என் மலர்
வழிபாடு
நாகநாதர் கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- தியாகராஜர் தேருக்கு பின்னால் விநாயகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரும் சென்றது.
- தேர்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது.
நாகை மாவட்டம் நாகூரில் திருநாகவல்லி அம்மாள் சமேத நாகநாதர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூா்த்தி, தலம், தீா்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இந்த தலம், காசிக்கு இணையாகவும், ராகு, கேது, காலசர்ப்ப தோஷ நிவர்த்தி தலமாகவும் விளங்குகிறது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
விழாவையொட்டி காட்சிக்கொடுத்த நாயனார் வீதியுலாவும், ருத்திரசா்மா, சந்திரவா்மா்களுக்கு காட்சிக் கொடுத்தருளிய நிகழ்ச்சியும் நடந்தது.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் தியாகராஜர் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ், தமிழக மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் கவுதமன், நகர் மன்ற தலைவர் மாரிமுத்து, தாசில்தார் அமுதா ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
தியாகராஜர் தேருக்கு பின்னால் விநாயகர் மற்றும் பஞ்சமூர்த்திகள் தேரும் சென்றது. தேர்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று நிலையை அடைந்தது. நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.