என் மலர்
வழிபாடு

ராமேசுவரம் கோவிலில் நவராத்திரி: கொலு மண்டபத்தில் அபூர்வ தங்க ஸ்ரீசக்கரத்திற்கு சிறப்பு பூஜை

- அம்பாளின் தங்க ஸ்ரீ சக்கரம் என்பது அம்பாளின் சொரூபமாக கருதப்படுகிறது
- ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜையானது நேரடியாக அம்பாளுக்கு சென்றடைவதாக நம்பிக்கை.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் நவராத்திரி திருவிழா தொடங்கியதை தொடர்ந்து கொலு மண்டபத்தில் அபூர்வ தங்க ஸ்ரீசக்கரத்திற்கு சிறப்பு பூஜை நடந்தது.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் நவராத்திரி திருவிழா காப்பு கட்டுதலுடன் நேற்று தொடங்கியது. இதையொட்டி காலையில் கோவிலின் அம்பாள் சன்னதி பிரகாரத்தில் அமைக்கப்பட்டு உள்ள கொலு மண்டபத்தில்அம்பாளின் அபூர்வ தங்க ஸ்ரீசக்கரத்திற்கு பால், பன்னீர், இளநீர், திரவியம், மாபொடி, மஞ்சப்பொடி, சந்தனம் உள்ளிட்டவைகளால் அபிஷேகம் நடைபெற்று சிறப்பு தீப ஆராதனை, பூஜைகள் நடைபெற்றன.
நேற்று இரவு பர்வதவர்த்தினி அம்பாள் அன்னபூரணி அலங்காரத்தில் கொலுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
விழாவின் 2-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு மகாலட்சுமி அலங்காரத்திலும், நாளை சிவ துர்க்கை அலங்காரத்திலும் அம்பாள் காட்சி அளிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 5-ந் தேதி மாலை 6 மணிக்குமேல் சுவாமி-அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் கோவிலில் இருந்து பத்திரகாளி அம்மன் கோவில் அருகே உள்ள மகர் நோன்பு திடலுக்கு வருகின்றனர். அங்கு சூரனை அம்பு எய்து அம்பாள் வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை கோவில் இணைஆணையர், தக்கார் பழனிக்குமார் தலைமையில் துணை ஆணையர் மாரியப்பன், உதவி ஆணையர் பாஸ்கரன், உதவி கோட்ட பொறியாளர் மயில்வாகனன், பேஷ்கார் கமலநாதன் உள்ளிட்ட திருக்கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் நவராத்திரி திருவிழாவின் போது 9 நாட்கள் அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் பக்தர்களின் பார்வைக்காக வைக்கப்பட்டு அபிஷேகம் செய்து பூஜைகள் நடத்தப்படும். அம்பாளின் தங்க ஸ்ரீ சக்கரம் என்பது அம்பாளின் சொரூபமாக கருதப்படுகிறது.
ஸ்ரீ சக்கரத்திற்கு செய்யப்படும் பூஜையானது நேரடியாக அம்பாளுக்கு சென்றடைவதாக பக்தர்களின் நம்பிக்கை. 9 நாட்கள் பூஜை முடிந்த பின்னர் அம்பாள் பல்வேறு சக்தி அவதாரங்களுடன் எழுந்தருளி கொடிய அரக்கனை வதம் செய்வதாக கூறப்படுகிறது. ராமேசுவரம் கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி திருவிழா நடைபெறும்போது இந்த 9 நாட்கள் மட்டும் அம்பாளின் தங்க ஸ்ரீசக்கரம் பக்தர்களின் பார்வைக்காக கொலு மண்டபத்தில் வைத்து பூஜை செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.