என் மலர்
வழிபாடு
119 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற நடனபாதேஸ்வரர் கோவில் தேரோட்டம்
- இன்று (திங்கட்கிழமை) நடராஜர் தரிசனம், தீர்த்தவாரியும் நடக்கிறது.
- 13-ம்தேதி இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது.
நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தில் சுமார் 1,600 ஆண்டு பழமை வாய்ந்த நடனபாதேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிரம்ம மோற்சவ விழா 13 நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்து, இரவில் பல்வேறு வாகனத்தில் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடந்து வந்தது.
சிகர திருவிழாவான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் நடனபாதேஸ்வரர் சமேத அஸ்தாலம்பிகை மற்றும் பரிவார மூர்த்திகளான விநாயகர், வள்ளிதெய்வானையுடன் முருகர், சண்டிகேஸ்வரர் ஆகியோர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலாவாக வந்து அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த தேரில் எழுந்தருளினர். தேருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. பின்னர், தேரோட்டத்தில் நகர மன்ற தலைவர் ஜெயந்தி ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.
தொடர்ந்து அங்கு திரண்டிருந்த ஏராளமான பக்தர்கள் பரமேஸ்வரா பரமேஸ்வரா என்ற பக்தி கோஷத்துடன் வடம் பிடித்து தேரை இழுத்து சென்றனர். முக்கிய மாட வீதியில் தேர் வலம் வந்து மீண்டும் நிலையை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு் சாமி தரிசனம் செய்தனர்.
விழாவில் இன்று (திங்கட்கிழமை) காலை நடராஜர் தரிசனம், மாலையில் தீர்த்தவாரியும், நாளை(செவ்வாய்க்கிழமை) காலை சண்டிகேஸ்வரர் உற்சவம், இரவு ரிஷப வாகனத்தில் சாமி வீதி உலா, நாளைமறுநாள் (புதன்கிழமை) இரவு தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை செயல் அலுவலர் மகாதேவி தலைமையில் கணக்கர் சரவணன், கவுன்சிலர் செல்வகுமார் மற்றும் ஊழியர்கள் செய்து வருகின்றனர். மேலும் நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் அசோகன் தலைமையில் தேர் திருவிழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் மற்றும் தீயணைப்பு துறை வீரர்கள் இருந்தனர்.
இந்த கோவில் தேரோட்டத்தை பொறுத்தவரை 119 ஆண்டுக்கு முன்பு நடந்தது. அதன்பின்னர் கோவில் தேர் சிதிலமடைந்த காரணத்தால்,இத்தனை ஆண்டுகளாக தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை ரூ.43 லட்சத்தை ஒதுக்கீடு செய்ததை அடுத்துபுதிய தேர் செய்யப்பட்டு, வெள்ளோடம் நடந்தது. அதைதொடர்ந்து நேற்று தேரோட்டம் வெகுவிமரிசையாக நடந்தது. 119 ஆண்டுகளுக்கு பிறகு தேரோட்டம் நடைபெற்ற தால் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.