என் மலர்
வழிபாடு

பழனி நவராத்திரி திருவிழா: வன்னிகாசூரனை அம்பு எய்து வதம் செய்த முத்துக்குமார சுவாமி

- முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார்.
- பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
பழனி முருகன் கோவில் மற்றும் அதன் உபகோவிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, கடந்த மாதம் 26-ந்தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.
விழாவையொட்டி தினமும் மாலை 6 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. மேலும் பக்தி இன்னிசை, பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடந்தது.
விழாவின் 9-நாளான நேற்று முன்தினம் பழனி முருகன் கோவிலில் பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை, 1.30 மணிக்கு சாயரட்சை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து மாலை 3 மணிக்கு மலைக்கோவிலில் இருந்து பராசக்திவேல் புறப்பட்டு பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் நிகழ்ச்சி நடந்தது. பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்த பராசக்தி வேலுக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி தங்கக்குதிரை வாகனத்தில் பராசக்தி வேலுடன் எழுந்தருளினார். அப்போது சுவாமிக்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடைபெற்றது. அதையடுத்து வில்அம்பு போடும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முத்துக்குமாரசுவாமி கோதமங்கலம் சென்றார்.
கோதமங்கலம் கோதீஸ்வரர் கோவில் திடலுக்கு வந்த முத்துக்குமார சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் வாழை மரத்தால் அமைக்கப்பட்ட வன்னிகாசூரனை, முத்துக்குமாரசுவாமி அம்பு வில் கொண்டு வதம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் புலிப்பாணி பாத்திர சுவாமிகள் கலந்துகொண்டு வதம் செய்தார்.
பின்னர் வதம் நிகழ்ச்சி முடிந்ததும் முத்துக்குமாரசுவாமி பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு வந்தார். அதையடுத்து அர்த்தஜாம பூஜை நடைபெற்று பராசக்திவேல் மீண்டும் பழனி முருகன் கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டது. நிகழ்ச்சியில் கோவில் இணை ஆணையர் நடராஜன், துணை ஆணையர் பிரகாஷ், பொறியாளர் குமார் மற்றும் அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.