என் மலர்
வழிபாடு

சுவாமி திருக்கல்யாணம் நடந்தபோது எடுத்த படம்.
நாமக்கல்லில் நாளை நரசிம்மர் கோவில் தேரோட்டம்: ட்ரோன் மூலம் போலீசார் கண்காணிப்பு

- தினமும் இரவு சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நாமக்கல் நகரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மர் சுவாமி, அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் பங்குனி தேர்த்திருவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக நடைபெறும். அதன்படி இந்த ஆண்டுக்கான கடந்த புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தினமும் இரவு சிறப்பு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று வருகிறது. நரசிம்மர்-ஸ்ரீதேவி பூதேவி, அரங்கநாதர்-ஸ்ரீதேவி, பூதேவி தாயார் திருக்கல்யாண விழா நாமக்கல் குளக்கரை நாமகிரி தாயார் திருமண மண்டபத்தில் நேற்று இரவு நடைபெற்றது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்கள் மொய் சமர்ப்பித்தனர். பின்னர் விருந்து உபசரிப்பு நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை(வியாழக்கிழமை) நடைபெறுகிறது. நாளை காலை 9 மணிக்கு நரசிம்ம ஸ்வாமி உடனுறை நாமகிரி தாயார் தேரோட்டமும், மாலை 4:30 மணிக்கு அரங்கநாதர், ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது.
இதை ஒட்டி கோவிலை சுற்றி 2 டி.எஸ்.பி.க்கள், இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 250 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
தேர் வீதி உலா வரும் 4 ரதவீதிகளிலும் உரிய பாதுகாப்பு மற்றும் தேரோட்டத்தின்போது ட்ரோன் கேமரா மூலமாக குற்றங்கள் எதுவும் நடக்காமல் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவிலை சுற்றி 10 இடங்களில் காவல்துறையினர் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.
காலையில் ஸ்ரீ நரசிம்மர் கோவில் தேரோட்டத்தின்போது கோட்டை ரோட்டில் போக்குவரத்து தடை செய்யப்படுகிறது. 4 சக்கர வாகனம் மற்றும் 2 சக்கர வாகனங்கள் நாமக்கல் பஸ் நிலையத்திலிருந்து உழவர் சந்தை வழியாக பொய்யேரி கரை ரோடு வழியாக திருச்செங்கோடு ரோட்டுக்கும், சேலம் ரோட்டுக்கும் செல்லும் வகையில் போக்குவரத்து மாற்ரப்படுகிறது.
நாமக்கல் ரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் தேரோட்டம் நாளை மாலை கடைவீதியில் இருந்து புறப்பட்டு பலபட்டறை மாரியம்மன் கோவில் வழியாக சேந்தமங்கலம் ரோடு ஜங்ஷன், பேட்டை பள்ளிவாசல் வழியாக சென்று நிலையை அடைகிறது.
தேர்வழி வரும் வழிகளிலும் தேரின் 4 பக்கமும் 150 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். ட்ரோன் மூலமும் கண்காணிக்கப்பட்டு படுகிறது. இதையொட்டி மாலையில் சேலம் ரோடு, திருச்செங்கோடு ரோடுகளில் இருந்து 4 சக்கர வாகனங்கள் மற்றும் 2 சக்கர வாகனங்கள் மற்றும் கடைவீதி வழியாக வரும் வாகனங்களை கோட்டை ரோடு, உழவர் சந்தை ரோடு வழியாக நாமக்கல் பஸ் நிலையம் வர ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
ரத வீதியில் அனுமதி இல்லாமல் ட்ரம்ஸ் போன்றவற்றை பயன்படுத்தினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் காவல்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.