search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    முன்னோர் பாவம் போக்கும் `ஸ்ரீதேவி பாகவதம்
    X

    முன்னோர் பாவம் போக்கும் `ஸ்ரீதேவி பாகவதம்'

    • பாவ, புண்ணியங்கள் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்று.
    • பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது.

    நமது முன்னோர்கள் எத்தகைய பாவ, புண்ணியம் செய்தார்கள் என்பது நமக்கு தெரியாது. ஆனால் அந்த பாவ, புண்ணியங்களும் நம் வாழ்வை தீர்மானிக்கும் சக்திகளுள் ஒன்றாகத்திகழ்கின்றன. ஒரு வேளை நம் முன்னோர்கள் படுபாதக செயல்கள் செய்திருந்தால், அது மறைமுகமாக நம்மை வெகுவாகத் தாக்க கூடும்.


    இத்தகைய பாதிப்புகளில் இருந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள ஸ்ரீதேவி பாகவதம் உதவுகிறது. ஸ்ரீதேவி பாகவதத்தை சிரவணம் செய்தால் நம் முன்னோர்கள் செய்த பாவங்களும், அதனால் ஏற்பட்ட தோஷங்களும் விலகி விடும். இதன் பின்னணியில் ஒரு கதை உள்ளது. அந்த கதை வருமாறு:-

    திருதராஷ்டிரரின் மகன்களான 100 கவுரவர்களுக்கும் பாண்டு மன்னனின் மகன்களான பஞ்ச பாண்டவர்களுக்கும் இடையே போர் ஏற்பட்டது. அந்த போரில் பஞ்சபாண்டவர்கள் பக்கம் நின்ற கிருஷ்ணபகவான் அர்ஜுனனுக்கு கீதோபதேசம் செய்து பாண்டவர்களின் வெற்றிக்கு கை கொடுத்தார்.

    பாண்டவர்களின் வெற்றியை அசுவத்தாமனால் பொறுக்க இயலவில்லை. அவர்கள் மீது அபாண்ட அஸ்திரத்தை பிரயோகித்தான். அதனால் இரு குலத்தாருக்கும் ஒரே சந்ததியாக இருந்த உபபாண்டவர் கருகி ஓர் பிண்டமாக கீழே விழுந்து விட்டார்.

    அப்பிண்டத்தை இறைவன் ஸ்ரீகிருஷ்ணன் எழுப்பி பரிஷத் எனும் அரசனாக மாற்றினான். அவன் தன் கர்வத்தினால் தியான நிஷ்டையில் இருந்த ஓர் முனிவரின் கழுத்தில் செத்த பாம்பை போட்டான்.

    முனிவர் அவனுக்கு பாம்பு தீண்டி இறப்பாய் என சாபமிட்டார்.

    இதனால் பயந்து போன பரிஷத் மன்னன் கங்கை நதியின் நடுவில் அரண்மனை கட்டி, பாதுகாப்புடன் இருந்தான். ஆனால் விதி யாரை விட்டது, எலுமிச்சை பழத்தில் ஒரு புழு உருவில் வந்து பாம்பாக மாறி பரிஷத் மகாராஜாவை கொன்றது.

    இதனால் பரிஷத் மகாராஜாவின் ஒரே மகன் ஜனமோஜயன் கோபம் கொண்டு வெகுண்டெழுந்து சர்ப்ப யாகம் செய்யத் தொடங்கினான். ஆனால் யாகம் பாதியில் நின்று விட்டது. 'என் தாத்தாவின் தந்தை யுதிஷ்டிரர் தொடங்கிய யாகம் பாதியில் சிசுபாலனின் இறப்பால் நின்று விட்டது. இப்போது நான் செய்யும் சர்ப்பயாகமும் பாதியில் நின்று விட்டது.

    என் தந்தையோ மோட்சத்திற்கு இடமின்றி தவிக்கின்றார். என் குடும்பத்து பாவ தோஷங்களை எப்படி நீக்குவது, என் தந்தையின் ஆத்மாவை எப்படி கரையேற்றுவது? என்று தவித்தான்.

    அப்போது ஸ்ரீதேவி பாகவதத்தின் மகிமையை குரு மூலம் அறிந்தான். உடனே ஜனமேஜயன் தேவிபாகவத கதையை சிரவணம் செய்தான். இதனால் அவனது முன்னோர்களின் பாவங்கள் நீங்கியது.

    சிரவணம் முடித்த பிறகு ஸ்ரீதேவி யக்ஞத்தினை முடித்தாள். உடனே 'ஜனமேஜயா, உன் வம்சத்து பாவங்கள் நீங்கி விட்டன' என்று அசரீரி குரல் எழும்பியது.

    எனவே நம் குடும்பத்தில் எத்தகைய பாவ காரியங்கள் அறிந்தோ, அறியாமலோ நம் முன்னோர்கள் செய்திருந்தாலும் ஸ்ரீதேவி பாகவதம் அவற்றைப் போக்கி விடும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

    Next Story
    ×