என் மலர்
வழிபாடு
நாமக்கல் நரசிம்மர் கோவில் தேரோட்டம் கோலாகலம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- மலையின் கிழக்கு புறத்தில் ஸ்ரீஅரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் கோவில் உள்ளது.
- இந்த 3 கோவில்களுக்கு தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான மலையின் மேற்கு பகுதியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீநாமகிரி தாயார் உடனுறை நரசிம்மசுவாமி கோவில் மலையை குடைந்து குடவறை கோவிலாக உருவாக்கப்பட்டுள்ளது.
அந்த கோவிலில் மேற்கு பகுதியில் 18 அடி உயரத்தில் உருவான ஸ்ரீ ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. மலையின் கிழக்கு புறத்தில் ஸ்ரீஅரங்கநாயகி தாயார் உடனுறை அரங்கநாதர் கோவில் உள்ளது. இந்த 3 கோவில்களுக்கு தேர்த் திருவிழா நடைபெற்று வருகிறது.
இன்று காலை 9.30 மணிக்கு கோட்டை பகுதியில் ஸ்ரீநரசிம்மர் கோவில் தேரோட்டம் தொடங்கியது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு கோவிந்தா, கோபாலா என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
மாலை 4 மணிக்கு மெயின் ரோட்டில் ஸ்ரீ அரங்கநாதர் மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் தேரோட்டமும் நடைபெற உள்ளது. இத்தேர்திருவிழவையொட்டி 250-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் குற்ற சம்பவங்களை தடுக்க 10 இடங்களில் டிரோன் காமிரா மூலம் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
மேலும் கோட்டை ரோடு பகுதியில் இன்று காலை முதல் வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் வாகனங்கள் பார்க் ரோடு, உழவர் சந்தை வழியாக சென்றது.
இன்று மாலை அரங்கநாதர் மற்றும் ஆஞ்சநேயர் கோவில் தேரோட்டத்தையொட்டி மெயின்ரோடு, தட்டார தெரு, சேந்தமங்கலம் ரோடு பகுதிகளில் அனைத்து போக்குவரத்தும் தடை செய்யப்படுகிறது. இதனால் சேலம், ஈரோடு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் கோட்டை ரோடு, உழவர் சந்தை, பார்க் ரோடு வழியாக பஸ் நிலையம் வந்தடையும்.