என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
வழிபாடு
![திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் ஸ்ரீபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் ஸ்ரீபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது](https://media.maalaimalar.com/h-upload/2023/07/06/1910302-palani.webp)
திருப்பூர் மண்ணரை பாரப்பாளையம் ஸ்ரீபழனி ஆண்டவர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடக்கிறது
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.
- பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
பழனி மலையில் வீற்றிருக்கும் முருகனை தரிசிப்பதற்கு நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பக்தர்கள் அலைகடலென திரண்டு வருகின்றனர். இப்படிப்பட்ட நிலையில் பழனி முருகனின் அருள் திருப்பூரிலும் கிடைக்க வேண்டும் என்ற ஆவலில் திருப்பூர் மண்ணரை பாரப்பாளையத்தை சேர்ந்த மக்கள் அந்த பகுதியில் ஸ்ரீபழனி ஆண்டவர் என்ற கோவிலை அமைத்துள்ளனர். பழனி மலையில் இருந்து கல் எடுத்து வந்து பாரப்பாளையத்தில் உள்ள மிகவும் பழமை வாய்ந்த கோவிலில் பகவதி அம்மன் ஆசியுடன் காளியம்மன், பழனி ஆண்டவர், கருப்பராயருடன் இந்த கோவில் அமைக்கப்பட்டுள்ளது. சுமார் 500 வருடங்களை கடந்து இருக்கும் இந்த கோவிலில் சுற்றுவட்டார பகுதி மக்கள் வேண்டும் வரம் அளிப்பதால் பக்தி பரவசத்துடன் ஸ்ரீபழனி ஆண்டவ முருகனை வழிபட்டு வருகின்றனர்.
இந்த கோவில் கும்பாபிஷே விழா நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடந்து முடிந்தது. கடந்த 2-ந்தேதி தொடங்கியது. இதையடுத்து கோவிலில் தனபூஜை, கோபூஜை, வாஸ்து பூஜை, முளைப்பாலிகை பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் 2-ம் கால பூஜை, 3-ம் கால பூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 4-ம் கால பூஜை, கோபுரகலசங்கள் வைத்தல் நிகழ்ச்சியும், யாகசாலையில் சிறப்பு வழிபாடும் நடைபெற்றது.
மேலும் கோவிலின் மூலஸ்தானத்தில் முருகன் மற்றும் சிவன், பார்வதி, காளியம்மாள், குருபகவான், துர்க்கையம்மன், சண்டிகேஷ்வரர், விநாயகர், கருப்பராயர் மற்றும் நவக்கிரகங்கள் சிலைகள் சிறப்பு பூஜைகளுடன் நேற்று கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
இதில் கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குவினர், பக்தர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் அரோகரா மற்றும் ஓம்சக்தி, பராசக்தி கோஷம் முழங்க வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கும்பாபிஷேக விழா இன்று (வியாழக்கிழமை) காலை 5.30 மணிக்கு கணபதி வழிபாடு மற்றும் 6-ம் காலபூஜையுடன் தொடங்குகிறது.
காலை 9.15 மணிக்கு மேல் 10.15 மணிக்குள் பழனி ஆண்டவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் திருப்பணி கமிட்டி நிர்வாகிகள், விழாக்குழுவினர் மற்றும் பாரப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.