச்சாத்தான் பறவை ள், தங்களுக்குள் பேசும் ஒலியை நீ கேட்க வில்லையா? பொழுது விடிந்தது கூடத் தெரியாமல் பேய்த் தூக்கம் தூங்கும் பெண்ணே! காசு மாலையும், வளையல்களும் கலகலக்க கைகளை மாற்றி மாற்றி, மத்தினால் தயிர் கடையும் ஒலி உன் காதில் விழவில்லையா? கேசி என்ற அரக்கனைக் கொன்று 'கேசவன்' என்று பெயர் பெற்றவனை, அந்த நாராயணனை நாங்கள் பாடுவதைக் கேட்டபின்னும், கேளாதது போல் படுத்திருக்கிறாயே! அழகிய மகளே! கதவைத் திறவாய்.

    திருவெம்பாவை

    பாடல்:

    அன்னே! இவையுஞ் சிலவோ? பல அமரர்

    உன்னற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்

    சின்னங்கள் கேட்பச் சிவன்என்றே வாய் திறப்பாய்

    தென்னாஎன் னாமுன்னம் தீசேர் மெழுகொப்பாய்

    என்னானைஎன் அரையன் இன்னமுதென் றெல்லோமுஞ்

    சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ

    வன்னெஞ்சப் பேதையர்போல் வாளா கிடத்தியால்

    என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்

    விளக்கம்:

    பெண்ணே! பலவாறு நாங்கள் அழைத்தும் பதில் பேசாமல் இருக்கிறாய். முன்பெல்லாம், தேவர்கள் மனதாலும் நினைப்பதற்கு அரியவனும், பெரும் சிறப்பை உடையவனுமாகிய நம் சிவபெருமானுக்கே உரிய இசைக்கருவிகளின் ஓசையைக் கேட்ட மாத்திரத்திலேயே 'சிவனே' என்று உச்சரிப்பாய். 'தென்னவனே' என்று சொல்லும் முன்பாகவே அனலில் இட்ட மெழுகு போல உருகுவாய் ! இன்று எங்கள் தலைவன், அமுதம் போன்றவன் என்று நாங்கள் எல்லோரும் சேர்ந்து இறைவனைப் பாடுகின்றோம். நீ இன்னமும் உறங்கிக் கொண்டிருக்கிறாயே? கல் நெஞ்சம் படைத்தவர்களைப் போல சும்மா படுத்திருக்கிறாய்! உன் தூக்கத்தின் பெருமைதான் என்ன? நீயே கூறுவாயாக!

    Next Story
    ×