என் மலர்
வழிபாடு
சனி தோஷம் நீக்கும் வழிபாடு
- சனி பகவான், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மட்டும் பிடிக்க முடியவில்லை.
- நளன் சரித்திரத்தை படிப்பதனாலும், கேட்பதினாலும் சனி தோஷம் நீங்கும்.
சனி பகவானால் பிடிபடாதவர்கள் யாரும் இல்லை. தேவர்கள் முதல் மும்மூர்த்திகளையும் கூட அவர், தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்று புராணங்கள் சொல்கின்றன.
அப்படிப்பட்ட சனி பகவானால், விநாயகரையும், ஆஞ்சநேயரையும் மட்டும் பிடிக்க முடியவில்லை. அதனால்தான் விநாயகரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவதன் மூலம் சனியின் பிடியில் இருந்து விடுபடலாம் என்கிறார்கள்.
விநாயகரை பிடிப்பதற்காக சனி பகவான் வந்தபோது, அவரிடம் "நான் இன்று முக்கிய பணியில் இருக்கிறேன். அதனால் நாளை வந்து என்னை பிடித்துக் கொள். எனவே இன்றுபோய் நாளை வா" என்று கூறினாராம், விநாயகர்.
மறுநாள் சனி பகவான் வந்தபோது, "நான் உன்னிடம் என்ன சொன்னேன்" என்று கேட்டாராம், விநாயகர். அதற்கு சனி பகவான் "இன்று போய் நாளை வா என்று சொன்னீர்கள்" என்று தெரிவித்தார்.
அதைப் பிடித்துக் கொண்ட விநாயகர், "அப்படியானால், நீ இன்று போய் நாளை வா" என்றாராம். விநாயகரின் சாதுரியத்தால், இன்றுவரை அவரை சனி பகவானால் பிடிக்க முடிவில்லை.
ஆஞ்சநேயரை பிடிப்பதற்காக சனி பகவான் சென்றபோது, இலங்கைக்கு பாலம் அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார், ஆஞ்சநேயர். அவரது தலையில் அமரப் போன சனி பகவானை தடுத்து நிறுத்திய ஆஞ்சநேயர், "நீங்கள் என் தலையில் அமர்ந்தால், என்னால் பாலம் கட்டும் பணியில் ஈடுபட முடியாது. எனவே என்னுடைய காலை பிடித்துக் கொள்ளுங்கள்" என்றாராம்.
அதன்படியே சனி பகவான், ஆஞ்சநேயரின் காலை பிடித்துக் கொள்ள, சனியை தன் காலில் வைத்து பலமாக அழுத்தினாராம், ஆஞ்சநேயர். அதனால் அனுமனை விட்டு விட்டார், சனி பகவான். மேலும் ராம பக்தர்களை ஒன்றும் செய்யக்கூடாது என்ற வரத்தையும் சனியிடம் இருந்து அனுமன் பெற்றுக்கொண்டார்.
செங்கல்பட்டில் உள்ள கோதண்டராம சுவாமி கோவிலில், சனி பகவானை தன் காலடியில் வீழ்த்தியிருக்கும் வீர ஆஞ்சநேயரை தரிசிக்கலாம். மேலும் இந்த ஆலயத்தின் பிரகாரத்திலும் ஆஞ்சநேயருக்கு தனி சன்னிதி இருக்கிறது.
சனியின் பாதிப்பில் இருந்து விடுபட சில பரிகாரங்களை இங்கே பார்ப்போம்.
* சனிக்கிழமை தோறும் விரதம் இருந்து, உளுந்து, நல்லெண்ணெய், தூய்மையான நீலக்கல், எள்ளு, கொள்ளு, இரும்பு ஆகியவற்றை தானமாக அளிக்கலாம்.
* புராணங்களில் வரும் நளன் சரித்திரத்தை படிப்பதனாலும், கேட்பதினாலும் சனி தோஷம் நீங்கும்.
* நல்லெண்ணெய், நெய், இலுப்பை எண்ணெய் மூன்றையும் கலந்து, இரும்பு விளக்கில் திரிகளைப் போட்டு சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும்.
* சனிப் பிரதோஷம் வரும் நாள் முழுவதும் விரதம் இருந்து சனியை வழிபடுவதுடன், மவுன விரதமும் மேற்கொள்ளலாம்.
* சனிக்கிழமை தோறும் காகத்திற்கு அன்னமிடுங்கள்.
* தினமும் சனி பகவான் துதி பாடல்களை படியுங்கள்.