என் மலர்
வழிபாடு
சுவாமிமலை முருகன் கோவிலில் 60 படிகளுக்கு சிறப்பு பூஜை
- பக்தர்கள் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
- 60 குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர்.
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையில் முருக பெருமானின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான முருகன்(சுவாமிநாதசாமி) கோவில் அமைந்து உள்ளது.
ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு விசுவரூப தரிசனம் நடந்தது. தொடர்ந்து திரளான பக்தர்கள் அதிகாலையிலேயே கோவிலுக்கு வருகை தந்து நீண்ட வரிசையில் நின்று வழிபட்டனர்.
அதிகாலை 4.30 மணிக்கு தனுர்மாத சிறப்பு பூஜையும், மகாதீபாராதனை, சிறப்பு வழிபாடு நடந்தது. அப்போது மூலவர் சுவாமிநாத சாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் நெய்விளக்கேற்றி பிரார்த்தனை செய்து வழிபட்டனர்.
ஆங்கில புத்தாண்டையொட்டி நேற்று முருகன் கோவிலில் 60 தமிழ் வருட தேவதைகளின் பெயரில் அமைந்துள்ள 60 திருப்படிகளுக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. 60 குத்துவிளக்குகள் வைத்து பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டனர். படி பூஜையை முன்னிட்டு சுவாமிநாதசாமி வள்ளி-தெய்வானையுடன் மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதேபோல் புத்தாண்டை முன்னிட்டு கபிஸ்தலம் பகுதிகளில் உள்ள அனைத்து கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.