search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா:அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் வழங்கக்கூடாது
    X

    சமயபுரம் மாரியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா:அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் வழங்கக்கூடாது

    • சமயபுரம் மாரியம்மன் கோவிலில் 12-ந்தேதி பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது.
    • கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்.

    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) பூச்சொரிதல் திருவிழா நடைபெற உள்ளது. இதையொட்டி மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

    கூட்டத்துக்கு கலெக்டர் பிரதீப்குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    பூச்சொரிதல் திருவிழா நடைபெறும் 12, 13-ந்தேதிகளில் பக்தர்கள் கோவிலுக்குள் வருவதற்கும், வெளியே செல்வதற்கும் போலீசார் தக்க பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கோவிலின் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கோபுரம் அமைத்து கண்காணிக்க வேண்டும். பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு, விபத்து தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையினர் சமயபுரத்திற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து செல்லும் வகையில் கூடுதல் பஸ் வசதி ஏற்பாடு செய்ய வேண்டும். திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலை சமயபுரம் புறவழிச்சாலை, மருதூர் பிரிவுரோடு, வி.துறையூர் பிரிவு ரோடு, ஆட்டுச்சந்தை பிரிவுரோடு, சமயபுரம் நால்ரோடு, சமயபுரம், மண்ணச்சநல்லூர் பிரிவுரோடு ஆகிய பகுதிகளில் போக்குவரத்து பணிகளை முறையாக கண்காணித்து சீர் செய்ய வேண்டும்.

    மின்சார வாரிய அலுவலர்கள் தடையற்ற மின்சாரம் வழங்குவதற்கும், பழுது ஏற்பட்டால் உடனே நிவர்த்தி செய்ய தேவையானயளவு பணியாளர்களை நியமிக்க வேண்டும். மருத்துவ துறையினர் திருச்சி, சென்னை தேசிய நெடுஞ்சாலை, சமயபுரம் நுழைவுவாயில், கோவிலுக்கு செல்லும் கடைவீதி, போலீஸ் நிலையம் அருகில், திருமண மண்டபம் முன்பகுதி மற்றும் தேவையான இடங்களில் 2 நாட்கள் முழுவதும் 24 மணி நேரமும் செயல்படும் மருத்துவ முகாமை அமைக்க வேண்டும்.

    இலவச மருத்துவ உதவி அளிக்க நடமாடும் மருந்தகம் அமைத்தல், தேவையான இடங்களில் 108 ஆம்புலன்ஸ் வசதி, கூடுதல் முதலுதவி முகாம் மற்றும் மருத்துவ முகாம்களை ஏற்பாடு செய்ய வேண்டும். நெடுஞ்சாலை துறையினர் சாலையின் இருபக்கங்களிலும் மேடு பள்ளங்கள் இல்லாமல் சீரமைத்து, எளிதாக பக்தர்கள் நடந்து வருவதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். தீயணைப்பு துறை மூலம் தேவையான அளவு தண்ணீர், தீயணைக்கும் உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள், அலுவலர்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். எஸ்.கண்ணனூர் பேரூராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் வசதி செய்து தரவேண்டும்.

    ஆண்கள், பெண்கள் என தனித்தனியே தற்காலிக கூடுதல் கழிவறை மற்றும் குளியலறை வசதிகள் அமைக்க வேண்டும். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி தண்ணீர் பாக்கெட்டுகள், சுகாதாரமற்ற உணவு பொருட்கள் கொண்டு வருவதை தவிர்க்க வேண்டும். குப்பைகளை உடனுக்குடன் அகற்றிட சுகாதார பணியாளர்களை கூடுதலாக நியமனம் செய்து சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும். அன்னதானம் வழங்குபவர்கள் அதற்கான அனுமதி பெற்ற இடத்தில், உணவு பாதுகாப்பு துறையில் பதிவு செய்து தரமான உணவு வகைகள் வழங்குவதை உணவு பாதுகாப்பு துறையினர் உறுதி செய்ய வேண்டும்.

    அனுமதி பெறாத இடங்களில் அன்னதானம் கண்டிப்பாக வழங்கக்கூடாது. கோவில் சிறப்பு பணியாளர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். கோவில் வளாக பகுதியில் கட்டணமில்லா கழிவறை வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மின்வசதி, முடிக்காணிக்கை செலுத்திய பக்தர்கள் குளிப்பதற்கு ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே குளியல் தொட்டி, உடை மாற்றும் அறைகள் உள்ளிட்ட வசதி செய்து கொடுத்தல் வேண்டும்.

    இந்த விழா அமைதியாகவும், சிறப்பாகவும் நடந்திட அனைத்து துறை அலுவலர்களும் இணைந்து பணியாற்ற வேண்டும். மாவட்ட நிர்வாகமும், போலீசாரும், கோவில் நிர்வாகமும் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதில், சமயபுரம் கோவில் இணை ஆணையர் கல்யாணி, இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ், உதவி இயக்குனர் (பேரூராட்சிகள்) காளியப்பன், போலீசார், வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரசு அலுவலர்கள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×