என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
வழிபாடு
ஜெயம் அருளும் சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர்
- வைகானச ஆகம முறைப்படி பூஜை செய்யப்படும் இந்த ஆலயத்தில், தினமும் காலையில் மட்டும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது.
- ஆண்டுதோறும் சித்திரை மற்றும் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜெயம் அருளும் சேதுக்கரை ஜெயவீர ஆஞ்சநேயர்ராமநாதபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு புண்ணிய பூமி சேதுக்கரை. 'சேது' என்றால் 'பாலம்' என்று பொருள். பாலம் கட்டிய இடத்தில் உள்ள கரை என்பதால் இத்தலம் 'சேதுக்கரை' என்று அழைக்கப்படுகிறது. சேதுக்கரையில் இருந்து இலங்கைக்குப் பாலம் அமைத்த ராமபிரான் இலங்கைக்குச் சென்று ராவணனை வதம் செய்து சீதாதேவியை மீட்டு வந்தார். சேது பாலம் வழியாகவே திரும்பி வந்த அவர், ராமேஸ்வரம் சென்று ராமநாதசுவாமியை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.
திருப்புல்லாணியில் எழுந்தருளி உள்ள ஆதிஜெகந்நாதப் பெருமாளை, ராமபிரானின் தந்தை தசரத மகாராஜா வழிபட்டதன் பேரில் ராமபிரான் பிறந்ததாக ஐதீகம். பின்னாட்களில் அதே திருப்புல்லாணிக்கு வந்து, அங்கிருக்கும் கடற்கரைப் பகுதியில் பாலம் அமைத்து, ராமர் இலங்கைக்குச் சென்றதாக புராணம் கூறுகிறது.
சேதுக்கரையில் பாலம் அமைப்பதில் அனுமன் தலைமையிலான வானர சேனைகள், ராமபிரானுக்கு உதவி புரிந்தன. இதனாலேயே அனுமனுக்கு சேதுக்கரையில் கோவில் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் எழுந்தருளியுள்ள அனுமனுக்கு 'ஸ்ரீசேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேய சுவாமி' என்பது திருநாமம். கடலை நோக்கி அமைந்துள்ள இந்த சிறிய கோவில் முன்மண்டபம், அர்த்தமண்டபம், கருவறை என்ற அமைப்போடு திகழ்கிறது.
கோவிலின் நுழைவுவாசலின் மீது ராமர், லட்சுமணர், சீதாதேவி ஆகியோரின் சுதைச்சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. முன்மண்டபத்தினுள் நுழைந்து உள்ளே சென்றால் கருவறையில் அனுமன், ஸ்ரீசேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேயர் என்ற திருநாமத்தோடு ஐந்து அடி உயரத்தில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவரது திருவுருவம் இலங்கையை நோக்கியவாறு எழுந்தருளி இருப்பது விசேஷமானது. ஆஞ்சநேயரின் இரண்டு பாதங்களையும் தண்டைகள் அலங்கரிக்கின்றன. வலது திருக்கரத்தினை மேலே தூக்கி வைத்த நிலையில் அபய முத்திரை காட்டியும், இடது திருக்கரத்தில் சவுகந்திகா மலரின் காம்பினைப் பிடித்தபடியும் அனுமன் வீற்றிருக்கிறார். அனுமன் தன் காதுகளில் அணிந்துள்ள குண்டலமானது, அவரது தோள்களைத் தொட்டபடி உள்ளது. இங்கு அனுமன் மலர்ந்த கண்களோடு மிகவும் சாந்தமாக காட்சி தருகிறார்.
ராமாயணத்தில் சேதுக்கரை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பகுதியாகும். காரணம் சீதாதேவியை இலங்கையில் இருந்து மீட்டு வர ராமபிரான் இங்கிருந்துதான், ராமசேது பாலத்தை வானர சேனைகளின் உதவியோடு கட்டியதாக கூறப்படுகிறது. ராமபிரான் பாதங்கள் பட்ட சேதுக்கரையில் எழுந்தருளியுள்ள ஸ்ரீசேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேயரை வணங்கினால், நாம் முன்னெடுக்கும் எந்த காரியமாக இருந்தாலும் அது வெற்றியாகத்தான் முடியும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
வைகானச ஆகம முறைப்படி பூஜை செய்யப்படும் இந்த ஆலயத்தில், தினமும் காலையில் மட்டும் ஒரு கால பூஜை நடைபெறுகிறது. அதே நேரம் காலை முதல் மாலை அவரை அனுமனை தரிசனம் செய்வதற்காக ஆலயம் திறந்து வைக்கப்பட்டிருக்கும். முதலில் திருப்புல்லாணிக்குச் சென்று அங்கு எழுந்தருளியுள்ள ஆதிஜெகந்நாதப் பெருமாள், தர்ப்ப சயன ராமர் மற்றும் பட்டாபிஷேக ராமர் ஆகியோரை தரிசிக்க வேண்டும் அதன்பிறகே, சேதுக்கரைக்குச் சென்று ஸ்ரீசேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேய சுவாமியை தரிசிக்க வேண்டும் என்பது நியமமாக உள்ளது. அவ்வாறு செய்யும் போது ஆதிஜெகந்நாதப் பெருமாள், தர்ப்ப சயன ராமர், பட்டாபிஷேக ராமர் ஆகியோரது ஆசியுடன், சேதுக்கரை அனுமனின் ஆசியும் பரிபூரணமாக கிடைக்கும் என்கிறார்கள்.
ஆண்டுதோறும் சித்திரை மற்றும் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது தீர்த்தவாரி உற்சவம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. திருப்புல்லாணி ஆதிஜெகந்நாதப் பெருமாள் மற்றும் பட்டாபிஷேக ராமர் உற்சவர்கள் இங்கு எழுந்தருள தீர்த்தவாரி நடைபெறுகிறது. இத்தலத்தில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் செய்யப்படுகின்றன. தொடர்ந்து அனுமனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. ரத்னாகர தீர்த்தம் என அழைக்கப்படும் இக்கடற்கரையில் அமாவாசை நாட்களில் பிதுர் தர்ப்பணம் செய்கிறார்கள்.
ராமேஸ்வரத்திற்குச் செல்லும்போது தவறாமல் சேதுக்கரைக்குச் சென்று இங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீசேது பந்தன ஜெய வீர ஆஞ்சநேய சுவாமியை தரிசித்துத் திரும்புங்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து 14 கிலோமீட்டர் தொலைவில் சேதுக்கரை அமைந்துள்ளது. திருப்புல்லாணியில் இருந்து சுமார் 4 கிலோமீட்டர் தொலைவில் இத்தலம் அமைந்துள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்