search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 108 சங்காபிஷேக விழா
    X

    சிறுவாபுரி பாலசுப்ரமணிய சுவாமி திருக்கோவிலில் 108 சங்காபிஷேக விழா

    • கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது.
    • கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி அருகே சின்னம்பேடு என்று அழைக்கப்படும் சிறுவாபுரி கிராமத்தில் புகழ்பெற்ற அருள்மிகு பாலசுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இக்கோவில் உள்ளது. இந்நிலையில், இக்கோவிலில் உள்ள மூலவர், விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு கருங்கல் தரைதளம் அமைத்து, பக்தர்கள் விரைவாக தரிசனம் செய்ய எஸ்.எஸ்.கியூ லைன் அமைத்தல் உள்ளிட்ட திருப்பணிகள் ரூ.1.25 கோடி செலவில் செய்து முடிக்கப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, மண்டல அபிஷேக விழா நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இந்நிலையில், கும்பாபிஷேகம் நடைபெற்று ஆங்கில நாள் காட்டியின்படி ஒரு வருடம் நிறைவு பெற்றது. எனவே கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி இக்கோவிலில் வருடாபிஷேக விழா சிறப்பாக நடைபெற்றது. இந்நிலையில், இக்கோவிலில் மிருகசீரிஷம் நட்சத்திரத்தின்படி கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு ஆகிறது. இதை முன்னிட்டு இன்று விநாயகர், ஆதிமூலவர், அண்ணாமலையார், உண்ணாமலை அம்மன் உள்ளிட்ட பரிவார மூர்த்திகளுக்கு மகா அபிஷேகம் ஆனந்தன் குருக்கள் தலைமையில் நடைபெற்றது.

    இக்கோவில் வளாகத்தில் அருங்கோணத்தில் 108 சங்குகள் அலங்கரிக்கப்பட்டு, நவகலசம் ஸ்தாபனம் செய்யப்பட்டு 108 திரவியங்கள் மூலம் ஹோமம் வளர்க்கப்பட்டது. மதியம் மகாபூர்ணாகுதி நடந்து. பின்னர், நவக்கலச தீர்த்தங்கள், 108 சங்கு தீர்த்தங்கள் மங்கள வாத்திய முழங்க பிரகார புறப்பாடு நடைபெற்றது.

    பின்னர், மூலவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இதன் பின்னர், மூலவருக்கு புஷ்ப-ராஜா அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர், புஷ்ப அலங்காரத்தில் உற்சவர் பிரகார புறப்பாடு நடைபெற்றது. பின்னர், கோவில் வளாகத்தில் அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், திரைப்பட பாடலாசிரியரும், நடிகருமான பா.விஜய் தனது குடும்பத்துடன் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவிலின் செயல் அலுவலர் செந்தில்குமார் தலைமையில் திருக்கோவில் பணியாளர்களும், ஊழியர்களும் சிறப்பாக செய்திருந்தனர்.

    Next Story
    ×