என் மலர்
வழிபாடு
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
- ஆண்டாள் ரெங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம்.
- பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
தமிழகத்தில் உள்ள வைணவ தலங்களில் பிரசித்தி பெற்றது ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில். ஆண்டாள் தாயார் அவதரித்த இங்கு ஆண்டுதோறும் மார்கழி மாதம் நீராட்டு உற்சவம் பகல் பத்து என்று அழைக்கப்படும் திருமொழி திருநாளும், அதனைத்தொடர்ந்து ராப்பத்து எனப்படும் திருவாய்மொழி திருநாளும், முடிவில் ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவமும் நடைபெறும்.
அதன்படி இந்தாண்டு மார்கழி மாத நீராட்டு உற்சவம் கடந்த 6-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. பச்சைப் பரப்புதல் மற்றும் காலை, இரவு வேளைகளில் ஆண்டாள் ரெங்க மன்னார் வீதி உலா, அரையர் வியாக்ஞானம், திருவாராதணம், பெரிய பெருமாள் பத்தி உலாவுதல் நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்றது. இதன் முடிவில் பகல் பத்து திருவிழா நிறைவு பெற்றது.
ராப்பத்து என்று அழைக்கப்படும் திருவாய் மொழி திருநாள் இன்று (10-ந்தேதி) தொடங்கியது. அதில் முதல் நிகழ்ச்சியாக வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபதம் என்னும் சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்றது. அதிகாலை 4.30 மணிக்கு ஆண்டாள் ரெங்க மன்னார் ஆகியோருக்கு சிறப்பு திருமஞ்சனம் விசேஷ அலங்காரம் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அர்ச்சர்கள் பாலாஜி பட்டர், ஸ்தானிகம் ரங்கராஜன் என்ற ரமேஷ், கிச்சப்பன், பிரசன்ன வெங்கடேஷ் அய்யங்கார், சுதர்சன், மணியார் அம்பி ஆகியோர் சிறப்பு பூஜைகளை நடத்தினர். இதையடுத்து பெரிய பெருமாள், ஆண்டாள் ரெங்கமன்னார் ஆகியோர் காலை 6.50 மணிக்கு பரமபத வாசல் திறக்கப்பட்டு அதனை கடந்து வந்தனர்.
அப்போது அவர்களுக்கு எதிரே வேதாந்த தேசிகர் ராமானுஜர், பெரியாழ்வார் ஆகியோர் ஒன்று சேர்ந்து நின்று மங்களாசாசனம் செய்தனர். இதையடுத்து அங்கு திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, கோபாலா என்று பக்தி கோஷமிட்டனர். அதனைத் தொடர்ந்து ஆண்டாள், ரெங்க மன்னார் ராப்பத்து மண்டபத்திற்கு சென்றனர்.
அங்கு திருவாராதணம், அரையர் வியாக்ஞானம் சேவகாலம் தீர்த்த விநியோ கம் கோஷ்டி நடைபெற்றது. அப்போது பல்லாயிரக்க ணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இத னைத் தொடர்ந்து ஆண்டாள் எண்ணைக்காப்பு உற்சவம் தொடங்கியது.
சொர்க்கவாசல் திறப்பு விழாவில் மணவாள மாமுனிகள் மடத்தின் ஜீயர் சடகோப ராமானுஜ சுவாமி கள் உட்பட பல்லாயிரக்க ணக்கானோர் கலந்து கொண்டனர். அதேபோல் சபரிமலை யாத்திரை செல்லும் அய்யப்ப பக்தர்க ளும் சொர்க்கவாசலை கடந்து சென்று வழிபட்டனர்.