search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா
    X

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழா

    • பிப்ரவரி 3-ந்தேதி திருக்கல்யாணம் நடக்கிறது.
    • 4-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

    அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது. இந்த திருவிழாவின்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், காவடி எடுத்தும் பக்தி பரவசத்துடன் பழனிக்கு வருவார்கள். இதேபோல் ஏராளமான பக்தர்கள் பஸ், ரெயில்களிலும் பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு செல்வர்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூசத் திருவிழா வருகிற 29-ந்தேதி உபகோவிலான பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில், முதல் நாளன்று பெரியநாயகி அம்மன் கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று காப்புக்கட்டு நடக்கிறது.

    தொடர்ந்து கொடிபூஜை, வாத்திய பூஜை நடைபெற்று கொடியேற்றம் நடைபெறுகிறது. அன்று பகல் 12 மணிக்கு மேல் உச்சிக்கால பூஜையில் திருஆவினன்குடி, மலைக்கோவிலில் விநாயகர், மூலவர், சண்முகர், உற்சவர், துவார பாலகர்களுக்கு காப்புக்கட்டு நடைபெறுகிறது.

    தைப்பூச திருவிழாவையொட்டி தினமும் காலை தந்தப்பல்லக்கில் முத்துக்குமாரசுவாமி வீதிஉலா நடக்கிறது. இதேபோல் இரவு 7.30 மணிக்கு வெள்ளி ஆட்டுக்கிடா, காமதேனு, தங்கமயில் வாகனத்தில் வீதிஉலா நடக்கிறது. விழாவின் 6-ம் நாளான அடுத்த மாதம் 3-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 7 மணிக்குமேல் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை திருக்கல்யாணமும், இரவு 9 மணிக்குமேல் வெள்ளிரதத்தில் மணக்கோலத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    அடுத்த நாள் 4-ந்தேதி (சனிக்கிழமை) தைப்பூசம் அன்று அதிகாலையில் சண்முகநதியில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் 11 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி- தெய்வானையுடன் திருத்தேரில் எழுந்தருளல் நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு திருத்தேர் தேரோட்டம் நடைபெறுகிறது. 7-ந்தேதி தெப்பத்தேர் நிகழ்ச்சியுடன் தைப்பூச திருவிழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

    பழனி முருகன் கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஜனவரி மாத தொடக்கத்திலேயே பக்தர்கள் பாதயாத்திரையாக வருவது வழக்கம். அதன்படி கடந்த சில நாட்களாகவே பழனிக்கு பாதயாத்திரையாக பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இந்த நிலையில் 16 ஆண்டுகளுக்கு பிறகு பழனி முருகன் கோவிலில் வருகிற 27-ந்தேதி கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதனால் கும்பாபிஷேகம், தைப்பூசம் என அடுத்தடுத்து நிகழ்ச்சிகள் நடைபெறுவதால் பழனியே விழாக்கோலம் பூண்டுள்ளது. குறிப்பாக வெளியூர்களில் இருந்து பாதயாத்திரையாக காவடி எடுத்தும், அலகு குத்தியும், கோலாட்டம், ஒயிலாட்டம் ஆடியபடி பக்தர்கள் வருகின்றனர்.

    பழனிக்கு வருகை தரும் பக்தர்கள் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகியவற்றில் புனித நீராடிய பின்பு முருகப்பெருமானை வழிபடுகின்றனர். இதனால் இடும்பன்குளம், சண்முகநதி பகுதியிலும் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. இதில் சண்முகநதி, இடும்பன்குளம் ஆகிய இடங்களில் பக்தர்களுக்கு போதிய வசதி இல்லை. அதாவது பெண் பக்தர்களுக்கு உடைமாற்றும் அறை இல்லாததால் அவர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இடும்பன்குளத்தில் ஆபத்து தடுப்பை தாண்டி பக்தர்கள் செல்கின்றனர். எனவே போலீஸ் மற்றும் தீயணைப்பு படையினரை கொண்டு சண்முகநதி, இடும்பன்குளத்தை கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    Next Story
    ×