என் மலர்
வழிபாடு
சூலக்கல் மாரியம்மன் கோவில் முதல் நாள் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு
- 2-ம் நாள் தேரோட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
- 3-ம் நாள் தேரோட்டம் நாளை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் தேர் திருவிழா 3 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான தேர்த்திருவிழா கடந்த 5-ம் தேதி திருத்தேர் முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து கடந்த 9-ம்தேதி வேல் புறப்பாடு மற்றும் பூச்சாட்டு விழா நடைபெற்றது. 15-ம் தேதி கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை நடைபெற்றது. 16-ந்தேதி கம்பம் நடும் நிகழ்ச்சி மற்றும் பூவோடு எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. 17-ம் தேதி யாகசாலை ஆரம்பம் நிகழ்ச்சியும், அதனைத்தொடர்ந்து கொடியேற்ற விழா நடைபெற்றது. பின்னர் மாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா நடைபெற்றது.
18-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தினசரி காலை இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் பல்வேறு வாகனங்களில் அமர்ந்து திருவீதி உலாவும், பூவோடு எடுத்துவரும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் (புதன்கிழமை) காலை 6 மணிக்கு மாவிளக்கு மற்றும் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைதொடர்ந்து அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிலையில் நேற்று காலை மாரியம்மன், விநாயகர் திருத்தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாரியம்மன் இளஞ்சிவப்பு பட்டு உடுத்தி மலர் அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். வாண வேடிக்கை, மேளதாளங்கள் முழங்க சிறப்பு பூஜைகளுடன் பூசணிக்காய், தேங்காய் உடைக்கப்பட்டு பக்தர்கள் கோஷம் முழங்க திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் புரவிபாளையம் ஜமீன் குடும்பத்தார் தேரை வடம் பிடித்து தொடங்கி வைத்தனர். முன்னால் விநாயகர் தேர் பவனி வர பின்னால் சூலக்கல் மாரியம்மன் அலங்கரிக்கப்பட்ட தேர் புறப்பட்டது. மாரியம்மன் தேர் வீதியில் உலா வரும் போது பக்தர்கள் வாழைப்பழங்களை தேர் மீது வீசி நேர்த்திக்கடன் செலுத்தினார்கள்.
இந்த தேர் திருவிழாவில் பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, கோவை, கேரள மாநிலம் உள்ளிட்ட பல பகுதியில் இருந்து திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சாமி தரிசனம் செய்தனர்.
அதன்படி முதல் நாள் தேரோட்டம் 6.30 மணிக்கு முடிந்து கிழக்கு ரத வீதியில் தேர் நிலைநிறுத்தப்பட்டது. 2-ம் நாள் தேரோட்டம் (இன்று) வெள்ளிக்கிழமை மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. 3-ம் நாள் தேரோட்டம் சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன்-விநாயகர் கோவில் செயல் அலுவலர் கந்தசாமி மற்றும் சூலக்கல் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். பொள்ளாச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா தலைமையில் வடக்கிபாளையம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.